பாகவத புராணம்

>> Thursday, September 4, 2008



அறுபதடி உயர ஆண்டெனா கொடைக்கானலை குறிபார்க்க முடியாமல் இரைச்சலை அனுப்பிக்கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்கிய டி.வியில் அரை மணி நேரம் கூட தூர்தர்ஷன் வராததால் கவலையோடு உட்கார்ந்திருந்தார் அப்பா. தம்பி வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுக்க, சுவரேறி ஆண்டெனாவை 360 டிகிரி மெதுவாக சுழற்றியபோது சிக்கியதுதான் ரூபாவாஹினி! வித்தியாசமான தமிழாக இருந்தாலும் தூர்தர்ஷனை விட துல்லியமாகவே இருந்தது. செய்தியறிக்கை முடிந்து ஏதோ ஒரு நகைக்கடை விளம்பரத்துக்கு பின் வந்ததுதான், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ?'. துள்ளிக்கொண்டு முன்னே வந்த பாட்டி சொன்னாள், 'அட, பாகவதரு!'

வெள்ளைக்குதிரை. அதன் மேல் ஒய்யாரமாக பாகவதர். மந்தகாசப் புன்னகையோடு பவனி வர, பெண்கள் எல்லாம் வெட்கப்பட்டு ஓடுவர். அங்குள்ள ஒரு பெண்ணைப் பார்த்து பாகவதர் மன்மதனாகக் கண்ணடிக்க, அந்தப் பெண் மிரண்டு ஓடுவாள்.

இது ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற காட்சி. ஆனால் உண்மையில், பாகவதரின் அந்த இமை அசைவில் இதயம் தொலைத்து, பித்துப் பிடித்து அலைந்த பெண்கள்தான் அதிகம். 'பிராணநாதா! உம்மை நேரிலே ஒரே ஒருமுறை தரிசித்துவிட்டால் போதும். மறுநொடியே தற்கொலை செய்து கொள்ளக் கூடத் தயார்' என்கிற ரீதியில் பெண்களின் கடிதங்கள் பாகவதரை மொய்த்த நாள்கள் பல.

எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் முதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், சினிமா, இசை என்று மூன்று குதிரைகளில் ராஜ பவனி வந்த பெருமை பாகவதருக்கு மட்டுமே சாத்தியமாயிற்று.

*ஒரு கொலை வழக்கு. ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையை சூன்யமாக்கிய வழக்கு. நடந்தது என்ன? பாகவதர் குற்றவாளியா? நிரபராதியா? தொலைத்த இடத்திலேயே தன் புகழைத் தேடிய பாகவருக்கு, மீண்டும் அது கிடைக்காமல் போனது ஏன்?

'பாகவதரைப் போல் வாழ்ந்தவரும் கிடையாது; அவரைப் போல் கஷ்டப்பட்டவரும் கிடையாது' கேட்டுக் கேட்டு புளித்துப் போன டயலாக். பாகவதர் படத்தை பார்த்திராதவர்கள் கூட சொல்லும் டயலாக். அப்படியென்னதான் வாழ்ந்து கெட்டார்? பாகதவரின் படத்தை விட சுவராசியமானது அவரது பர்சனல் கதைதான்.

எல்லா சூப்பர் ஸ்டார்களையும் போலவே வறுமைதான் பாகவதரையும் சினிமாவுக்கு வரவழைத்தது. வெறும் பாட்டு மட்டும் பாடிக்கொண்டிருந்தால் பைசா தேறாது என்பதால்தான் நாடகமேடைக்கு வந்தார். கிட்டப்பாவுக்கு இணையான வரவேற்பு கிடைத்ததும், சினிமாவுலகம் சிவப்பு கம்பளத்தை பாகவதர் பக்கமாய் விரித்து வைத்தது. பாட்டோ, நாடகமோ, சினிமாவோ ஒரு நாளைக்கு ஐம்பது ரூபாய் கிடைத்தால் போதும்! மூன்று தங்கைகள், இரண்டு தம்பிகள் கொண்ட பெரிய குடும்பத்தை சமாளிக்க பாகவதருக்கு பணம் தேவையாக இருந்தது. பெரிய பெரிய லட்சியமெல்லாமல் மனதில் இல்லை. லட்சியமாவது புடலாங்காயாவது?



பாகவதரை சினிமாவுலகம் கைவிடவில்லை. ஒரு துளி வியர்வை கூட சிந்தாமல் ஓராயிரம் தங்கக்காசுகள் கிடைத்தது. வெறும் பதிநான்கு படங்களில் தமிழ் சினிமாவையும் வாழ வைத்து, ஐந்து தலைமுறைக்கான சொத்தையும் பாகதவரால் சேர்த்து வைத்துக்கொள்ள முடிந்தது. பாடல் எழுதிய பாபநாசம் சிவனும், வசனம் எழுதிய இளங்கோவனும் பாகவதரை தமிழ் சினிமாவில் உச்சியிலிருந்து தரையிறங்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கொஞ்சம் பக்தி, நிறைய பாடல்கள். பாட்டைத் தவிர பாகவதர் படத்திலிருக்கும் இன்னொரு பொதுவான விஷயம் தேவதாசிகள். ஏதாவது ஒரு தாசியுடன் கண்ணியமான உறவு, கட்டிய கணவனை இப்படியா நடத்துவது என்று மனைவியை கடிந்து கொள்வது என பாகவதரின் படைப்புகள் நிச்சயம் பார்முலா படங்கள்தான். பல படங்களில் பாகவதர் திறந்த மேனியாக நிற்பதும் கூட கமர்ஷியல் கட்டாயங்களுக்காகத்தான்.

திருநீலகண்டரை தவிர்த்துவிட்டு மற்ற படங்களில் பாகவதரின் நடிப்பை எம்.ஜி.ஆரின் நடிப்புத்திறமையோடு ஒப்பிட்டு, எம்.ஜி.ஆரை மிகச்சிறந்த நடிகர் என்று சுலபமாக நிரூபித்துவிடலாம். என்னதான் சின்னப்பாவுக்கு அசாத்திய திறமைகள் இருந்தாலும், அதிர்ஷ்டக்காற்று பாகவதர் பக்கம்தான் இருந்தது. சாஸ்திரீய சங்கீதத்தை சாமானியனும் முணுமுணுக்க வைத்த பாகதவரின் சாதனையை யாராலும் மறுக்கவே முடியாது. அசுர சாதகம் செய்யும் சாஸ்தீரிய பாடகர்களையே மிரள வைக்கும் 'தீன கருணாகரனே...' பாடல் ஒரு சின்ன உதாரணம்தான்.

பவளக்கொடியில் ஆரம்பித்த பாகவதரின் ஸ்கோர், சிந்தாமணி, அம்பிகாபதிக்கு பின்னர் வேகமெடுத்து ஹரிதாஸ் மூலம் உச்சிக்குப் போனது. ஒரு சமான்ய மனிதனாய் சகல அபிலாஷைகளுக்கும் இடம் கொடுத்து, வாழ்க்கையைத் தொலைத்து கிள¨மாக்ஸில் பாகதவர் முன் கடவுளர்கள் பிரத்யட்சமாகும் படங்களைத்தான் மக்கள் மாட்டு வண்டி கட்டிக்கொண்டு டவுனுக்குப் போய், பார்த்துப் பார்த்து பரவசப்பட்டு போனார்கள்.



பாகவதரின் வீழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன்தான் காரணம் என்று சொன்னாலும் சரித்திரம் மறைத்த சம்பவங்கள் நிறைய. தங்க தாம்பாளத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாகவதருக்கு, சம்பாதித்த பணத்தை எப்படி, எங்கே முதலீடு செய்வது பத்திரமாக வைத்திருக்க தெரியவில்லை அல்லது முடியவில்லை. அந்த நாள், பராசக்தி, சந்திரலேகா என்று தமிழ் சினிமா வேறு திசையில் பயணித்துக்கொண்டிருந்த காலத்தில் மக்களின் பல்ஸ் தெரியாமல் பாட்டு கதம்பமான அதே பார்முலா படங்களை சொந்த பேனரில் சுட்டு தனது கையையும் சுட்டுக்கொண்டிருந்தார். தொலைத்த இடத்திலேயே பணத்தை தேடித் தேடி நிம்மதியைத் தொலைத்து, அடையாளத்தை தொலைத்து கடைசியில் வாழ்க்கையை தொலைத்துவிட்டவர்.

இரண்டு பந்துகள் சிக்ஸருக்கு பறந்ததும் மூன்றாவது பந்தை வெகு கவனமாக எதிர்கொள்ளும் கிரிக்கெட்டரின் மனநிலைதான் எனக்கும். 'கண்ணீரும் புன்னகையும்' என்று சந்திரபாபுவின் சரித்திரத்தை எழுதிய முகிலும், சிரிப்பு டாக்டர் என்று என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கையை எழுதிய முத்துராமனும் உதவிக்கு வந்தார்கள். பாகதவர் சம்பந்தப்பட்ட தகவல்களை தேடிக்கண்டுபிடித்து ஒரு மூட்டையாக கட்டிக் கொடுத்தனுப்பிய ஜெயபாபுவுக்கு முதல் நன்றி. சந்திப் பிழையிலிருந்து சகல பிழைகளையும் செய்து வைத்தாலும் சளைக்காமல் போராடி புரூப் பார்த்த முகிலுக்கு இரண்டாவது நன்றி. சினிமாவே பிடிக்காது என்று சொல்லிவிட்டு சிந்தாமணியில் ஆரம்பித்து சிவகவி, திருநீலகண்டர், அசோக்குமார், ஹரிதாஸ் என சிடிபிளேயரே கதியாக உட்கார்ந்திருந்தவனை அதிகயமாக பார்த்துக்கொண்டே கடைசிவரை பொறுமையிழக்காமல் இருந்த மனைவிக்கு மகத்தான நன்றி!

பெயர் : பாகவதர்

நூலாசிரியர் : ஜெ. ராம்கி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்.

விலை ரூ. 70/- பக்கங்கள் 143

புத்தகம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு

http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&itemid=381

கதை உங்களுக்காக....நன்றி சாரு

http://charuonline.com/oldarticls/kp222.html

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP