`நான் தமிழன்'

>> Sunday, December 28, 2008


`நான் தமிழன்' சாதிகளைப் பற்றியது அல்ல! நம் முன்னோர்களின் கலாசாரங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் பற்றி அடுத்த தலைமுறைகள் தெரிந்துகொள்வதற்கான தேடல். அவர்களின் வீரத்தையும் உழைப்பையும் ஒழுக்கத்தையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்தும் ஒரு வாய்ப்பு. ஒரு உண்மையான வரலாற்றை மறந்து விடாமலும் மறக்கடிக்கப்படாமலும் காக்க வைக்கும் முயற்சி.

இந்திய வரலாற்றிலேயே இல்லாத அடக்கு முறை அது. உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும். அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது. செருப்புப் போடக் கூடாது. தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது. மாடி வைத்து வீடு கட்டக் கூடாது. பசுக்களை வளர்க்கலாம். ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக்கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்கவேண்டும்.

இப்படி நாளுக்கு நாள் அவர்கள் மீதான அடக்குமுறைகள் அதிகமாகிக்கொண்டே போனதன் விளைவு? பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட அந்த சமூகம் வீறுகொண்டு எழுந்தது. தங்களை அடக்கியவர்களையும் ஒடுக்கி வைத்திருந்தவர்களையும் எதிர்த்து அவர்கள் போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது. வரலாறு காணாத அந்தப் புரட்சியை செய்தவர்கள் நாடார் சமூக மக்கள்.

திருநெல்வேலி, இராமநாதபுரத்து மண்ணின் மைந்தர்கள் இவர்கள். மதுரை, கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை என்று அவர்கள் பரந்து கிடக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கிறிஸ்துவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடார்களே.

சான்றார், சான்றோர், நாடாள்வார் என்றழைக்கப்படும் நாடார்களிடையே கற்றறிந்தோரும், போர் வீரர்களும், வர்த்தகரும், பதனீர் இறக்குவோரும் இருந்தனர்.

மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

நாயக்கர்களின் படையெடுப்பால் அதிக இன்னல்களுக்கு ஆளான நாடார்கள், தங்கள் பூர்வீக பூமிகளான சிவகாசி, கமுதி, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களைவிட்டு வெளியேறி திருச்செந்தூர் போன்ற வறண்ட பகுதிகளுக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. அங்கு பனை மரங்களிலிருந்து பதனீர் இறக்கி வாழ்க்கை நடத்த வேண்டிய நிலை.
பதனீர் இறக்கி வாழ்ந்த காலம் இவர்களின் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது. எனினும் பனைமரம் நாடார்களின் புனித மரமாக எண்ணப்படுகிறது. பனைமரத்தை நுனி முதல் வேர் வரை பயனுள்ளதாக்கிக் காட்டியவர்கள்.

தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

தங்களை உயர்ந்த எண்ணம் உள்ளவர்களாக நாடார்கள் போற்றிக் கொண்டாலும் கோயில்களுக்குள் சென்று சாமி கும்பிட உரிமை, அன்று மறுக்கப்பட்டது. அடக்குமுறை மண்டிய இந்த இருண்ட காலத்தில்தான் நாடார்களிடம் இந்த சமூகக் கொடுங்கோன்மையை எதிர்க்கும் எண்ணம் உதயமாயிற்று. சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஆனால் அங்கேயும் மேலாடை மறுக்கப்பட்டது கண்டு மக்கள் கொதித்து எழுந்தனர். அதனால், 1820_ல் அது சமூக விடுதலைக்கான போராட்டமாக வெடித்தது.

பெண்களை மேலாடை அணிய வைத்து பொது இடங்களில் நடமாடச் செய்தனர்.இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான நாயர்கள், 1882 மே மாதம் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் ஆண்கள் கட்டி வைத்து அடிக்கப்பட்டனர். கொலையும் செய்யப்பட்டனர். சம்பளம் இல்லாமல் வேலை செய்ய மறுத்த ஆண்களை கொடுமைப்படுத்தினர். கோயில்களையும் பள்ளிகளையும் தீயிட்டனர். நெய்யாற்றின் கரை, எரணியல், பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழும் பல இடங்களில் சிறுசிறு கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இதுபோதாது என்று, திருவாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815_1829) ``நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது'' என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனம்தான் நாடார் குலமக்களின் கோபத்தீயை வானளாவில் வளர்த்துவிட்டது. இனியும் பொறுக்க முடியாது என்று நாடார் சமூக மக்கள் வெகுண்டு எழுந்தார்கள். எதிரிகளை நோக்கிப் புறப்பட்டார்கள்..

(அது அடுத்த வாரம்)
படங்கள் : ஆர்.சண்முகம்,
அரண்மனை சுப்பு

`உழைத்தால் உயரலாம்' என்பதற்கு முன் உதாரணம் நாடார் சமூகம்தான். நாடார் மக்களிடையே பெரும் சாதனை படைத்தவர்கள் மிகப் பலர்.

அய்யா வைகுண்டசுவாமி: எளிய நாடார் குடும்பத்தில் முத்துக்குட்டி என்ற பெயரில் பிறந்தவர். திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தவர். நாடார் உள்ளிட்ட சமூக மக்கள் இடுப்புக்குமேல் ஆடை உடுத்தக் கூடாது என்ற அடக்குமுறைக்கு எதிராக எல்லோரையும் தலைப்பாகை கட்ட வைத்து சாதி வெறியை எதிர்த்துப் போராடியவர்.

மார்ஷல் நேசமணி: குமரித் தந்தை, குமரி மாவட்டத்தின் சிற்பி. 1956ல் நாஞ்சில் நாட்டை கேரளாவோடு இணைக்க வேண்டும் என்று முயற்சித்த போது `நாங்கள் தமிழர்கள். இந்த மண்ணின் மைந்தர்கள். தமிழ் மரபுக்கு சொந்தக்காரர்கள்' என்று மார் தட்டியதோடு, தமிழ் மரபு சீர் குலைந்துவிடக் கூடாது என்று போராடி நாஞ்சில் நாட்டைத் தமிழகத்தோடு இணைத்த தீரர்.

காமராஜர்: தமிழ் இனத்தில் ஒரு சாதாரண நாடார் குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் `கிங்மேக்கரான' மாமனிதர்; பச்சைத் தமிழர். அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் ஏழைகளுக்கு `கல்விக்கண்' திறக்கப்பட்டது. சத்துணவு கிடைத்தது. சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர். எல்லா சமூகத்தாருக்காகவும் உழைத்த கர்ம வீரர். `நாம் பெற்ற செல்வம்' என்று ஒவ்வொரு நாடாரையும் பெருமை கொள்ளச் செய்தவர். நாடார் இனத்துக்கே பெருமை சேர்த்தவர்.

கே.டி.கோசல்ராம்: பாலைவனம் போல் வறண்டு கிடந்த பூமி. கால்நடைகளுக்குக் கூட தண்ணீர் இல்லை. இருண்ட வாழ்வோடு மக்கள் சுருண்டு வாழத் தொடங்கிய போது மழை மேகமாய் வந்து, மணிமுத்தாறு அணையை, தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்து வசூலித்து கட்ட வைத்த கடமை வீரர். சுதந்திரப் போராட்ட தியாகி.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்:மற்ற இனத்தவருக்கு இருப்பது போல் நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர். பேருந்துகளில் காலி இருக்கைகள் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர் அமரக் கூடாது என்று இருந்த நிலையை உடைத்தெறிந்து அவர்களை சரிசமமாக உட்கார வைத்தவர். சென்னையில் உள்ள பாண்டிபஜார் இவரது பெயரில் உருவானதே.

(பட்டியல் தொடரும்)

Read more...

சின்னகுத்தூசி - பெரிய கோணூசி

>> Monday, December 22, 2008

முரசொலி கட்டுரை மற்றும் தினமணி கட்டுரை இந்த பதிவில்...


முரசொலி கட்டுரை
‘கல்கி’ போன்ற பார்ப்பன ஏடுகளுக்கு வாரம் தவறாது முதல்வர் கலைஞரை கேலி செய்து, கண்டித்து, தாக்கி எழுதாவிட்டால் பொழுதுபோகாது. ஜென்மம் சாபல்யம் அடையாது.

கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று அலுக்காமல் சலிக்காமல்
கை சளைக்காமல் எழுதுவார்கள்.

சரி; அப்படியானால் வேறு யார் ஆட்சி வந்தால்- யார் முதல்வரானால் எல்லாம் சரியாகிவிடும்? நல்லாட்சி மலர்ந்து விடும் என்று கேள்வியெழுப்பினால்

- ஜி.கே. வாசன்

- ப. சிதம்பரம்

- ஆர். நல்லக்கண்ணு

- என். வரதராஜன்

- தொல். திருமாவளவன்

- டாக்டர் ராமதாஸ்

- வைகோ

ஆகியோரது கட்சிகள் - ஆட்சிக்கு வந்தால் இவர்கள் முதல்வர் ஆனால் நல்லாட்சி மலரும் - எல்லாம் சரியாகிவிடும் - என்று ஒருபோதும் - மறந்தும்கூட எழுதிவிடமாட்டார்கள்.

ஜெயலலிதாதான் அவர்களது இஷ்ட தெய்வம்; ஜெயலலிதா முதல்வராகிவிட்டால் - 1991 - 1996 போல 2001 - 2006 போல ஒரு ‘நல்லாட்சி’(!) மலர்ந்து விடும் - எல்லாமே சரியாகிவிடும் என்றுதான் நினைப்பார்கள்.

ஜெயலலிதா மீண்டும் முதல்வராகிவிட வேண்டும் என்பதற்காகவே - கலைஞர் சரியில்லை; அவரது ஆட்சி சரியில்லை என்று குறை கூறியபடியே இருப்பார்கள்; குற்றங் கண்டுபிடித்தபடியே இருப்பார்கள்!

இதோ இந்த வாரம் ஞாயிறன்று கடைகளுக்கு வந்த ‘கல்கி’யிலிருந்து ஒரு கேள்வி - பதில்:

கேள்வி :- ‘மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்த பிராமணர்கள் பூணூல் அணியக் கூடாது. பொட்டு வைக்கக்கூடாது’ என கருணாநிதி கூறியிருப்பது?

இது கேள்வி.

இந்தக் கேள்விக்கு ‘கல்கி’ அளித்துள்ள பதிலைப் பாருங்கள்:-

"நமது அரசியல் சாசனத்தை மதிப்பவராகில் அவ்வாறு கூறும் உரிமையே அவருக்குக் கிடையாது!

இது ஒருபுறமிருக்க - புறச்சின்னங்கள் - அடையாளங்கள் எல்லா ஜாதியினருக்கும் உண்டு. பிராமணர்களை மட்டுமே குறி வைப்பது கருணாநிதி போன்றோரின் பொழுதுபோக்கு - அரசியல் ஆயுதம்.

புறச்சின்னங்கள் களையப்படுவதாலேயே சமத்துவ உணர்வு ஏற்படும் என்கிற அனுமானமும் அபத்தமானது" - என்று கல்கி - வியாக்யானம் செய்துள்ளது.

‘கல்கி’யின் இந்த வெண்டைக்காயால் விளக்கெண்ணையில் தோய்த்து எழுதப்பட்ட இந்த வியாக்யானம் எவ்வளவு அபத்தமானது என்பதை விளக்க - வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடி அலையவேண்டிய அவசியமில்லை.

கல்கியின் அபிமான மதகுரு சுயசாதித் தலைவர் - ‘கல்கி’ இன்னமும் வாரா வாரம் தவறாது ‘அருள்வாக்கு’ என்ற பெயரில் ஒரு பக்கக் கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டேயிருக்கிறதே; ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகளின் உபதேசங்களை - அந்த சங்கராச்சாரியாரே - அவாள் பாஷையில் சொல்வதானால் ‘மகாப் பெரியவாள்’ - அவரது கட்டுரைகளின் தொகுப்பான - ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகத்திலேயே -

பிராமண ஜாதி பிராமண ஜாதியாகவே நீடித்து - மற்ற ஜாதியினருக்கெல்லாம் வழிகாட்டும் ஜாதியாக நீடிக்க - பிராமண ஜாதியின் ஆதிக்கத்தில் மற்ற ஜாதியினர் எல்லாம் அடங்கி - ஒடுங்கி அடிமைகளாக தொடர்ந்து அதல பாதாளத்திலே அமுந்திக்கிடக்க பிராமணன் என்ன செய்யவேண்டும் - என்ன செய்யத் தவறிவிட்டான் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.

மகாப் பெரியவாள் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பாதுகாவலர்; பிராமணன் பிராமணனாகவே - உயர் சாதிக்காரனாகவே நீடிக்கவேண்டும்.

100க்கு 97 சதவீதத்தினரான பார்ப்பனரல்லாத சமுதாயம் அப்படியே சூத்திரர்களாகவே நீடிக்கவேண்டும்.

பிராமண ஜாதியின் மேலாதிக்கம் பட்டொளி வீசிப் பறந்த காலமே ‘இந்து’க்களின் பொற்காலம்! என்பதை நிலைநாட்ட தமது வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவர்!

1. அவர் - உச்சிக்குடுமியும் பூணூலும் - பஞ்சக்கச்சமும் வேதபாராயணமும் நெற்றிச் சின்னங்களும் பிராமணனிடம் இருந்தபோது பிராமண ஆதிக்கம் மேலோங்கி நின்றது.

2. இப்போது பிராமணன் அவைகளை கைவிட்டு விட்டதால்தான், மற்ற ஜாதியினர் அவனை முன்பு போல மதிப்பதில்லை

- என்று ஆதங்கத்தோடும் - அழுத்தம் திருத்தமாகவும் ஓங்கியடித்துக் கூறியிருக்கிறார். அவரது - (தெய்வத்தின்) குரல் - முதல் பாகத்தில் 186ம் பக்கத்தில் அவர் அளித்துள்ள அருள்வாக்கை அப்படியே வரி பிறழாமல் கீழே தருகிறோம்.

‘ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாகியிருப்பதற்கு யார் காரணம்? ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?’ என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ணதர்மத்தைப் பற்றி தப்பான அபிப்பிராயம் உண்டாகியிருப்பதற்குப் பிராம்மணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச ஷேமமும், லோக ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைந்து போனதற்கு பிராம்மணன்தான் பொறுப்பாளி.

பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மானுஷ்டானத்தையும் விட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமத்தை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குரிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான்.

கிராப் வைத்துக் கொண்டான், ஃபுல்ஸூட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப் படிப்பை விட்டு வெள்ளைக்காரனின் லௌகிகப் படிப்பில் போய் விழுந்தான். அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் ‘காபி’ அடித்தான்.

வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன் வரை ரட்சித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும் புதிய மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்துவிட்டான்.

சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது; இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோகnக்ஷமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில் இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும், மரியாதையும் காட்டி வந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன் மாதிரியாக (நஒயஅயீடந, பரனைந. அடினநட) வைத்துக் கொண்டார்கள்.

இப்போது தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தைவிட்டு, பட்டணத்துக்கு இவன் வந்து, இங்கிலீஷ்காரன் தந்த படிப்பு, அவன் கொடுக்கிற உத்தியோகம், அவனுடைய வாழ்க்கை முறை இதை எல்லாம் எடுத்துக் கொண்டு, இதனால் தானே ஏதோ ரொம்பவும் நாகரிகத்தில் உயர்ந்து விட்டதுபோல் ‘தாட் பூட்’ என்று பண்ணியதை மற்ற ஜாதியினர் பார்த்தார்கள். இதுவரை நல்லதற்கெல்லாம் இவனை முன்னுதாரணமாக வைத்துக் கொண்டிருந்த அவர்கள் இப்போது ஒழுங்கு தப்பிப் போவதிலும் இவனையே பின்பற்ற ஆரம்பித்தார்கள். தாங்கள் பாட்டுக்குத் திருப்தியோடு செய்து வந்த தொழிலை விட்டுவிட்டு, கிராமத்தையும் விட்டு, நகரவாசம் (வடிறn டகைந), இங்கிலீஷ் படிப்பு, வெள்ளைக்கார அரசாங்க உத்தியோகம் இவற்றுக்கு மற்றவர்களும் ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.

பிராம்மணனே புத்தியால் ஆகிற காரியங்களை ஆயிரம் பதினாயிரம் வருஷங்களாகச் செய்து வந்திருக்கிறான் அல்லவா? ஆதியிலெல்லாம் இவனுடைய புத்தி கொஞ்சம் கூடத் தன்னலனுக்குப் பிரயோஜனமாகாமல் சமூக nக்ஷமத்துக்காகவே அர்ப்பணிக்கப்பட்டு வந்தது. இந்தத் தியாக விசேத்தாலேயே அது பிரகாசமாக சாணை தீட்டிய கத்தி மாதிரி கூர்மையாக இருந்தது. இப்போது இவனுக்கு சமூக nக்ஷம நோக்கம் போய், தன்னலமான லௌகிக ஆசைகள் எல்லாம் வந்தபின் அந்த புத்திப் பிரகாசம் மழுங்க வேண்டியதுதான். இவனுக்கென்று ஏற்பட்ட கடமையைச் செய்யவே முன்பு இவனுக்கு புத்தி வன்மையும் பகவத் பிரசாதமாகக் கிடைத்திருந்தது. கடமையை விட்டபின், அந்த புத்திக்கூர்மை மழுங்க வேண்டியதுதான்.

ஆனாலும் - சைக்கிளில் காலால் பெடல் பண்ணுவதை நிறுத்திய பிற்பாடுகூட, ஏற்கெனவே உந்தின வேகத்தின் சேஷத்தால், கொஞ்சம் தூரம் அது பெடல் பண்ணாமலே ஓடுகிறது அல்லவா? அந்த மாதிரி, பிராம்மணன் ஆத்மிக வித்தைகளைவிட்டு லௌகிக வித்தைகளில் போய் விழுந்த பின்னும், ஏற்கெனவே தலைமுறை தலைமுறையாக இவனுடைய பூர்விகர்கள் பெடல் பண்ணியிருந்த பலம் இவனுக்குக் கொஞ்சம் மிஞ்சியிருந்தது. இவனாகப் பெடல் பண்ணா விட்டாலும் அவர்கள் சேமித்து வைத்த புத்திப் பிரகாசம் இவனுக்குள் இன்னமும் பாரம்பரியம்மாகக் கொஞ்சம் வந்தது. இந்த மூளைப் பலத்தினால்தான் இங்கிலீஸ்காரனின் படிப்பு முறையில் ஆச்சரியப்படும்படியாகத் தேர்ச்சி பெற்றான். அவர்களுடைய உத்தியோகம், சட்டம், தொழில் முறைகள் ஆகியவற்றை நுணுக்கமாகத் தெரிந்து கொண்டு இவற்றில் அவர்களுக்கே தெரியாத தந்திரங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிற அளவுக்குச் சதுரனாகிவிட்டான் - என்பது மகாப் பெரியவாளின் அருள்வாக்கு "ஹிந்து சமூகம் பாழானதிற்கு பிராம்மணன்தான் காரணம் என்பது என் தீர்மானமான அபிப்பிராயம்" - என்கிறார் அவர். ஆனால் - அவரது சீடகோடியான ‘கல்கி’யோ - பிராமணன் அதைக் கைவிடவேண்டும், இதைக் கைவிடவேண்டும் என்று கருணாநிதி சொல்வது அபத்தம் என்று புலம்புகிறது!

பிராமணன் பிராமணனாக இருக்கத் தகுதியான உச்சிக்குடுமி - பூணூல் - பஞ்சக் கச்சம் ஆகியவற்றை அவன் கைவிட்டதுதான் பிராமண ஜாதி மதிப்பிழந்து போனதற்குக் காரணம் என்று மகாப் பெரியவாள் சொன்னால் அது தெய்வத்தின் குரல்.

சமத்துவம் ஏற்பட - பிராமணர்கள் பூணூல் அணியக்கூடாது; நெற்றியில் பொட்டு வைக்கக்கூடாது என்று தலைவர் கலைஞர் ஏன் கருதுகிறார்?

மகாப் பெரியவாளின் தெய்வத்தின் குரலை ஊன்றிப் படித்து உண்மையைத் தெரிந்து கொண்டதால்தான் கூறுகிறார்.

ஜாதிகள் நீடிக்கவேண்டும்; பிராமணன் உயர்ஜாதிக்காரனாகவே ஆதிக்கம் செலுத்தவேண்டும். சமத்துவ சமூகம் - ஜாதி பேதமற்ற சமுதாயம் அமையாமல் தடுக்க அவன் பூணூல் அணியவேண்டும் - உச்சிக்குடுமி வைத்துக் கொள்ளவேண்டும் - நெற்றிப் பொட்டு இட்டுக் கொள்ளவேண்டும் - என்று - சமத்துவத்துக்கு எதிராக மகாப் பெரியவாள் குரல் கொடுத்தால் அது அருள்வாக்கு தெய்வத்தின் குரல்.

பிராமண ஜாதி என்று ஒன்று இருக்கும் வரையில் - அவன் பூணூல் அணிவதை நிறுத்தாத வரையில் - பொட்டு வைத்துக் கொள்வதைக் கைவிடாத வரையில் சமத்துவம் ஏற்பட இவையெல்லாம் தடையாகவே இருக்கும் என்று கலைஞர் சொன்னால் அது அபத்தம்!

அருள்வாக்கு என்பதற்கும் அபத்தம் என்பதற்கும் அவாளின் அகராதியில் அர்த்தமே வேறுதான்!

- சின்னகுத்தூசி
( நன்றி: முரசொலி )





--------------------------------------------------------------------------------


தினமணி கட்டுரை

அண்மையில் முன்அனுபவமே இல்லாத தகுதியற்ற இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசைத் தொகுப்பினை மத்திய அமைச்சர் ஆ. ராசா ஒதுக்கீடு செய்ததில் ஏறத்தாழ ரூ. 60,000 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது குறித்து நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பணத்தைக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் எத்தனையோ அரசு இலவச மருத்துவமனைகளைத் தோற்றுவித்திருக்கலாம்.

பேறுகாலப் பெண்கள் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல், தரையில் கோரைப் பாயில் ஈனுவதும், வரிசையில் நிற்கும் மற்ற பெண்களுக்கு அந்தக் கோரைப் பாயை வழங்குவதற்காக, மறுநாளே அந்தப் பச்சை மண்ணை துணியில் சுற்றிக்கொண்டு வெளியேறுமாறு அரசு மருத்துவமனைகளில் கட்டாயப்படுத்தப்படுவதும், இத்தகைய பெண்களில் குறிப்பிட்ட அளவினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே என்பதும், ஓய்வெடுப்பதற்கே அப்பல்லோ மருத்துவமனைக்கு அரசுச் செலவில் செல்லும் முதல்வர் கருணாநிதிக்குத் தெரியாது!

இந்த அறுபதாயிரம் கோடியை வைத்துக் கொண்டு ஒவ்வோர் ஒன்றியத்திலும் ஓர் "அரசு அப்பல்லோவையே' தோற்றுவிக்கலாம்!

ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசி என்பதையே மாற்றி ஒவ்வொரு கிலோ அரிசியும் இலவசம் என்று அறிவிக்கலாம்! ரூ. 58 விலையுள்ள நான்கு நாள்களுக்கும் கூடப் போகாத மளிகைச் சாமான் பொட்டலத்தை எட்டு ரூபாய் சலுகையில் ரூ. 50-க்கு விற்பதற்குப் பதிலாக, ரூ. 1,000 மதிப்புள்ள மளிகைச் சாமான் பொட்டலத்தை, நாற்பது விழுக்காடு ஏழைகளுக்கு, அவர்களின் தேவையை ஓரளவு நிறைவு செய்யும் வண்ணம், முற்றிலும் இலவசமாகவே வழங்கலாம் அல்லது அமைச்சர் ஆ. ராசா "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள முற்பட்டதன்' பயன் எந்த அளவினதாயினும், அதை ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட வகுப்பினனுக்கும் தலைக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் பங்கிட்டுக் கொடுத்திருந்தால், அவர்களின் வயிற்றுப்பாட்டுக்கு இரண்டு மாதத்திற்காவது வழி பிறந்திருக்கும்!

அலைவரிசைக் கற்றையினை "முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவதற்கு'

இதென்ன கோயில் பிரசாதமா?

அதை வாங்கிய இருவரும் மறுநாளே பல்லாயிரம் கோடி பார்த்து விட்டார்கள் என்றால், அதற்கு பின்னணியில் ஒரு மாபெரும் ஊழல் நடந்திருக்க வேண்டும் என்று மக்களால் உய்த்துணர முடியாதா?

கற்பழிப்பவன் சாட்சி வைத்துக் கொண்டா கற்பழிக்கிறான்? ஆனால் கற்பழிப்புகள் கண்டுபிடிக்கப்படாமலா போய்விடுகின்றன? லஞ்ச ஊழலும் அத்தகையதுதான்!

"முதலில் வந்தவனுக்கு முதலில் வழங்குவது' முறையற்றது. ஆகவே போட்டிகள் மூலம் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் அமைய வேண்டும் என்று தெளிவாக உயர் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகும், பழைய முறையே பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி தாங்கிச் சொல்வதில் என்ன பொருளிருக்க முடியும்?

ஆ. ராசாவுக்கு முன்பிருந்த தயாநிதிமாறன் பின்பற்றிய முறையைத்தான் இவரும் பின்பற்றினார் என்று முதல்வர் கருணாநிதி சொல்கிறார். தயாநிதிமாறன் கருணாநிதியின் பேரன்தானே? அவரென்ன கரம்சந்த் மோகன்தாஸ் காந்தியா?

அவருக்கு முன்பும் இதே முறைதான் பின்பற்றப்பட்டதாம்? ஒரேயடியாக வெள்ளைக்காரன் இந்தியாவை ஆண்டபோதே இந்தமுறைதான் பின்பற்றப்பட்டது என்று கருணாநிதி சொல்லியிருந்தால், சிரிப்பவர்கள் வாய்விட்டுச் சிரிக்க வசதியாக இருந்திருக்குமே!

பாரதீய ஜனதா அருண்சௌரியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் கருணாநிதி. அப்படி ஒருவேளை அருண்சௌரி பிழை செய்திருந்தால் அதை ஏதுக்களோடு எடுத்துக்காட்டி, அதே பிழையை நாங்கள் செய்யாததால், பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய் என்று மார்தட்டி இருந்தால் அது பெருமை!

அருண்சௌரி காலத்தில் இந்த அலைவரிசைத் தொகுப்பின் பயனாளிகள் வெறும் முப்பத்தைந்து லட்சம் பேர்; இன்று அந்தப் பயனாளிகள் முப்பந்தைந்து கோடிப் பேர்; ஆண்டுக்கு ஒரு கோடிப் பேர் வேறு பெருகுகின்றனர். இதிலென்ன முன்னோர் முறை?

பயனாளிகளின் எண்ணிக்கை நூறு மடங்கு கூடியிருக்கும்போது, அரசின் வருவாயும் அதற்குத் தகக் கூட வேண்டும் என்பது எந்தக் குறைந்த அறிவுள்ளவனுக்கும் புலப்படுமே! பகுத்தறிவு பேசும் முதலமைச்சருக்குப் புலப்படாதா?

இரண்டு நாள்களுக்கு முன்னர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுஞ்சாலையில், தொடர்வண்டி கடந்து செல்வதற்காக, ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் நான் அங்கு சற்று நேரம் நிற்க வேண்டியதாயிருந்தது.

இரண்டு பெண்கள் பனங்கிழங்குக் கட்டுகளோடு ஓடிவந்தார்கள். ஒருத்தி சிறுபெண், வெளிறிய பாவாடை, சட்டை. எண்ணெய் அறியாத சிக்குப் பிடித்த தலைமுடி. அவன் பின்னால் இன்னொருத்தி ஓடி வந்தாள். அவள் சற்றே பெரிய பெண். ஆனால் அதே ஏழ்மைக் கோலம்!

வேகமாக முந்தி வந்த சிறியவள் பனங்கிழங்குக் கட்டை முதலில் வண்டியில் நீட்டினாள். " என்ன விலை? என்று கேட்டேன். "கட்டு அஞ்சு ரூபாய்' என்றாள். அதற்குள் இன்னொரு பெண்ணும் மூச்சிறைக்க ஓடி வந்து. "ஐயா அதைவிடப் பெரிய கிழங்கு இதை வாங்கிக்கங்க' என்றாள்.

"முதலில் வந்தவளுக்கே முதல் உரிமை' என்னும் ஆ. ராசாவின் கொள்கைப்படி' "முதலில் அவள்தானே வந்தாள், அவளிடமே வாங்கிக் கொள்கிறேன்' என்றேன்.

"அவ வச்சிருக்குற கிழங்கு சூம்பிப் போனது; என் கிழங்கு நல்லா விளைந்த கிழங்கு; கிழங்கைப் பார்த்து வாங்க மாட்டீங்களா?

பிறகுதான் கிழங்குகளின் தரவேறுபாடு தெரிந்தது. "இரண்டு பேரும் ஒரே கிராமமா? என்று கேட்டேன்." அவ எனக்குச் சின்னம்மா மகள்தான்' என்று சொன்னாள். இரண்டு பேருமே தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்றும், இரண்டு பேரும் ஐந்து வகுப்பு வரை படித்திருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.

"அவ உனக்குச் சொந்தந்தானே! அவளோட ஏன் போட்டி போடுறாய்?

"வியாபாரமின்னு வந்திட்டா, சொந்தமெல்லாம் பார்க்க முடியுமா? அவ வீட்டு உலை வேற; என் வீட்டு உலை வேற;

"முதலில் வந்தவளுக்கு முதல் உரிமை' என்ற ஆ. ராசாவின் கொள்கையைப் பின்பற்றப்போய், வாங்கிய சவுக்கடி போதும் என்று முடிவுக்கு வந்த நான், "உன்னுடைய கிழங்கு கட்டு என்ன விலை?' என்று கேட்டேன்.

"இருபத்தைஞ்சு ரூபாய்' என்றாள்.

"அவள் ஐந்து ரூபாய்' என்கிறாள். நீ "இருபத்தைந்து ரூபாய்' என்கிறாயே என்றேன்.

""அவ அஞ்சு கிழங்கைக் கட்டி வச்சுக்கினு, அஞ்சு ரூபாய்ங்கறா; எங் கட்டிலே இருபத்தைந்து கிழங்கு இருக்கு; கிழங்கு கூடுதலா இருந்தா, ரூபாயும் கூடுதலா இருக்குமிங்கிறதுகூட உங்களுக்குத் தெரியாதா ஐயா? என்று பெரிய பெண் கேட்டாள்.

இரண்டாவது சவுக்கடி இன்னும் பலமாக விழுந்ததை உணர்ந்தேன்; மிரண்டு போனேன்!

இருபத்தைந்து ரூபாயைக் கொடுத்து அந்தப் பெரிய கட்டை வாங்கிக் கொண்டு, "பேசாமல் ஆ. ராசாவுக்குப் பதிலாக அதே சமூகத்தைச் சேர்ந்த உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொல்ல, என்ன சொல்கிறேன் என்று புரியாவிட்டாலும் "உன்னை மந்திரியாக்கி இருக்கலாம்' என்று நான் சொன்னதைக் கேட்டு அந்தப் பெண் வெட்கப்பட, ரயில்வே கதவுகள் திறந்து விட்டபடியால் நான் புறப்பட்டு விட்டேன்.

சிறிய கட்டுக்கும், பெரிய கட்டுக்கும் ஒரே விலை இருக்க முடியாது என்று பனங்கிழங்கு விற்கும் எளிய பெண்ணுக்குத் தெரிந்த உண்மை, மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்குத் தெரியா விட்டால் குற்றமில்லை. தமிழர்களின் தலைவர் என்று இடையிடையே அறிவிப்பு வெளியிட்டுக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாவிட்டால், ஹரியானாவில் உள்ளவன் தமிழர்களின் அறிவு குறித்து ஐயப்பட மாட்டானா?

இந்த அலைக்கற்றைத் தொகுப்பு உரிமம் வழங்கியது குறித்து, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை தன்னுடைய அதிருப்தியைக் கடுமையான முறையில் வெளியிட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங்கிற்கு அடுத்ததாக உள்ள அந்தக் கட்சியின் தலைவர் அமர்சிங், "இந்த அலைக்கற்றைத் தொகுப்பு ஒதுக்கீடு குறிந்த உண்மைகளையோ, ஊழல்களையோ வெளிக் கொணராமல் இருப்பதற்காக, அதற்குத் தொடர்புடைய நிறுவனங்கள் பெருந்தொகை ஒன்றை அவருக்கு இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், அதை வாங்க மறுத்து, எல்லா உண்மைகளையும் தலைமை அமைச்சரிடம் சொல்லிவிட்டதாகவும், அதற்குப் பிறகும் நடவடிக்கை இல்லையே, என்று கண்டித்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால் பூசாரிகளின் நிலை வேறு; தொடைக்கறி பெரிய பூசாரிக்கு என்றால், ஆட்டை வெட்டிய சின்னப் பூசாரிக்கு சந்துக்கறி, தலை, குடல், எலும்பு போன்ற எல்லாம் கிடைக்கும்!

தாழ்த்தப்பட்டவர்கள் தங்களின் பிரதிநிதிகள் மூலம்தான் நன்மை பெற முடியும் என்னும் அடிப்படையிலேயே தொகுதிகள் தனித்து ஒதுக்கப்பட்டன. அந்த வகையில்தான் ஆ. ராசா அமைச்சரானார். ஆனால் அறுபது ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு என்பது கொஞ்சமா நஞ்சமா?

தாழ்த்தப்பட்ட மக்களில் தூய்மையே வடிவான கக்கன் போன்ற பெருமக்கள் இன்னும் இருக்கிறார்கள்; என்றும் இருப்பார்கள்! ஆனால் இன்னொரு கக்கனைத் தேர்வு செய்யக் கருணாநிதி ஒன்றும் காமராஜ் இல்லையே!

தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தொண்டு செய்யப் பதவியும் ஒரு தடை என்றவுடன், அதையும் கூடத் தூக்கி எறிந்து விட்டார் அம்பேத்கர்.

இவற்றையெல்லாம் விட மிகப் பெரிய கொடுமை, ஆ. ராசாவுக்குத் திரண்டு வந்த எதிர்ப்பைக் கண்டு அஞ்சி, தாங்கிப் பிடிக்க முடியாத கருணாநிதி, சாதி இசைத் தட்டைப் புரட்டிப் போட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான ஆ. ராசா, அவ்வளவு பெரிய இடத்தை அடைந்திருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் அவர்மீது பாய்கிறார்கள் என்றார். எதுவும் நடக்காதென்றால், கடைசியாகச் சாதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதுதான் கருணாநிதியிடம் தொட்டில் தொட்டு இருந்து வரும் பழக்கம்!

ஏதோ தாழ்த்தப்பட்டவர்களிலேயே ஆ. ராசாதான் முதன்முதலாக மந்திரி ஆனவரா? இதற்கு முன்னே இந்த வகுப்பு மந்திரிகளை பாராட்டியவர்களெல்லாம், இப்போது ஏன் பொறுக்க முடியாதவர்களாகி விட்டனர் என்று மாற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மையும் விளங்கும், தன்னுடைய சாதிச் சிந்தனையில் உள்ள கேடுபாடுகளும் தெரிய வரும் ஆ. ராசா எந்த வகுப்பினாரால் என்ன? குற்றம் செய்தவர்கள் குற்ற வகுப்பினர்; அவ்வளவுதானே!

பார்ப்பனர்கள் குற்ற நடத்தையில் ஈடுபட்டால், குறைவான தண்டனைதான் கொடுக்க வேண்டும் என்று மனுநீதி சொன்னது!

கடந்த காலங்களில் அதற்கெதிராக ஒரு கொதிப்பு ஏற்பட்டது. " ஒரு குலத்திற்கு ஒரு நீதியா?' என்ற கேள்வி எழுந்தது!

தவறு செய்கின்றவன் தன் கட்சியினனால், அவனைக் காப்பாற்ற அவனுடைய முழுச் சாதியையும் இழுத்துக் கொள்வார் கருணாநிதி.

தமிழ்நாட்டில் பதவியில் இருப்பவனுக்கு எவனுக்குச் சாதியில்லை? எந்தச் சாதிக்குச் சங்கமில்லை?

எவன் தப்புச் செய்தாலும், அவனைத் தண்டிப்பது ஒட்டு மொத்த சாதியைத் தண்டிப்பதாகும் என்பது போல் கருணாநிதி பம்மாத்துச் செய்வது அவருடைய அழுகிய சிந்தனையின் விளைவே!

பழைய மனுநீதியை மனு எழுதினார்; புதிய மனுநீதியைக் கருணாநிதி எழுதிக் கொண்டிருக்கிறார்!


( நன்றி: தினமணி )

இந்த தினமணி கட்டுரை முரசொலி கண்ணில் படவில்லை என்று நினைக்கிறேன். கேள்வி பதிலுக்கே சின்னகுத்தூசி என்றால், கட்டுரைக்கு பெரிய கோணூசி எழுதியிருப்பார்

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP