தா.கி-யின் பிணம் கூறுமே - நெடுமாறன் பதிலடி

>> Wednesday, September 3, 2008

கருணாநிதிக்கு 'விபீஷணர்' கவிதை! என்ற தலைப்பில் ஜூவியில் வந்த கட்டுரை, மற்றும் பழ.நெடுமாறன் அறிக்கை


( நன்றி: ஜூவி )


பழ. நெடுமாறன் அறிக்கை
காமராஜருக்கும், எம்.ஜி.ஆருக்கும், மூப்பனாருக்கும், நெஞ்செழியனுக்கும் துரோகம் இழைத்தவர் முதல்வர் கருணாநிதிதான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை விமர்சித்து நெடுமாறன் கட்டுரை எழுதியிருந்தார். இதற்குப் பதிலாக கவிதை மூலம் நெடுமாறனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் கருணாநிதி.

அதற்கு நெடுமாறன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த முறை தான் முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை என முதல்வர் கருணாநிதி கூறியதை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையில் எழுப்பப்பட்ட வாதங்களுக்கு எவ்வித பதிலும் கூற திராணியின்றி தனிப்பட்ட முறையில் மிகக் கீழ்த்தரமாக வசை புராணம் பாடியிருக்கிறார்.

அவர் தரத்திற்கு நானும் இறங்கி பதிலடி கொடுக்க விரும்பவில்லை. எனினும் அவர் கூறியுள்ள அப்பட்டமான பொய்களுக்குப் பதில் கூற வேண்டியது அவசியம் ஆகும்.

பெருந்தலைவர் காமராசர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பிறகு இன்று வரையிலும் அவரது நினைவை நன்றியறிதலுடன் போற்றி வருபவன் நான் என்பதைத் தமிழகம் அறியும். ஆனால் காமராசருக்கு நான் துரோகம் செய்துவிட்டதாக புனைந்து கூறியிருக்கிறார் கருணாநிதி.

1969ம் ஆண்டில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காமராசர் போட்டியிட்டபோது அவரைத் தோற்கடிக்க வரிந்து கட்டிக் கொண்டு பொய்யான பழிகளை சுமத்தியும், இது நாடாளுமன்றத் தொகுதியல்ல, இது நாடார் மன்றத் தொகுதி என்று சாதி வெறியைக் கிளப்பியும் துரோகம் செய்தவர் கருணாநிதி.

அறிஞர் அண்ணாவால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்குத் துரோகம் செய்து பதவி நாற்காலியைக் குறுக்கு வழியில் கைப்பற்றி அண்ணாவுக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.

அரியணை ஏற ஏணியாகப் பயன்பட்ட எம்.ஜி.ஆரை எட்டி உதைத்து கட்சியிலிருந்து நீக்கித் துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

1996ம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு காவிரி மைந்தனான மூப்பனாருக்குக் கிடைத்தபோது அவருக்குத் துரோகம் செய்து காவிரிப் பகைவனான தேவ கவுடா பிரதமராகத் துணை நின்றவர் கருணாநிதி. இதன் மூலம் தமிழக விவசாயிகளுக்குப் பெருந்துரோகம் செய்தவர் இவரே.

1983ம் ஆண்டு நான் தியாகப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்குப் படகில் சென்ற போது கடைசி வேளையில் கலந்து கொண்டவர் குமரி அனந்தன். நடுக்கடலில் எங்கள் படகைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் என்னோடு அவரையும் கைது செய்துக் கரைக்கு கொண்டுவந்தனர். இந்த உண்மையைத் திரித்து ஏதேதோ கூறுகிறார் கருணாநிதி.

பொய்யும் புனைசுருட்டும் அவருக்கே ஆகி வந்த கலை. வயது முதிர்ந்த இந்த காலத்திலாவது உண்மையைப் பேச அவர் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.



--------------------------------------------------------------------------------


ஜூவி கட்டுரை
இப்போதெல்லாம் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கவிதை வாள் நாள்தோறும் சுற்றிச் சுழன்று, ஏதாவது ஒரு அரசியல் தலைவரைப் பதம் பார்ப்பதில் வீரியமாக இருக்கிறது!

சில தினங்களுக்கு முன்னால் 'நாய்கள்கூடச் சிரிக்குமய்யா' என்று கருணாநிதி எழுதிய கவிதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜனைக் குறிக்கிறது என்று சொல்லப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. இப்போது லேட்டஸ்டாக, 'ஆழ்வார்கள் புராணம்' என்ற அவருடைய கவிதை, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் மீது போர்ப்பரணி பாடியிருக்கிறது.

'புதிய தசரதனின் பதவித் துறப்பு' என்ற தலைப்பில் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதினார் நெடுமாறன். அதில், ''கருணாநிதி, அடுத்தமுறை முதலமைச் சராக விரும்பவில்லை என்று இப்போது அறிவித்திருக்கிறார். இதேபோல் 1993-ம் ஆண்டு வைகோவும் அவருடைய தோழர்களும் தி.மு.க-

விலிருந்து விலக்கப்பட்ட வேளையில், 'நான் அரசியலில் இருந்தே விலகிக்கொள்கிறேன்' என்று அறிவித்தார். அதை அடுத்த வாரமே திரும்பப் பெற்றார். 2001-ல், 'இதுதான் என் கடைசித் தேர்தல்' என்றார். ஆனால், 2006-ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் நின்றார். 2008-ல், 'பிறந்தநாள் விழா வேண்டாம்' என்றார். பிறகு, தொண்டர்கள் வற்புறுத்துவதாகச் சொல்லி விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இப்போது மீண்டும் விலகப்போவதாக அறிவித்திருக் கிறார். பதவிப் பற்றைத் துறந்தோ இளைய தலைமுறைக்கு வழிவிட்டோ இப்படிக் கூறியதாகத் தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, காவிரி, முல்லை பெரியாறு, ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்னை போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் இப்படிக் கூறியதாகவும் தெரியவில்லை. ஒருவேளை முதல்வர் பதவியைத் துறந்தாலும், நிச்சயம் கட்சித் தலைவர் பதவியைத் துறக்க மாட்டார். காதோரம் ஒற்றை முடி நரைத்ததற்காக, தன் பதவியைத் துறந்து மகனுக்கு முடிசூட்டினான் தசரதன். ஆனால், புதிய தசரதனான கருணாநிதிக்குப் பதவியைத் தக்கவைத்துக்கொள்ளவும் தெரியும், போக்குக் காட்டி ஏமாற்றவும் தெரியும்'' என்று நெடுமாறன் எழுதியிருந்தார்.

ஆகஸ்ட் 26-ம் தேதி அதிகாலையில் நாளிதழில் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்ததுமே 'ஆழ்வார்கள் புராணம்' என்ற கவிதையை யாத்து அதை உடனடியாக எல்லா பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைத்தார் கருணாநிதி. அந்தக் கவிதையில்...

'காமராஜரின் விலாவில் குத்திய விபீஷண ஆழ்வார்!

கண்ணான அண்ணாவின் கழுத்தறுக்க முனைந்திட்ட சுக்ரீவன்!

குன்றனைய குமரிஅனந்தனைக் கடல் நடுவே தவிக்கவிட்டுத் தான் மட்டும் தப்பி வந்த ஆஞ்சநேயன்!'' என்றெல்லாம் கடுமையாகச் சாடியிருந்தார் கருணாநிதி. 'எட்டப்பன்' என்றும் கூறியிருந்தார் பெயரைக் குறிப் பிடாமலே!

'கவிதை வரிகள் கடுமை... மிகக் கடுமை' என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேச்சு எழுந்த நிலையில்... நாம் பழ.நெடுமாறனை சந்தித்தோம்.

''கருணாநிதிக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. தன் தகுதி, வயது எல்லாவற்றையும் மறந்து அநாகரிகமாக உளறி யிருக்கிறார். இதற்கு முன்பு டி.கே.ரங்கராஜனை 'அவாள்' என்று சாதியைச் சொல்லி அவமானப் படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவியான ஜெயலலிதாவை, 'ஊற்றிக் கொடுத்ததனால் வந்த உளறலா?' என்றார். இவரைக் குறைகூற ஆரம்பித்தால் ஏடுகள் போதாது. நான்கு முறை தி.மு.க. ஆட்சி செய்தபோது ஒளிவுமறைவாக நடைபெற்ற ஊழல்களும் அடக்குமுறைகளும் கடந்த இரண்டாண்டுகளாக வெளிப்படையாக நடக்கின்றன. தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையில் எந்தெந்த குடும்பத்தினர், எந்தெந்த அமைச்சர்கள், யார் யாருடைய உறவினர்கள் என்று சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று அந்தந்த ஊர்களில் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட அதிகமாக - கடந்த இரண்டாண்டுகளில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட மோதல் சாவுகள் (என்கவுன்ட்டர்) நடந்திருக்கின்றன. கூலியை முழுதாகக் கேட்டதற்காக ரெட்டணை மக்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் துளிகூட கவனிக்க மறந்துவிட்டு, இவருடைய இரட்டை வேடத்தை சுட்டிக்காட்டிய காரணத்துக்காக என்மீது வசைமாரி பொழிந்திருக்கிறார்'' என்ற நெடுமாறன், பேனாவை எடுத்து கிறுகிறுவென ஒரு சில வரிகளை எழுதினார். ''பேட்டியின் ஒரு அங்கமாக இதையும் வாசகர்களுக்குக் கொண்டு செல்லுங்கள்'' என்று அவர் நீட்டிய தாளில் இருந்தது இதுதான் -

'அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட

நாவலருக்குத் துரோகம் புரிந்து

பதவி நாற்காலியைப் பறித்தவர்...

ஏணியாக இருந்து ஏற்றம்பெற உதவிய

எம்.ஜி.ஆரை எட்டி உதைத்தவர்...

தில்லியைத் திருப்திப்படுத்த

ஈழத்தமிழர் முதுகில் குத்த

ஒருபோதும் தயங்காதவர்...

களங்களில் தோள்கொடுத்த தோழராம்

தா.கி-யின் பிணம் கூறுமே

இவருடைய துரோகம்!'

அதைப் படித்து முடிக்கும் வரை பொறுத்திருந்தவர், ''கருணாநிதி போலெல்லாம் தரம்தாழ்ந்து எழுத என்னால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் ஈழத்தில் ரகசிய சுற்றுப்பயணம் செய்து திரும்பியபோது, இதே கருணாநிதி 'நெடுமாறன் மேற்கொண்ட நெடும்பயணம்' என்று தலைப்பிட்டு 'முரசொலி'யில் முதல் பக்கம் முழுவதும் என்னைப் புகழ்ந்திருந்தார். அதை நினைத்து இந்த வசைமொழிகளை மறந்துவிடுகிறேன்''என்றார்.

நெடுமாறனோடு நெருங்கிப் பழகியவரும் ம.தி.மு.க. முன்னணி நிர்வாகியுமான கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்.

''நெடுமாறனோடு 35 ஆண்டுகள் நெருங்கிபழகியிருக்கிறேன். கருணாநிதி அந்தக் கவிதையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் அனைத்துமே தவறானவை. காமராஜர், காங்கிரஸிலிருந்து பிரிந்து பழைய காங்கிரஸை நடத்தி வந்த நேரத்தில் அவரோடு இருந்தார் நெடுமாறன். அந்த சமயத்தில் 'நெடுமாறனுக்கு முகவரி கிடையாது' என்று மதுரை தி.மு.க-வினர் சொல்லிவந்தனர். மேலூர் பொதுக்கூட்டத்தில் இதற்கு பதிலளித்த காமராஜர், 'நாளை அமையவிருக்கும் பழைய காங்கிரஸ் அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக நெடுமாறன் இருப்பார். இதுதான் நெடுமாறனின் முகவரி' என்று பதிலடி கொடுத்தார். அப்போது கருணாநிதி அரசு போட்ட வழக்குகளுக்கு எல்லாம் அஞ்சாமல் நெடுமாறன் சிறைச் சென்றார். அதற்காக 'மாவீரன்' பட்டத்தை அவருக்கு அளித்தார் காமராஜர். இதுபோல் யாரையும் காமராஜர் விளித்தது கிடையாது.

அப்படிப்பட்ட நெடுமாறன்,காமராஜரின் முதுகில் குத்தியதாக எப்படி தன் கவிதையில் கருணாநிதி குறிப்பிடுகிறார் என்றுதான் புரியவில்லை. பழைய காங்கிரஸ§ம் இந்திரா காங்கிரஸ§ம் இணையும்போது, மூப்பனார் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். நெடுமாறன் பழைய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இணைப்புக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக நெடுமாறன்தான் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் மூலம் மூப்பனார் தலைவர் ஆன பிறகு, முப்பனாருக்காக பணியாற்றினார். அப்படிப்பட்டவரைப் போய் மூப்பனாரிடம் மோசடி செய்துவிட்டு எட்டப்பனாகமாறியதாக கவிதையில் குறிப்பிடுகிறார். இலங்கையில் 83-ம் ஆண்டு தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, இலங்கைக்குத் தியாகப் பயணம் மேற்கொள்ளும் போராட்டத்தை நடத்தினார் நெடுமாறன். அப்போது குமரிஅனந்தன் கா.கா.தே.கா என்ற கட்சியின் தலைவராக இருந்தார். ஈழத் தமிழர்களுக்காக ராமேஸ்வரத்தில் இருந்து படகில் நெடுமாறன் நூற்றுக்கணக்கானவர்களோடு கிளம்பிப் போனார். கடைசிநேரத்தில் வந்து படகில் ஏறிக்கொண்டார் குமரிஅனந்தன். படகு கொஞ்சம் தூரம் கடலில் போன பிறகு போலீஸ், நெடுமாறன் தலைமையில் போன குமரிஅனந்தன் உட்பட எல்லோரையும் கைது செய்தது. அப்படியிருக்கும்போது, எப்படி குமரிஅனந்தனை மட்டும் கடல் நடுவே தவிக்கவிட்டு வந்தார் என்று கருணாநிதி சொல்கிறாரோ..? முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர், அந்தப் பதவிக்குத் தகுந்த நிதானத்தோடும், பொறுமையோடும், வாய்மையோடும் பேசவேண்டும், எழுத வேண்டும்! பண்பாளரான நெடுமாறனைப்பற்றி அபாண்டமாக கவிதை எழுதியதன் மூலம் தன்னையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி!'' என்றார் ராதாகிருஷ்ணன் காட்டமாக

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP