பாண்டி!!!!

>> Saturday, September 27, 2008


நம் தமிழ் சினிமாவில் மாறாதவை என்று சில உண்டு. சேட்டுகள் சரளமாக தமிழ் பேசக் கற்று பல காலம் ஆகிறது. ஆனால் இந்த சேதி இன்னும் தமிழ் சினிமாவைப் போய்ச் சேரவில்லை.

தலையில் குல்லா மாட்டி, கையில் கோலுடன் நம்பள், நிம்பள் என்று தமிழை மென்று துப்பினால் மட்டுமே தமிழ் சினிமாவில் அவர் சேட். மலையாளிகள் குறித்த தமிழ் சினிமாவின் பார்வை இன்னும் கொஞ்சம் காமெடி. ஒரு டீக்கடை, அதில் வத்தலாக ஒரு நாயர், சாயா எடுத்துக் கொடுக்க ஷகிலா சைஸில் நாயரின் மனைவி! திருமதி நாயர் லேசாக உதட்டை அழுத்தி, `புட்டு வேணுமா...' என்று கேட்கும் டயலாக் கண்டிப்பாக உண்டு.

திருமதி நாயரின் முண்டோடும், மாராப்பு இல்லாத ஜாக்கெட்டோடும் தமிழ் சினிமாவினர் தங்களது லொள்ளுத்தனத்தை நிறுத்திக் கொண்டார்கள்.

மலையாளிகள் அப்படி அல்ல. தமிழர்கள் பற்றிய காட்சியமைப்புகளும் நம்மைப் போல், முண்டு, ஜாக்கெட் என ஆடையோடு முடிந்துவிடும் ஒரு ரகம் அல்ல. சூலம் மாதிரி பலமுனைகள் கொண்டது! (குத்தினால் ஆள் குளோஸ்)

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களைக் குறிக்கும் விசேஷப் பெயர், பாண்டி! மூன்றெழுத்துப் பெயர் என்றாலும் பாண்டிக்கு அர்த்தங்கள் முந்நூறு. குளிக்காதவன்... அசிங்கம் பிடிச்சவன்... இப்படி! ஏதாவது ஒரு மலையாளியை, பாண்டி மாதிரி இருக்கிறியே என்றால் போதும்; லாரியில் அடிபட்ட மாதிரி சிதறிப் போவார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு, `அக்கரை அக்கரை அக்கரை' என்றொரு படம்
ப்ரியதர்ஷன் இயக்கியது. கடத்தல்காரன் ஒருவனைக் கண்டுபிடிக்க அமெரிக்கா செல்லும் மோகன்லால், அங்குள்ள உயரமான கட்டடங்களைப் பார்த்து பிரமித்தவாறு, அருகிலிருக்கும் சீனிவாசனிடம் இப்படிச் சொல்வார்; ``எல்.ஐ.சி. பில்டிங்கைப் பார்த்து வாய் பிளக்கும் தமிழர்கள், இதைப் பார்த்தால் நெஞ்சு வெடிச்சு செத்திடுவான்களே!''

எல்.ஐ.சி. போலொரு கட்டடம் அன்று கேரளாவில் இல்லை. அந்த நெஞ்செரிச்சலில் அவலை நினைத்து இடித்த உரல்தான் மேலே உள்ள மோகன் லாலின் பேச்சு.

மற்றொரு படம், சுரேஷ் கோபி நடித்தது. பெரிய பீப்பாய் போலிருக்கும் நடிகர் ராஜூதான் போலீஸ் அதிகாரி. வழக்கம் போல கீழ்மட்ட அடியாளாக ஒரு தமிழ்வில்லன். ``நீ பொன்னுசாமி இல்லையா?'' ராஜூவைப் பார்த்து நம் தமிழ் ஆளு கேட்கிறார். தெரியாமல் சாணியை மிதித்த தொணியில் ராஜூ சொல்வார்; ``என்னது... பொன்னுச்சாமியா? நான் நல்ல ஐயங்கார் குடும்பத்துல பிறந்தவனாக்கும்.''

தமிழ்ப் பெயர்களான குப்புசாமி, பொன்னுச்சாமியெல்லாம் மலையாளிகளைப் பொறுத்தவரை தரக்குறைவானவை. தமிழர்களுக்கு மட்டுமே பொருத்தமானவை... அப்படியொரு ஆதிக்க மனோபாவம்.

திரைப்படங்களில் அரசியல் பேசுவது மலையாளிகளுக்கு கள்ளும், கருமீனும் ஒன்றாக கிடைத்த மாதிரி. அதுவும் முல்லைப் பெரியாறு என்றால் கொள்ளை இன்பம். கூத்தாடி விடுவார்கள்!

மோகன்லாலின் `உடையோன்' படத்தின் வில்லன் சலீம்கௌஸ் ஒரு தமிழன். தமிழன் சொல்வான்: ``தமிழ்நாட்டுல மழை பெஞ்சாதான் உங்க கிணத்துல தண்ணி'' மோகன்லாலுக்கு நக்கல் அதிகம். அவர் சொல்வார்: ``அதுக்கு உங்க ஊர்ல மழை பெஞ்சாதானே!'' இன்னொரு காட்சி. தமிழ் வில்லன் சொல்வார்: ``தமிழ்நாட்டு கரும்பு சாப்பிடுங்க, தேன் மாதிரி.'' பதிலடி பின்னாலேயே வரும். ``எங்க ஊர் தண்ணியே தேன் மாதிரிதான்!''

இது பரவாயில்லை. தமிழனால் கேரளாவுக்கு குலநாசம் என்றொரு மனப்பிராந்தி மலையாளிகளுக்கு ரொம்பவே உண்டு. பல மலையாளத் திரைப்படங்களில் மெயின் திரைக்கதையே இந்தப் பயங்கர கற்பனைதான்.

இதுவும் மோகன்லால் படம். அவரது அண்ணனாக நெடுமுடிவேணு. அக்மார்க் சுதேசியான அவர் கோக், பெப்சி முதலான தயாரிப்புகளை ஊரில் நுழையாமல் தடுத்து நிறுத்துவார். அவரது சுதேசிக் கனவைத் தகர்க்கும் விதமாய் அயல்நாட்டுப் பொருட்களின் விற்பனையாளராக வருகிறவர் ஒரு தமிழர். சில பல சண்டைகளுக்குப் பிறகு தமிழனைத் துரத்தியடித்து சொந்த தேசத்தின் கலாச்சாரத்தை மீட்டெடுப்பார் மோகன்லால்.

`லாலேட்டன்' எனச் செல்லமாய் அழைக்கப்படும் மோகன்லாலின் பெரும்பாலான படங்களில் தமிழர்களுக்கு எதிராய் இப்படி வாலாட்டும் காட்சிகள் மிக அதிகம்.

``இதெற்கெல்லாம் நேர்மாறாக அங்கே எல்லா காலேஜ் ஃபங்கஷன்லயும் நம்ம ஊரு சினிமாப் பாடல்கள் வெகு பிரபலம். எழுந்து நின்று ஆட்டம் போடுவாங்க. கூடவே தமிழ் சினிமாவினால மலையாளிகளுக்கு வர்த்தக ரீதியாக நிறைய லாபமும் கிடைக்குது.

சொற்ப சம்பளம் வாங்குற மலையாள நடிகர், நடிகைககூட தமிழ் சினிமாவுக்கு வந்தா லட்சக்கணக்குல சம்பளம் வாங்குறாங்க. நயன்தாரா முதல் நரேன் வரை பல உதாரணம்.... எல்லாரையும் தூக்கி வச்சு கொண்டாடறது தமிழன்தான்.

தமிழ்நாட்டுல இருக்கற நிறைய டீக்கடைகளை நடத்தறது மலையாளிகள். அவ்வளவு ஏன், அரிசி, பருப்பு வகையறாக்கள்கூட இங்கே இருந்துதான் கேரளாவுக்குப் போகுது. அப்படியிருக்க, தொடர்ந்து தமிழர்களை தங்களோட சினிமாக்களில் கேவலமா காட்டறாங்கன்னா மனதளவுல அவங்க குறைபாடா இருக்காங்கன்னு அர்த்தம்'' என்கிறார் தமிழ் சினிமா பிரபலம் ஒருவர்..

தொகுப்பு: மா.மணிவண்ணன்
(தட்ஸ் தமிழ்)

2 comments:

வால்பையன் September 30, 2008 at 11:40 AM  

மும்பையிலும் பாண்டி என்று தான் அழைப்பார்களாம்,
குறிப்பாக மதுரையில் தான் பாண்டி என்ற பெயர் அதிகம்.
இங்கே மலையாளிகள் என்றால் மாட்டுகறி பார்ட்டிகள்.

நல்ல பதிவு

Rajmohan February 24, 2009 at 9:22 AM  

உங்கள் வருகைக்கு நன்றி

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP