புதிய தலைவர் விஜயகாந்த்

>> Thursday, August 28, 2008

உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் விஜயகாந்த். இப்படி உங்ககிட்டே அறிமுகப்படுத்திக் கொள்கிற தகுதியும், தன்னம்பிக்கையும் நீங்கதான் எனக்கு கொடுத்தீங்க. இதுவரை உங்க ஆதரவால் ஒரு நடிகனாக வெற்றிகரமாக இருந்திருக்கேன். இப்ப மறுபடியும் ஒரு புதிய சூழலில் உங்களைச் சந்திக்கிறேன்.
அப்படி என்ன புதிய சூழல்? ஆமாம். புதுசுதான். இதுவரை ஒரு நடிகரா உங்ககிட்டே பேசிட்டு இருந்த நான், இனிமே ஒரு சமூக அக்கறை உள்ள அரசியல்வாதியாக பேசப்போறேன். திரைப்படங்களில் மட்டுமே துயரங்களை, வறுமையை, சுரண்டலை, ஊழலை, அராஜகத்தை எதிர்த்துப் போராடிக்கிட்டு இருந்த நான், அதை நிஜவாழ்வில், பொது வாழ்வில் செய்யப்போறேன். சினிமாவில் செய்ததெல்லாம் நிஜத்தில் முடியுமான்னு நீங்க கேட்கலாம். இத்தனை வருஷமாக ஓட்டுப்போட்டோம், ஓட்டுப்போட்டோம், ஓட்டுப் போட்டுக்கொண்டே இருக்கோம். எத்தனை அரசியல் கட்சிகள்? எத்தனை தலைவர்கள் மாறி மாறி வந்துட்டே இருந்தாங்க. சிரிக்கிறாங்க. திட்டங்களை அறிவிக்கிறாங்க. என்ன நடந்திருக்கு? நாம எல்லோரும் சந்தோஷமா இருக்கோமா? வெய்யில் வந்தால் குடிக்க சொம்பு தண்ணீர் இல்லை. ஒரு குடம் தண்ணீருக்காக நாலு கிலோ மீட்டர் நம்ம வீட்டுப் பெண்கள் நெஞ்சுக்கூடு வலிக்க நடக்கிறாங்க! குடம் தண்ணீருக்கு இந்த நிலைமைன்னா பூமியை நம்பியே தலைமுறைதலைமுறையாக வாழ்கிற விவசாயிகளின் கதி என்ன? சரி தண்ணீர்தான் இப்படி ஆகிப்போச்சு. மத்தது... வேலை இருக்கிறவர்களும், இல்லாதவர்களும் கூட கஷ்டப்படுறாங்க. வறுமைக்கு பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிட்டே போகுது. எது எதுக்குப் போனாலும் லஞ்சம். ஏன் இப்படி ஆச்சு? இதை யாரும் கேட்க மாட்டாங்களா? எதிர்த்து எதுவுமே செய்ய முடியாதா? காமராஜர், எம்.ஜி.ஆர். போல தலைவர்கள் திரும்பி வர மாட்டார்களா? இந்த மாதிரி பல கேள்விகள் மனசில் இருக்கு. நான் போகிற இடங்களில் உங்களை மாதிரி மக்கள் வந்து பேசுறாங்க. நீங்க ஏன் ஒரு கட்சி ஆரம்பிக்கக்கூடாது? எந்த வேலையை சினிமாவில் செஞ்சீங்களோ அதை ஏன் நிஜத்தில் செய்யக் கூடாது? இந்தக் கேள்வி, பதில் சொல்லாமல் மனசில் கிடந்தது.
நான் நடிகனா நல்லா இருந்திருக்கேன். நீங்க என் மேல் நிறைய அன்பு வைச்சிருக்கீங்க. போதுமான பணம் சம்பாதிச்சிருக்கேன். சொகுசாக வாழ்ந்திட்டு போக முடியாதா? ஆனால் மனசு கேக்கலை. நான் நல்லா இருக்கிறதே உங்களால்தான். முன்பு நடிகர்கள் கட்சி ஆரம்பித்தபோது இருந்த இதமான சூழ்நிலை இப்ப இல்லை. நடிகர்கள் என்ன செய்தாலும் பாராட்டப்படுகிற காலம் ஒன்று இருந்தது. மிகப்பெரிய பணபேரங்களும், வன்முறையும், எதிர்ப்பு பிரிவினை உணர்வுகளும், மிகுந்திருக்கிற இந்தச் சமயத்தில் நான் வரக் காரணம், சொகுசான வாழ்க்கை கிடைக்கப்போகுது என்ற அர்த்தத்தில் இல்லை. எனக்கு மலர்ப்படுக்கையில் நடந்தாலும் காலில் முள் குத்தின வலி எப்போதும் இருக்கும். எனக்கு எல்லாம் செய்த மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டாமா!
நான் ஒரு தலைவர்ன்னு அடையாளத்துக்காக வர விரும்பவில்லை. இந்த மண்ணுக்கு ஏதாவது செய்யணும் என்று மன்றத்துக்காரர்களும், என்மேல் பேரன்பு கொண்ட மக்களும் நிற்கிறாங்க. அந்த வரிசையில் நான் முதல் ஆள். அவ்வளவுதான். அரசியல்_சேவையாக செய்தவங்ககிட்டே இருந்து தொழிலாக செய்றவங்ககிட்டே இடம் மாறிப் போய்விட்டது. சேவையாக செய்கிறவங்களைக் கண்டுபிடிப்போம். இந்த நாட்டில் தேனாறும், பாலாறும் ஓட வேண்டாம். வியர்வை ஈரம் காயுறதுக்கு முன்னாடி உழைக்கிறவனுக்கு கூலியைக் கொடுன்னு பைபிள் சொல்லுது.
உழைப்பாளிகள் எவ்வளவு தூரம் சந்தோஷமா இருக்காங்க?
படிச்சவங்க, படிக்காதவங்க யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், நல்லவங்களை ஒன்றுசேர்த்து போராடப்போறேன். சாதியும், மதமும் நாட்டை மட்டும் இல்லாமல் ஊரையும் பிரிக்கிறது. உறவு சொல்லி அழைத்தவர்கள் ஒதுங்கிப்போகும் நிலை உருவாகியிருக்கு. ஒரு தொகுதியில் நிற்க நல்ல மனிதனைத் தேடுவதைவிட, அதிக எண்ணிக்கையில் உள்ள சாதியின் மனிதனைத் தேடுகிற அவலம் இருக்கு. இப்படித் தேடுகிற அரசியல்வாதிகளைக் குற்றவாளிகள் என்று சொல்லாமல் வேறு எப்படிப் பெயரிட்டு அழைப்பது?என்னால் முடிஞ்சதை செய்தாகணும். எனக்கும் கடமைகள் இருக்கு. பின்வாங்குற உத்தேசம் இல்லை. எனது வாழ்க்கையே போராட்டமாக இருந்திருக்கு. சவால்களும், கொஞ்சம் பின்னடைவும், எதிர்நீச்சல் போட்டு மேலே வந்த வாழ்க்கைதான் என்னுடையது. உழைப்பிற்கு அஞ்சாதவனாக இருப்பதில் இன்றைக்கும் பெருமையாக உணர்கிறேன். செப்டம்பரில் மதுரை மாநாடு நடக்கும். அதில் கொள்கைகளுக்கு இறுதி வடிவு தரப்படும்.
அதுக்கும் முன்னாடி உங்களில் சிலருக்கு இவருக்கு என்ன அரசியல் தெரியும்? திடீர்னு இங்கே வந்து என்ன பண்ணுவாருன்னு தோணலாம். அவங்களுக்காக, உங்களுக்காக எல்லோருக்குமான பதில்தான் இந்தத் தொடர்.
என்னோட அரசியல் காரியங்கள், மதுரையில் எங்களிடம் அரசியல் உணர்வு பரவிய விதம், சென்னைக்கு நடிகனாக வந்தபிறகு இருந்த அரசியல் ஈடுபாடு, தலைவர்களின் நட்பு, அவர்களின் மன உணர்வுகள், காயங்கள், நிறைய உண்மைகள், சின்ன ஆச்சர்யங்கள், எல்லாத்தையும், சொல்லப்போகிறேன். யாரையும் புண்படுத்தாமல் சொல்லப்போறேன். இதுவரை ஒரு நடிகனா மட்டுமே என்னை உங்களுக்கு அதிகமாக தெரிஞ்சிருக்கும். புருவம் உயர்த்த வைக்கும் என் அரசியல் அனுபவங்கள் உங்களுக்காக.
நான் எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்ததுதான் சின்ன வயசோட அழகான விருப்பமாக இருந்தது. ஒவ்வொரு எம்.ஜி.ஆர். படமும் வெளிவருகிற நாள் எங்களுக்கு தீபாவளி. முதல்நாளே தூக்கம் வராது. அன்னிக்குப் பார்த்து நேரம் போகாமல் நம்மை இம்சிக்கும். மதுரை என்னிக்கும் எம்.ஜி.ஆரின் கோட்டை. எம்.ஜி.ஆரின் படம் ஓடுகிற தியேட்டரில் அது அப்படியே தெரியும். ராமுவசந்தன், சுந்தர்ராஜன், ஆழ்வார், இப்ராஹிம், சம்பத், சுந்தரம், பாபு, இவர்கள் எல்லோரும் என்கூட படைதிரண்டு நிப்பாங்க. அப்பாவோ காங்கிரஸ்காரர். ‘உங்களுக்கெல்லாம் பாடுபட்டு சுதந்திரம் வாங்கினது தெரியாதுடா’ன்னு சொல்வார். எதுவுமே காதில் விழாது. எதுவும் ஞாபகத்திற்கு வராது. நினைவெல்லாம் எம்.ஜி.ஆர்தான். உடம்பெல்லாம் ரத்தத்திற்கு பதிலா எம்.ஜி.ஆரே ஓடுவது மாதிரி இருக்கும். அடிமைப்பெண் ‘சிந்தாமணி‘யில் ரிலீஸ். முதல் நாள், முதல் ஷோ பார்க்கவே முடியலை. அப்டியே புறப்பட்டு விருதுநகர் போறோம். அங்கேயும் முடியலை, அப்படியே மறுபடியும் ‘சிந்தா
மணி’க்கு வந்து, பெரிய போராட்டத்திற்கு பிறகு படம் பார்த்திட்டோம்.
எம்.ஜி.ஆர்தான் எனக்கு எல்லாமே சொல்லிக்கொடுத்தது மாதிரி இருக்கு. அவர் ஜனங்களோடு ஒரு சேர சேர்ந்த விதம், கள்ளமறியாத சிரிப்பு, எல்லாமே எனக்கு பாடமாக இருந்தது. ‘பப்ளிக்’கில் அவர் வரும்போது அடுத்தடுத்து என்ன செய்வார்னு யாராலும் யூகிக்க முடியாது. அவர் ஜனங்ககிட்டே கொண்டிருந்த நேசம் ரொம்ப உண்மையானது. அந்த பரிவுதான் என்னை ஆட்கொண்டது. அவரோடு நேசம் வைச்சிருந்த சமயத்தில்தான் விருதுநகர் எலெக்ஷன் வந்தது. பெருந்தலைவர் காமராஜை எதிர்த்து சீனிவாசன் போட்டியிட்டார்.
மதுரையிலிருந்து அப்பாவுக்கு தெரியாமல் விருதுநகருக்கு புறப்பட்டோம். ‘பேக்’கில் ஒரு வாரத்திற்கு துணிமணி எடுத்துக்கிட்டோம். அப்படியரு பிரசாரம். சோறுதண்ணீர் இல்லாமல் நடந்து நடந்து, தாய்மார்கள் காலிலெல்லாம் விழுந்து ஓட்டு கேட்கிறோம். வீட்டிற்கு வந்தோம். விருதுநகர் வரைக்கும் ‘சும்மா’ போயிட்டு வந்தோம்னு சொல்லிட்டேன். ரிசல்ட் வருது. பெருந்தலைவர் வெற்றிவாய்ப்பை இழக்கிறார். வீட்டில் ஆனந்தத்தால் குதிக்கிறேன். அப்பா விஷயம் கேள்விப்பட்டு தலைகீழாகக் கட்டிவைச்சு அடிச்சார். அப்போ அடிச்ச அடி கூட வலிக்கலை. இப்ப இத்தனை நாள் கழிச்சு பொறுமையாக யோசிக்கும்போது எதோ தப்பு செய்துட்டோம்னு தெரியுது. தமிழ் நாட்டின் முதல்வராக இருந்தவர் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். அவர்கிட்ட இருந்தது 120 ரூபாயும், நாலைஞ்சு கதர் சட்டையும். அப்படியே இரத்தமே சுண்டி இறங்கினது மாதிரி இருக்கு. அத்தகைய ஒரு அற்புதமான பெருந்தலைவரைத் தோற்கடிக்க நானும் ஒரு சின்ன காரணமாக இருந்தேனேன்னு வெட்கப்பட்டு, வேதனைப்பட்டேன். இன்னிக்குவரைக்கும் நான் வெட்கப்படுகிற விஷயமும் இதுதான்.
(பொங்கி எழுவோம்.)
என்னிக்கும் வாழ்நாளில் மறக்கமுடியாத இன்னொரு விஷயம் இருக்கு. மதுரைக்கு இந்திராகாந்தி அம்மையார் வந்திருந்தார்கள். அப்பாவுக்கு ஏக குஷி. இரண்டு நாட்களாகவே பரபரன்னு திரிஞ்சுகிட்டே இருக்கார்.... நான் எம்.ஜி.ஆர். ரசிகன்னு தெரியும். அதை விமர்சனம் செய்யமாட்டார். ஆனால் காங்கிரஸ் பற்றி ரொம்ப உயர்வாகப் பேசுவார். தலைவர்களைப் பற்றிச் சொல்லும்போது அவ்வளவு மரியாதையுடன் சம்பவங்களைச் சொல்லிக்காட்டுவார். அந்த நேரத்திற்கு உள்வாங்கிட்டு உடனே மறந்திடுவேன். எம்.ஜி.ஆர். போஸ்டர் ஒட்டுகிற வேலை பாக்கி நிற்குதே... அதற்கெல்லாம் மனசுக்குள்ளே டயம் பிரிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பேன். ரொம்ப நாளைக்குப் பிறகு இந்திராகாந்தி அம்மையார் வந்ததும் ‘நீயும் வாடா’ன்னு என்னைக் கூட்டிட்டுப்போனார். பாதியிலேயே அவர்கிட்டேயிருந்து, என் சிநேகிதன் இப்ராஹிமோடு சேர்ந்துகிட்டேன். அப்படியே மலரசிரிச்சபடி இந்திராகாந்தி வருகிறார். விழுகிற மாலைகளை மக்களிடம் அன்போடு வீசுகிறார். தி.மு.க.வினர் கருப்புக்கொடிப் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களும் எதிர்ப்புக்குரல் கொடுக்கிறார்கள். கோஷங்களின் விபரீதம் புரியாமல் போனாலும், புன்னகையை குறைக்காமல் இந்திரா வலம் வருகிறார்.
கருப்புக்கொடிப் போராட்டத்தின் நோக்கம் மாறிவிட்டது. தடிகளை வீசியும், கற்களாலும் எங்க கண் முன்னாலேயே இந்திரா தாக்கப்பட்டார். முழுக்க முழுக்க பதற்றம். போலீஸ்காரர்கள் நிலைகுலைந்து போய்விடுகிறார்கள். இந்திரா ஆதரவற்று கைவிடப்பட்டார். பார்த்துக் கொண்டிருந்த பொதுஜனங்கள் பதறுகிறார்கள். யாராலும், யாருக்கும் உதவமுடியவில்லை. அம்மையாருக்கு அடிவிழுந்துகொண்டே இருக்கிறது. அவருக்குப் பக்கத்தில் பழ. நெடுமாறனும், என்.எஸ்.வி. சித்தனும் இருக்கிறார்கள். பூஞ்சை உடலில் அத்தனை அடிகளையும், கற்களையும் நெடுமாறன் ஐயா வாங்கிக்கொள்கிறார். என்னதான் ஜீப் வேகமாக தப்ப முயன்றாலும், அவரால் தாக்குதலிலிருந்து தப்ப முடியவில்லை. அப்படியும் நின்றுகொண்டு, கும்பிட்டுக்கொண்டு மாறாத புன்னகையோடு இருக்க முடிந்த அம்மையாரின் உறுதியைக் கண்டு வியந்தேன். ரத்தம் தெறித்த புடவையோடு, புன்னகையோடுதான் அப்போதும் இந்திரா அம்மையார் இருக்கிறார். நெடுமாறன் ஐயா மீது மாறாத அன்பு மனசிற்குள் வந்தது. அம்மையாரை உட்காரவைத்து அவரைச்சுற்றி அரண் மாதிரி நின்று காப்பாற்றியவர் அவர்தான். நிஜமாகவே நெடுமாறன் ஐயா மாவீரர். அவர் கஷ்டப்பட்டு காப்பாற்றிய இந்திராவின் உயிரை பிற்பாடு பாதுகாவலர்கள் பறித்துக்கொண்டது பெரும் துயரம்தான். எளிமையாகவும், பதவிக்கு ஆசைப்படாமலும் இருந்ததால் அவரால் அந்தக்கட்சியில் கூட பெரிய பதவிக்கு வரமுடியவில்லை. அரசியல் சாதாரண விஷயம் அல்ல என்பது அன்றைக்கு தெளிவாகத் தெரிந்தது. என் அப்பாவும் சட்டையெல்லாம் கிழிக்கப்பட்டு அடிவாங்கியிருந்தார். நாங்கள் தப்பி, என் அக்கா வேலை பார்த்த மருத்துவமனைக்கு ஓடியதால் உயிர் பிழைத்தோம். தவறு செய்திருந்தால், அதற்கு வன்முறை பதில் அல்ல என்று எனக்குப் புரிந்தது.
அந்த வயதிற்கு அம்மையாரின் தாக்குதல் நினைவு கொஞ்ச நாள்தான் இருந்தது. நான் இன்றைக்கும் மதுரைக்குச் செல்லும்போது இந்திரா தாக்கப்பட்ட இடமும் ஞாபகத்திற்கு வரும். காப்பாற்றியவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். தாக்கியவர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். நினைக்கிறதையெல்லாம் சொல்லமுடியவில்லை என்ற விஷயமும் இதில் அடங்கி இருக்கு.
திடீரென்று ‘பிள்ளையோ பிள்ளை’ என்று படம் ஆரம்பிக்கப்பட்டு மு.க.முத்து நடிக்கிறார். எம்.ஜி.ஆர். அதில் ஆர்வமாக இருக்கிறார். அவர்தான் முத்துவின் ஸ்டைல், ‘விக்’ பற்றியெல்லாம் ஆலோசனை தருகிறார் என்று சொன்னார்கள். நம்ம தலைவர் சொல்றவங்கதான் நமக்கு இஷ்டம். அந்த விதத்தில் முத்துவும் எங்கள் அபிமானத்திற்குரியவரானார். ‘அலங்கார்’ தியேட்டரில் படம் ரீலிசாகி எம்.ஜி.ஆர். ரசிகர்களால் ஓடுச்சு. பின்னால் வந்த படம் ‘பூக்காரி’. அதில் முத்து ‘காதலின் பொன் வீதியில்’னு பாடும்போது விசில் பறக்குது. அப்படியே எம்ஜிஆர் மாதிரியே ஆடிப்பாடி ஓடுகிறார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இது எம்.ஜி.ஆருக்கே தெரியுமா, அவருக்குத் தெரிஞ்சுதான் எல்லாம் நடக்குதான்னு எங்களுக்குப் புரியவில்லை. படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களும் பார்த்ததால் நல்லாவே ஓடுது. எங்களுக்குத்தான் ஏதோ ஒரு சந்தேகம் உள்ளேயே இருக்கு. ‘என்னவோ சதி நடக்குதுடா மாப்ளே’ன்னு சிநேகிதர்கள் பேசுறாங்க. அப்படியே ‘பூக்காரி’யிலும் நம்ம தலைவருக்கு ஜோடியாக ஆடின மஞ்சுளாவே ஜோடி. இதெல்லாம் எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அறவே பிடிக்கலை. ‘ஆஹா, வேறமாதிரி ரூட் போகுதுடா’ன்னு எல்லோரும் பேசிக்கிட்டோம். ரசிகர்களுக்கு முன்னாடி தெரிஞ்சது தலைவருக்குப் பின்னாடிதான் தெரியுது. ரசிகர்களுக்கு எம்.ஜி.ஆரை ‘அவாய்ட்’ பண்றாங்கன்னு புரிஞ்சுக்கிட்ட போது, அடுத்தடுத்து முத்துவின் படங்கள் வெற்றியைப் பெறவில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பேப்பரிலும், ஒவ்வொரு விதமான செய்தி.
‘பூக்காரி’க்குப் பிறகு மு.க.முத்துவின் படத்தைப் பார்க்கிறதை ஏகமனதாக நிறுத்திட்டோம். முத்துவை கலைஞரோட மகன்னு ரசிக்கமுடியுது. தலைவருக்குப் போட்டியா எங்களால் ரசிக்க முடியவில்லை. சரியோ தவறோ, உண்மையோ இல்லையோ ஆண்டவனுக்குத்தான் தெரியும். பிள்ளையை வளர்க்க எம்.ஜி.ஆரை ஒதுக்குகிறார் என்ற செய்தி பரவி மக்கள் மனசில் ஊன்றிவிட்டது.
இப்படி இருக்கும் போது, இன்னொரு சிக்கலும் இருந்தது. இரண்டு விதமாக ரசிகர்கள் இருந்தாங்க. எம்.ஜி.ஆருக்காக கட்சி. கட்சிக்காக எம்.ஜி.ஆரை பிரியப்பட்டவங்க. நான் முதல் வகையில்தான் இருந்தேன். உண்மையைச் சொல்லியாகணும். அதற்கடுத்து தி.மு.க. மாநாடு நடக்குது. எதையும் மனசில் வைக்காமல், நாங்க எல்லோரும் போறோம். தேடித்தேடிப் பார்த்தோம். எங்கேயும் எம்.ஜி.ஆர் படத்தைப் பார்க்க முடியலை. தி.மு.க. காரங்களுக்கே எம்.ஜி.ஆரை புறக்கணித்திருப்பது தெரிஞ்சு போகிறது. அதற்குப்பிறகு எங்களால் எந்த மாநாட்டுக்கும் போக முடியலை. எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் கூட முத்துவை வைச்சுப் பார்க்க எங்களால் முடியலை. அதற்காக கலைஞர் மீதுள்ள பாசமும் எங்களுக்குப் போக மாட்டேங்கிது. நெடுஞ்செழியன், மதியழகன்னு அடுத்தடுத்து இருந்தாலும் எம்.ஜி.ஆர், கலைஞர்தான் மனசிற்குள் இருந்தாங்க.
திடீரென்று கணக்குக் கேட்டு எம்.ஜி.ஆர் பேசினார். ‘அடடா பிரச்னை முற்றிப்போய் வெடிச்சுப்போச்சு’ என்று நினைச்சிட்டோம். கணக்குக் கேட்டால் என்னய்யா தப்புன்னு கொதிக்கிறாங்க. மதுரை முழுக்க எம்.ஜி.ஆர் ரசிகர்களை குறிவைச்சு தேடுதல் வேட்டை நடக்குது. எங்க ரைஸ்மில் கணக்குப்பிள்ளையை தூக்கிக் கொண்டு போயிட்டாங்க. எம்.ஜி.ஆர் படம் ஓடுகிற தியேட்டருக்கு வெளியே போலீஸ்காரர்கள் காத்துக்கிட்டு இருந்து, எம்.ஜி.ஆர் மன்றத்தைச் சேர்ந்தவங்களை ‘கொத்தாக’ தூக்கிட்டுப் போனாங்க. கவுன்சிலர் அழகர்சாமி பசங்கன்னு எங்களை விட்டுவிடுகிறார்கள். மதுரை மேங்காட்டுப் பொட்டலில் தாமரைக் கொடி ஏத்துறோம். மயிரிழையில் போலீஸ்காரர்களிடமிருந்து தப்பிச்சோம். எம்.ஜி.ஆர் ரசிகர்களை போலீஸ் விரட்ட விரட்ட, யாருக்கும் தெரியாமல் ஒரு சக்தி உருவாகியது. எங்களுக்கும் ஆவேசம் வந்துவிட்டது. அப்பா கண்டிப்பால் இதில் நேரடியாக இறங்காமல் இருந்துகிட்டு இருந்தேன். எம்.ஜி.ஆரின் படங்கள் ஒட்டாமல் எந்த வண்டியும் ஓடமுடியாதுங்கிற நிலைமை கூட மதுரையில் வந்தது.
இந்த நெருக்கடியில்தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ வரப்போகுது. அந்தப் படம் வருமான்னு சந்தேகமாகவும் இருக்கு. எம்.ஜி.ஆர் அந்நியச் செலாவணியில் சிக்கிட்டார்னு சொல்றாங்க. படம் நல்லா ஓடும்னு தெரிஞ்சும், ‘கும்பிட்டு படம் வேணாம்னு’ தியேட்டர்காரர்கள் சொல்றாங்க. ரொம்பவும் தைரியமாக மீனாட்சி தியேட்டர் சவுந்தரராஜன் படத்தை வாங்கிப் போடுகிறார். 150 பேரை ஊரிலிருந்து இறக்கி, தியேட்டரில் கொண்டுவந்து நிப்பாட்டி, அவங்களும் காவலுக்கு சிலையாக நிற்கிறாங்க. முதல்நாள் காலையிலிருந்து ஒரு மைலுக்கு டிக்கெட் வாங்கக் கூட்டம். மேயர் முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரையில் ஓடிட்டால் சேலை கட்டிக்கிடுவேன்’’ என்று பரபரப்பாகப் பேசினார். மதுரையில் பதற்றம் கூடிவிட்டது. ரசிகர்கள் சின்னக் கத்தியில் டிக்கெட்டை சொருகிட்டு படம் பார்த்தோம். ஆளுக்கு ஆள் சேர்ந்து காசு வசூல் பண்ணி 1000 சேலைகள் அவருக்கு அனுப்பி வைச்சோம். அதே மதுரை முத்து, பின்னாடி எம்.ஜி.ஆர் கிட்டே சேர்ந்துட்டார். மதுரை முத்துவின் வீரமும், எம்.ஜி.ஆரின் மன்னிக்கிற தன்மையும் இன்னமும் எனக்குப் புரியாத விஷயங்கள்தான்.
(பொங்கி எழுவோம்)
‘உலகம் சுற்றும் வாலிபன்’ ரிலீஸ் ஆகும்போதுதான் எங்களுக்கும் மதுரை முத்துவிற்கும் பிரச்னை இருந்தது. அதற்கு முன்னாடி எம்.ஜி.ஆரை யாருக்கும் குறையாமல் நேசித்தவர் அவர்தான்.
மதுரையில் எம்.ஜி.ஆருக்கு தங்க வீரவாள் பரிசு கொடுத்தார். அந்த நன்றி உள்ளேயே எம்.ஜி.ஆருக்கு இருந்திருக்கணும். அதுதான் படம் ரிலீஸ் ஆனபோது என்னதான் பிரச்னை செய்தாலும், மனசில வச்சுக்காம இருந்தார். அன்னிக்கெல்லாம் வைகையாற்றில் உட்கார்ந்து எம்.ஜி.ஆர். பெருமையை பேசிப்பேசி களைச்சுப்போவோம். அதே முத்துவிற்கு முதல் மதுரை மேயர் பதவியையும் கொடுத்தார் எம்.ஜி.ஆர். வேறெந்த அரசியல்வாதிக்கும் இந்த மனசு வந்திருக்குமா! நினைச்சுப் பார்த்தால் இன்னும் ஆச்சரியமாகவே இருக்கு. வேடிக்கை இல்லை. இன்னிக்கு யாருக்காவது அப்படியரு மனசு இருக்கும்னு நினைக்கிறீர்களா! மதுரை மாநாட்டிலிருந்து எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அந்நியமானதுகூட மு.க.முத்து வெள்ளை உடையில் வெள்ளைக் குதிரையேறி ஊர்வலத்தில் வந்த போதுதான். அன்றைக்கு மனசு விட்டுப்போன எம்.ஜி.ஆர். மாநாட்டு ஆரம்பத்திலேயே நாலு வார்த்தை பேசிட்டு உடனே போயிட்டார். எங்களுக்கெல்லாம் அதிர்ச்சி. சாப்பிடக்கூட முடியாமல் அவதிப்பட்டோம். கலைஞரையும், எம்.ஜி.ஆரையும் ஒரே இடத்தில் வச்சுப் பார்த்ததுதான் காரணம்.
நான் முதலில் சென்னைக்கு எதற்கு வந்தேன் தெரியுமா? கலைஞர் சைதாப்பேட்டையில் போட்டியிட்டார். பிரசாரத்திற்கு மதுரை முத்து எங்களை சென்னைக்கு அனுப்பிச்சார். அமிஞ்சிக்கரையில் ஒரு கல்யாண மண்டபத்தைப் பிடித்து தங்க வச்சாங்க. பிரசாரத்திற்கு வந்ததை ஓட்டுப்போட வந்ததாக நினைச்சுக்கிட்டு பேப்பரில் போட்டுட்டாங்க. உடனே காலி பண்ணிட்டு பிரசாரம் பண்ணிட்டு ஊருக்குப் புறப்பட்டோம். போகும்போதும் வரும்போதும் சிங்கம்புணரி அமைச்சர் செ. மாதவன் ரைஸ்மில்லில்தான் சாப்பாடு. அதேமாதிரி பிரசாரம் பண்ணிட்டு திரும்பி தாம்பரம் வழியாகப் போகும்போது காங்கிரஸ்காரங்க ஆத்திரப்பட்டு கல்வீசித் தாக்கினாங்க. அன்னிக்கு தப்பி வந்தது குலதெய்வம் புண்ணியம்தான்னு சொல்வேன். அணிஅணியாக திண்டுக்கல் இடைத்தேர்தலில் வேலை பார்த்ததை மறக்க முடியாது. எங்க வேலையெல்லாம் மதுரை முத்துவிற்குத் தெரியும். அவர் எங்களை எப்படியெல்லாம்படுத்தினார், நாங்க எப்படியெல்லாம் தப்பிச்சோம்... நிறையச் சொல்லலாம்.
எனக்கு கட்சின்னு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். இருக்கறதுதான் நம்ம கட்சி. அவர் யாரைச் சொன்னாலும் ஏத்துக்கலாம். அதுதான் மனதில் பட்ட விஷயம். இன்னிக்குப் பாருங்க. அரசியல்வாதிகளைத் திட்டறது ஓல்டு ஃபேஷன் ஆகிப்போச்சு. எல்லோரும் திட்டிட்டாங்க. முதல்ல தப்பு எங்கேனு பார்க்கணும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் திருட்டு, ஊழல்னு அரசியல்வாதிகளைத் திட்டறோமே.. அவன் எங்கேயிருந்து வர்றான்? நமக்குள்ளே இருந்துதானே வர்றான்! நிறைய சரிபண்ணணும் சார். சேவை பண்றவனை மதிக்கணும். எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். இதுவரைக்கும் இருக்கற மாதிரி எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருக்கிறது சுலபம். ஆனால், கட்சின்னு வரும்போது எத்தனை கேள்விகள், விமர்சனங்கள், ஏச்சுக்கள்... எல்லாத்தையும் சந்திக்கணும்னு தெரியும். எதிலேயும் இறங்குறதுக்கு முன்னாடிதான் யோசிப்பேன். இறங்கிட்டா விறுவிறுனு போய்க்கிட்டே இருப்பேன்.
எனக்கு ‘இந்த அமைப்பே சரியில்லை. எல்லோரும் மோசம்’னு ஒட்டுமொத்தமா குற்றம் சாட்டுறது பிடிக்காது. பொதுவாக தப்புச் சொல்றது ரொம்ப ஈஸி. இது நாமே தேர்ந்தெடுத்த அமைப்புத்தான். அதை குறை சொல்லிட்டு கைதட்டல் வாங்கிட்டுப் போக நான் தயாராக இல்லை.
பசிதான் என்னை மாத்தியது. ரைஸ் மில் ஓனர்தான். ஆனால், ஏழைகளோடுதான் பழகுவேன். வசதியான வீட்டில் பிறந்துட்டு இந்த ஆளு இப்படி இருக்கானேன்னு ‘போங்க முதலாளி’ன்னு தள்ளிவிடுவாங்க. திரும்ப அவங்களோடுதான் ஒட்டுவேன். இன்னிக்கும் கையையே தலைக்கு வச்சுக்கிட்டு வெறுந்தரையில் தூங்கப் போயிடுவேன். பசியோட அருமை பெருமை, வலி, பற்றாக்குறை, அவமானம் எல்லாமே எனக்குத் தெரியும். உலகத்திலே தீராத கொடுமை பசிதாங்க. எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும், வயிறு காஞ்சு வந்தால் என்ன சொன்னாலும் தலைக்கு ஏறாதுங்க. நம்ம தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டுக்கு யார் வந்தாலும், ‘சாப்பிட்டீங்களா, சாப்பிட்டுத்தான் மறுபேச்சு’ன்னு சாப்பிட வைப்பாராம். வயிறைக் குளிர வைக்கிற பாலிஸி அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு யாருக்குத் தெரிந்தது? அவரோட பெருந்தன்மையையும், தாராளத்தையும் எல்லாரும் அடைய நினைக்கணும். படங்களில்கூட எம்.ஜி.ஆர். எல்லோரும் திருந்தி நல்லவனாக ஆகணும்தான் சீன் வைப்பார். இப்ப இருக்கிறது மாதிரி ரத்தக்களறி ஆக்குவது கிடையாது. அவரைப்பத்தி வருகிற கிசுகிசுவைக்கூட ஜனங்கள் நம்பமாட்டாங்க. ‘எப்படி மனுஷன், அவருக்கென்ன பிள்ளையா, குட்டியா, இன்னும் நாலு பேரை கட்டிக்கிட்டு சந்தோஷமா இருக்கட்டும்னு’ சொல்லி நானே காதுபட நிறைய கேட்டிருக்கேன்.
எங்க காலத்துல எதிரிகளை தூக்கிப்போட்டு பந்தாடுவது மாதிரி ஆகிப்போச்சு. எம்.ஜி.ஆர். அடிச்சிட்டு, காலை கழுத்து மேலே வக்கப்போயிட்டு, ‘சரி பொழைச்சுப்போ, திருந்தி வாழ்ற வழியைப்பாரு’ன்னு சொல்லி அனுப்புவார். எனக்கு கஷ்டமே இருக்கு. நான் படங்களில் சல்லடை, சல்லடையாக துப்பாக்கிக் குண்டால் துளைச்சு சாக வைப்பேன். என் காலத்தில் வேகம், வேகம், ஆக்ஷன் மட்டும்தான்னு ஆகிப்போச்சு.
ஆரம்பத்தில் எனக்கு சினிமா ஆசையெல்லாம் இருந்ததில்லை. சேனாஸ்ஃபிலிம்ஸ் மர்சூக்னு குடும்ப நண்பர் இருந்தார். அவரோட நல்ல பழக்கம். அவர்தான் கட்டுமஸ்தா இருந்த என்னைப் பார்த்து, ‘நடிக்கிறியா’ன்னு கேட்டார். ஒரு படம் நடிச்சிட்டு, திரும்ப மதுரைக்கு வந்து ரைஸ்மில்லில் உட்காருவதுதான் திட்டம். இன்னிக்கும் பாருங்க... மதுரைக்கார சுத்துப்பட்டு ஆட்களுக்கு வல்லினம், மெல்லினம், சரியா வராது. ‘தமிழே பேசத் தெரியலை’ன்னு அனுப்பிச்சிட்டாங்க. அதில பெரிய ஹீரோவோட வேலையும் இருந்தது.
எதையாவது சாதிக்கணும், எந்த இடத்திற்காவது வந்து, அந்த இடம் கொடுக்கிற சௌகரியத்துல நல்லது பண்ணணும். யோசிச்சு, சென்னைக்கு ரயிலேறினேன். இங்கே சந்தித்த மனிதர்கள், எதிர்ப்பட்ட சினிமா, என்னை ஆட்கொண்ட அரசியல் தலைவர்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
(பொங்கி எழுவோம்)
கலைஞர் ‘பொன்விழா’ விற்கு முன்னாடி ‘ஏழைஜாதி’ ன்னு படம் செய்தேன். முக்கியமான எல்லா அரசியல் கட்சிகளையும் அந்தப்படம் தாக்கியது. அதுவும் கதைக்குப் பொருத்தமாக. எனக்கே கலைஞரைப் பார்க்க சங்கடமாக இருந்தது. ‘திடுதிப்’ன்னு பொன்விழா வேலைகளில் இறங்கியதும் அதை மறந்தேன். கலைஞரும் அதைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்புக் கொடுத்தார். அதற்கு அப்புறம்கூட எல்லாமே நல்லாயிருந்தது. திடீரென்று ஒரு குறிப்பிட்ட டி.வி.யில் ‘டாப்டென்’னில் படங்களை குறிவச்சுத் தாக்க ஆரம்பிச்சாங்க. நடிகர்சங்கத்திற்குப் போனால் ஒரே புகார்கள். ‘நீங்க இதைக் கண்டிக்க வேண்டாமா’ன்னு ஏகப்பட்ட குரல்கள். எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. பொறுப்புக்கு வந்துட்டா வருகிற விஷயங்களில் இதுவும் ஒண்ணு. தலைவர் கலைஞரைப் போய்ப் பார்த்தேன்.
அப்போது முதல்வரை ஈஸியாகப் பார்க்கலாம். கோட்டையிலும் சரி, பெரியம்மா, சின்னம்மா வீட்டிலும் சரி எப்ப வேண்டுமானாலும் பார்க்கலாம். உடனே சின்னம்மா வீட்டிற்குப் போனேன். நான் கலைஞரை அப்பா, அண்ணே என்று இரண்டு மாதிரியும் கூப்பிடுவேன். ‘என்ன அப்பா, உங்ககிட்டே ஆலோசனை கேட்டுத்தானே நடிகர் சங்கத்தலைவர் ஆனேன். முதல் புகாரே உங்க டி.வி. பத்திதான் வருது. பார்த்து விமர்சனம் செய்யலாம். காசுபணத்தை இறைச்சுப்போட்டு, படம் செய்தால் அக்குவேறு ஆணிவேறாக கிழிச்சுப் போடுறாங்க. தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் நொந்து போறாங்க. இதுமாதிரி செய்றது நல்லதுதானா, நீங்க சொல்லக் கூடாதான்னு கேட்டேன். கச்சிதமாக நான் சொன்னதையெல்லாம் கேட்டார். ‘நான் சொல்றதை அவங்க கேட்க மாட்டாங்க’ன்னு சொல்லிட்டார். நான் சரிங்கன்னு எழுந்திருச்சி வந்துட்டேன். வருத்தம் வந்துடுச்சி. யதார்த்தமாக ‘குமுதத்தில்’ பேட்டி கேட்க, வருத்தப்பட்டு, கோபப்பட்டு பேசிட்டேன். கலைஞர் அண்ணனுக்கு வருத்தம் வந்துடுச்சு.
அதுக்கும் மேலே இன்னொரு சம்பவமும் நடந்துடுச்சு. ஏதோ படபூஜைக்குப் போயிட்டு, விழுப்புரத்திற்கு பொன்முடி வீட்டுத் திருமணத்திற்குப் போக வேண்டியிருந்தது. கலைஞர்கிட்டே கொஞ்சம் லேட்டாக வருவேன்னு சொல்லியிருந்தேன் போனேன். நான் விழுப்புரம் போகும்போது கலைஞர் பேசிட்டிருந்தார்.
சின்ன சலசலப்பு. ரசிகர்கள், மக்கள் என்னைப் பார்க்க கூடிட்டாங்க. அங்கேயிருந்த கட்சிக்காரர்கள் நான் ஏதோ இடைஞ்சல் பண்றதா நினைச்சிட்டாங்க. அப்படியரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை. என்னுடைய காருக்கு ஏகப்பட்ட சேதம். அப்படியிருந்தும் உள்ளே போய், வாழ்த்திட்டுக் கிளம்பினேன். அவ்வளவு நெருக்கடியிலும் வாசல்வரை வந்து வழியனுப்பிய பொன்முடியை மறக்கமுடியாது. எம்.ஜி.ஆர் பாணியில் விஜயகாந்த் வந்திட்டுப் போனார்னு பத்திரிகைகள் எழுதிட்டாங்க. கொஞ்சம் இடைவெளி வந்துவிட்டது. அல்லது நானாக ஒதுங்கிக்கொண்டேன்.
அப்புறம் நெய்வேலிக்கு காவிரிநீர் பிரச்னைக்கு நீதி கேட்கப்போனோம். இடைவெளி எதையும் நினைக்காமல் கலைஞர் அண்ணன், சரத், நெப்போலியன் நெய்வேலிக்கு வருவதற்கு உதவி செய்தார். அந்தச் சமயத்தில் பாரதிராஜா செய்த குழப்பங்கள் அதிகம். பாரதிராஜா, சரத், ரஜினி மூன்று பேரும் இருந்து பேசியபோது சென்னையில் வச்சு போராட்டத்தை நடத்திக்கலாம்னு சொல்லியிருக்கார். திடீரென்று எங்ககிட்டே வந்து நெய்வேலியில் மின்சாரத்தை நிறுத்துவேன்னு சொல்லிட்டார். கலைஞர் முரசொலி அலுவலகத்தில் இருந்தார். நான் சொன்னது எல்லாத்தையும் கேட்டார். ‘விஜி உன்னை நம்பி அனுப்புறேன். கூட்டிட்டுப் போ’ன்னு சொல்லிட்டார். அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி அறிவுபூர்வமாகச் செயல்படுவார் கலைஞர். இன்னிக்கு வரைக்கும் அவர் நிலைச்சு நிற்கிறதுக்குக் காரணமே அதுதான். பிரச்னைகளை காதுகொடுத்துக் கேட்பார். பிரச்னையைப் பற்றி முன்னமே அபிப்பிராயம் வச்சுப்பார். ஆனால் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட அவர் வாயிலிருந்து வராது. இந்தச் சாமர்த்தியமும், யுக்தியும் வேறு எந்தத் தலைவருக்கும் வராது.
பெப்ஸி, படைப்பாளிகள் மோதல் வந்தபோது என்னை படைப்பாளிகள் தலைவராக இருக்கச் சொன்னாங்க. நான் டெல்லியிலிருந்த அவரிடமே ஆலோசனை கேட்டேன். ‘விஜி, எதற்கு வீண் வம்பு’ன்னு சொன்னார். அமைப்பாளர்கள்கிட்டே ‘ஸாரி, முடியாது’ன்னு சொல்லிட்டேன். அவர் சொன்ன பேச்சையெல்லாம் கேட்டு இருக்கேன். நினைச்சுப் பார்த்தால் ஒரு தகப்பன்_பிள்ளை மாதிரிதான் எங்க உறவு இருந்திருக்கு. பிரியத்தோட இன்னொரு முகம் கோபம்னு சொல்வாங்க. அந்தமாதிரி கோபம் எங்ககிட்டே இருந்திருக்கு. இருக்கு. நான் மனசுக்குப் பட்டதைப் பேசுவேன். கலைஞர் அண்ணன் எதையும் தீர்மானிச்சுப் பேசுவார்.
அவரோடு பழகிய காலங்கள், என்னை மேம்படுத்திய காலங்கள். அவர்கிட்டே இருந்து நிறைய கத்துக்கலாம். எங்களுக்குள்ளே பேசிக்கிட்டாலும், பார்த்துக்கிட்டாலும் ஒரு சின்ன இடைவெளி இருக்கிறது உண்மைதான். இரண்டுபேரும் மனசுவிட்டு பேசிவிட்டால், அது எல்லாமே காணாமல் போயிடும்.
சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.
நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா? என் மன்றத்து செயல்பாட்டைப்பாருங்க. எல்லாருடைய கட்சியை விட கட்டுப்பாடாக இருக்கும். நான் மத்தவங்க மாதிரி ‘ஷோ’ காட்டலை. ஜனங்க அன்புக்கு பிரதிபலனாக நான் என்ன செய்யப்போறேன்? இதற்குப் பதில்தான் அரசியலுக்கு நேரடியாக வருவது என்று முடிவெடுத்தேன்.
நான் மானசீகமாக நினைச்சுக்கிட்டு இருந்த குரு எம்.ஜி.ஆர்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை, அவர்கிட்டே என்னால் நெருங்க முடியவில்லை. நடிகர் ராஜேஷ் திருமணத்தில்தான் அவரை நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு வந்தது. எனது கைகளை தன் சிவந்த கரங்களுக்கு மத்தியில் வைத்து வணக்கம் சொன்னார். ‘நல்லாயிருக்கீங்களா’ என்ற உலகின் அழகிய வார்த்தையை அன்று நான் கேட்டேன். போகும்போதும் என்னை அருகில் அழைத்து கை அழுத்திப் போனார். ஆனால் எம்.ஜி.ஆரின் அருகிலிருந்து பழக முடியாததை, அவர் காட்டியிருக்கிற அன்பை மகனாக என்னை ஆசீர்வதித்து ஜானகி அம்மா பழகினார். மறக்க முடியாத ஜானகி அம்மாவைப் பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது.
(பொங்கி எழுவோம்)
தொகுப்பு: நா.கதிர்வேலன்.படம்: சித்ராமணி
எஸ்.விஜயன், திருப்பத்தூர்.வசனம் எழுதி நடிச்ச டி.ஆர்., பாக்கியராஜ் வெற்றி பெறமுடியவில்லை. மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நடிக்கிற விஜயகாந்த் எப்படி வெற்றி பெறுவார்னு ஒரு பத்திரிகையில் வந்திருக்கிறதே!
‘‘எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெயலலிதா இவர்களும் மற்றவர்கள் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தவர்கள்தான். உங்களுக்கு இந்தப் பதில் போதுமே!’’
கே.அழகியநம்பி, காங்கேயம்.உங்கள் மனைவியும் உங்களோடு அரசியலுக்கு வருவாரா?
‘‘அவங்களுக்கு குழந்தைகளைப் பார்த்துக்கறது, வீட்டை நிர்வாகம் பண்ணிக்கிறதுனு நிறைய வேலைகள் இருக்கு. என்னுடைய செயல்பாட்டில் நம்பிக்கை இருக்கிறவங்க அவங்க. என்மேல் அக்கறை நிறைய இருக்கும். என்னுடைய அரசியல் வேலைகளில் தலையீடு அளவுக்கு இருக்காது. ஒரு நண்பன் மாதிரி அவங்ககிட்டே ஆலோசனை கேட்பேன். இறுதி முடிவு என்னோடது.’’
பழ.தளபதி சண்முகம், கோவைநீங்க பி.ஜே.பி.யோடு அணிசேரப்போகிறீர்கள்னு சொல்றாங்களே! உண்மையா?
‘செப்டம்பர் வரை தினமொரு செய்தி வரும். அப்புறம் எனது கொள்கைகள், யார் பக்கம்னு தெளிவாகிட்ட பிறகு எந்தக்கேள்வியும் வராது. அரசியல் சுலபமில்லை தளபதி, நிறைய ‘ஹோம்ஒர்க்’ செய்துக்கிட்டு இருக்கேன். தினமும் பேசுகிற தலைவர்கள், பிரியப்பட்டு வந்து சந்திக்கிற பொதுவானவர்கள் எல்லார் கருத்தையும் கேட்டுக்கிட்டே இருக்கேன்.’’
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஆர்.எம். வீரப்பன்தான் முதல்வராக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், திடீர் மாற்றமாக முதல்வர் பதவியில் அமர்ந்தார் ஜானகி அம்மாள்.
பிறகு அவரே ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றார். நானே, ‘ஏழை ஜாதி’யில் ஒரு வசனம் வச்சேன். ‘என்னடா மக்கள் மக்கள்னு சொல்றே, மக்களுக்காக பாடுபட்ட மக்கள் திலகத்தின் மனைவியையே தோற்கடிச்சவங்க இந்த மக்கள்னு’ சொல்வேன். எல்லோரும் அதில் இருந்த நியாயத்தைப் பார்த்து கை தட்டினார்கள். எனக்கு ஜானகி அம்மாள் பழக்கமானதே ஒரு ஆச்சர்யமான நிகழ்ச்சி. எனது மூத்த மகன் பிரபாகரன் பிறந்திருந்த நேரம். அதே மருத்துவமனைக்கு யாரையோ பார்க்க வந்திருக்கிறார் அம்மையார். விஜயகாந்தின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு பார்க்க வந்திருக்கிறார். பிரேமலதாவிற்கு ஆச்சர்யமான விஷயம். அப்படியே காலில் விழுந்து ஆசி வாங்கியிருக்கிறார். அவரும் குழந்தையைத் தூக்கி, கொஞ்சிவிட்டுப் போயிருக்கிறார்.
நான் ஷ¨ட்டிங்கிலிருந்து திரும்பியதும் இன்னிக்கு வந்த வி.ஐ.பி. யார் தெரியுமா என்று கண்ணில் சந்தோஷம் துள்ளக் கேட்டார் பிரேமா. ஜானகி அம்மாவின் பெயரைச் சொன்னதும் அப்படியே மெய்சிலிர்த்துவிட்டேன். அடுத்து ‘நல்லவன்’ பட ஷ¨ட்டிங் ‘அப்பு ஹவுசில்’ நடந்தது. அருகில் இருந்த ஜானகி அம்மையார் என்னையும், எஸ்.எஸ். சந்திரனையும் சாப்பிட அழைத்தார். எஸ்.எஸ். சந்திரன் ‘அம்மா நான் உப்புப் போட்டு சாப்பிடுவேன். உங்க வீட்டில் சாப்பிட்டுவிட்டு, உங்களையே தாக்கிப் பேசுகிற நிலைமை வரும். நானும் பேசிடுவேன். அதனால் சாப்பிட மனசில்லை’யெனச் சொல்லிவிட்டார். நான்தான் சாப்பிடப் போனேன். உள்ளே ‘ராஜா தேசிங்கு’ பாடல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. ‘தலைவர் அதில் என்ன மாதிரி ட்ரஸ் போட்டிருப்பார் என்று பார்க்காமலே சொன்னேன். ஜானகி அம்மாவிற்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. ‘நீ இவ்வளவு எம்.ஜி.ஆர். ரசிகனா’ என்று மாய்ந்து மாய்ந்து கேட்டார்.
எம்.ஜி.ஆரை நெருங்க முடியாத குறைக்கு ஜானகி அம்மா பெரிதும் அன்பு காட்டினார். பிரேமா மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. அமெரிக்காவிலிருந்து திரும்பும்போதும் விதவிதமான பொம்மைகளை குழந்தைகள் பிரபாகரன், சம்மிக்கு வாங்கி வருவார். அவர்களுக்கு தங்கச் சங்கிலிகளைப் போட்டு அழகு பார்ப்பார். திடீரென்று ‘குழந்தைகளை தூக்கிட்டு தோட்டத்துக்கு வாம்மா’ என்று தொலைபேசியில் பேசுவார். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு போவோம். பேரன்கள் மாதிரி கொஞ்சுவார். குழந்தைகளும் பாட்டி, பாட்டியென்று உயிரை விடுவார்கள். எம்.ஜி.ஆர். எங்கே உட்கார்ந்து இருப்பாரோ, அங்கே போய் உட்காருவேன். எம்.ஜி.ஆர். பயன்படுத்திய போனையெல்லாம் தொட்டுப் பார்ப்பேன். அவர் மூச்சுக்காற்று அதில் கலந்து இருக்கும் என்ற எண்ணமெல்லாம் வரும். எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ‘டை’களையெல்லாம் என்னிடம் கொடுத்தார். திடீரென்று ஒருநாள் ‘விஜி, பிரேமா நீங்க இரண்டு பேரும் தோட்டத்திற்கு வந்திட்டுப் போங்க’ என்று கூப்பிட்டார். என்னவோ ஏதோவென்று உடனே அங்கே ஆஜர். ‘‘இதோ உனக்குப் பிடிச்ச பரிசு தர்றேன். தலைவர் பயன்படுத்திய பிரச்சார வேனை வச்சுக்கோ’ என்று வண்டிச் சாவியைக் கொடுத்தார்.
எனக்கும், பிரேமாவிற்கும் கண்ணீரே வந்துவிட்டது. ‘அம்மா’ என்று ஜானகி அம்மாவை கட்டிப்பிடித்து வணங்கினார் பிரேமா. என்னிடம் ‘நீ முன்னாடியே வந்து தலைவரைப் பார்த்திருக்கக்கூடாதா, இப்போது திரும்பிப் பார்க்காதவர்கள் எல்லாம் அவரிடம் எவ்வளவு உதவியைப் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு எம்.ஜி.ஆர். விசுவாசியாக இருப்பது தெரிந்திருந்தால் உன்னை பெரிய பதவியில் உட்கார வைத்து அழகுபார்த்திருப்பார்’ என்று அம்மா அடிக்கடி சொல்வார். ‘இந்த வேனை கேட்காதவர்களே இல்லை விஜி. பாக்யராஜ் முதற்கொண்டு எத்தனையோ பேர் மன்றாடிக் கேட்டார்கள். இது உனக்குக் கிடைச்சது ரொம்பப் பொருத்தம். இதை யாருக்குக் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைச்சபோது போட்டி இல்லாமல் நினைவுக்கு வந்தது உன் முகம்தான்’ என்றார் அம்மா.
அவர் அருகில் அமர்ந்துகொண்டு தலைவரைப் பற்றி நிறையக் கேட்பேன். நடந்ததெல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். அ.தி.மு.க. ஆரம்பித்து பட்ட கஷ்டங்கள், தலைவருக்கு நேர்ந்த அவமானங்கள், அதை அவர் சவாலாக எடுத்துக்கொண்ட விதத்தையெல்லாம் அப்படியே சொல்வார். ‘எனக்கு அரசியல் வரலை விஜி. வந்தவர்களுக்கு சாப்பாடு போடணும், உபசரிக்கணும். இவ்வளவு பணம் கொடுன்னு சொன்னால், கொடுக்கணும். அதுதான் எனக்குத் தெரிஞ்சது’ என்று சொல்வார். என் படங்களை விரும்பிப்பார்ப்பாராம். ‘உழவன் மகன்’ அவருக்கு ரொம்பப் பிடிச்ச படம் என்று சொல்வார். கலைஞர்கிட்டே கனிமொழி, ‘விஜி அண்ணன் ஆட்சி இருக்கும்போது அதிகமாக வரமாட்டாங்க. இல்லாதபோது சுலபமாக சந்திக்க வருவாரு’ என்று சொல்வாங்க. அதேமாதிரி ஜானகி அம்மாவும் ‘அவர் இல்லாதப்போ இப்படி அன்பு காட்டுறியே. நான் உனக்கு என்ன செய்யப்போறேன்’ன்னு சொல்வாங்க.
அவங்களுக்கு டயாலிசிஸ் பண்ணும்போது ரொம்ப சிரமப்படுவாங்க. எனக்கு நெஞ்சே வெடிச்சுப்போகும். டயாலிசிஸ் முடிஞ்சு ஒருநாள் ஆனதும், பிள்ளைகளைக் கொண்டுவான்னு சொல்லி கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க. இந்தத் தோட்டத்தை 99 வருஷ குத்தகைக்கு நீயே எடுத்துக்கோ என்று சொன்னார். ‘சரிம்மா ஷ¨ட்டிங் போயிட்டு வந்துவிடுகிறேன்’னு சொல்லி ஊட்டி போனேன். அம்மா இறந்துபோயிட்டதாக பிரேமா அழுதுக்கிட்டே போன் செய்தாங்க.
உடனே, அந்தக் கணத்திலேயே புறப்பட்டு வந்தேன். பார்த்தால் தோட்டத்தில் திருநாவுக்கரசு, ஆர்.எம். வீரப்பன் எல்லோரும் இருந்தாங்க. இறுதிச்சடங்கு சம்பந்தமான மற்ற எல்லா முடிவுகளையும் விஜயகாந்தே செய்யட்டும் என்று அவங்க தம்பி நாராயணன் சொல்லிவிட்டார். அம்மா இறக்கும்போது சொல்லியிருக்கக்கூடும். நானே என் அன்னையைத் தோளில் சுமந்தேன். அடக்கம் செய்தேன். எனக்கான உரிமையை எல்லோரும் ஆமோதித்தார்கள். என் தலைவருக்குச் செய்ய முடியாத மரியாதையை, என் அன்னை ஜானகி அவர்களுக்குச் செய்தேன். இன்னும் என் குழந்தைகளுக்கு ஜானகி பாட்டியை மறக்க முடிய வில்லை. படுக்கை அறையில் எம்.ஜி.ஆர்_ஜானகி அம்மாவின் படத்தில் இன்றைக்கும் கண்விழித்து எழுந்திருக்கிறாள் என் மனைவி.
(பொங்கி எழுவோம்)________________________________________
என் பிரியத்திற்குரிய ஷானகி அம்மாவை தோளில் இருந்து இறக்கித்தான் அடக்கம் செய்தேன். ஆனால் அவரை எந்நாளும் நாங்கள் மறந்ததில்லை. அம்மா இரண்டு வருடத்தில் எங்களை அன்பால் கட்டிப்போட்ட சம்பவங்கள் அதிகம். என் மனைவி மிகவும் பாதிக்கப்பட்டார். எனக்காவது சினிமா, ஜூட்டிங் என்று மனதை திசைதிருப்ப நிறைய விஜயங்கள் இருந்தன. கடைசியில் எத்தனையோ பேரை ஆளாக்கிய எம்.ஜி.ஆரின் மனைவி தனிமையில் இருந்தார். அண்ணி, அண்ணி என்று மாய்ந்தவர்கள் அவரை எம்.ஜி.ஆர் பிறந்த நாளுக்குத்தான் எட்டிப்பார்த்தார்கள். என்னையும், பிரேமாவையும் வைத்துக் கொண்டு அரசியல் விஜயங்கள் நிறையப் பேசுவார் ஷானகி அம்மா. எம்.ஜி.ஆருக்கு எதிரான சூழ்ச்சிகளை எம்.ஜி.ஆர் முறியடித்ததை சுவைபடச் சொல்லுவார். ‘‘வந்தவங்க வயிறு காயாமல் இருக்கணும், அதைத்தான் பெரிசாக நினைச்சேன்’’ என்று சிரித்துக்கொண்டே சொல்வார் ஷானகி அம்மா. ஒரு தடவை ஷெயலலிதாவும், சசிகலாவும் வந்திருந்தார்களாம். கொஞ்ச நேரம் நலம் விசாரித்துவிட்டு, சாப்பிட்டு விட்டு போனார்களாம். ‘‘மற்றவர்கள் நினைப்பது போல் நாங்கள் எதிரிகள் அல்ல’’ என்றும் சொல்வார். அப்போதுதான் சத்யா ஸ்டுடியோவை பெண்கள் கல்லூரியாக மாற்றவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் ஷானகி அம்மா.
‘‘ஷெயலலிதா செய்திருப்பார். நான்தான் அதை மறுபடியும் வலியுறுத்தவில்லை’’ என்று என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஷானகி அம்மா சொன்னார். அப்போது கலைஞர் ஆட்சியில் இருக்க ‘இதை நீங்கள் அவசியம் செய்யணும்’ என்று கேட்டுக் கொண்டேன். நாற்பதாண்டு கால நண்பர் என்று பேசுவதற்கேற்ப அதைச் செய்து தந்தார் கலைஞர்.
அ.தி.மு.க. ஆரம்பித்த பிறகு எம்.ஜி.ஆரின் ஈடுபாட்டைப் பற்றி பேசும்போது, ஜானகி அம்மாவின் கண்கள் பிரகாசமாகிப் போகும். உலகம் சுற்றும் வாலிபனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் தயாரிக்க ஆசைப்பட்ட ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’வில் நான் நடிக்கவேண்டுமென ஆசைப்பட்டார். அந்தக் கதை ஃபைலை மறதியில் எங்கோ வைத்துவிட்டு, அம்மா அலைந்து தேடிப்பார்த்தார். கடைசி வரைக்கும் கிடைக்கவேயில்லை. ‘உன் மனசுக்கு நீயெல்லாம் அரசியலுக்கு வந்தால் நல்லாயிருக்கும்’ என்று அடிக்கடி சொல்வார். நான் சிரிச்சிட்டு ‘தமாஷ் பண்ணாதீங்க அம்மா’ன்னு சொல்வேன். ஆனால் இன்னிக்குப் பாருங்க அரசியலுக்கு வரணும்னு இருந்திருக்கு. வர்றேன்.
இன்னும் சிலபேர் என்னை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க. அரசியல் சாக்கடை, அரசியல் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம், உங்களுக்கு ஏன் இந்த வம்புபிடிச்சவங்களோட வேலை என்று என் மேல் அக்கறைப்படுகிறவர்களை நான் வணங்குகிறேன். நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு நன்றி. நான் இவங்களுக்குக் கடமைப்பட்டு இருக்கேன். இவர்களுக்காக நான் அரசியலில் இறங்க வேண்டும் என்பதுதான் என் கனவு.
இப்ப இருக்கிற கட்சிகள் மாறி மாறி ஆண்டு மக்களுக்குச் செய்தது என்ன? ஒவ்வொண்ணுக்கும் இதுக்கு என்ன செய்தீங்கன்னு கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். நான் மக்களோட மனச்சாட்சியாக இருக்கணும். இது ஒண்ணுதான் மனசில் இருக்கு. பெரிய திட்டங்கள் கைவசம் இல்லை. நான் அரசியல் சாணக்யன் கிடையாது. அரசியலில் கரைபுரண்டு எழுந்தவன் இல்லை. நிறைய அரசியல்வாதிகளின் கசடு தெரியும். அவர்கள் உள்மனசு புரியும். ஜனங்க நம்பிக்கிட்டு இருக்கிறவர்களை பழகிட்டு, இவ்வளவுதானான்னு ஆச்சர்யப்பட்டு போயிருக்கேன்.
நான் என்னிக்கும் முதல் அமைச்சர் ஆவேன்னு சொல்லிக்கிட்டதில்லை. ஆனால் இங்கே சில பேருக்கு பதற்றம் வந்திருக்கு. நேரடியாக அரசியல் அனுபவம் வேணும்னு ஒரே கூப்பாடு இருக்கு. முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் எந்தப் போராட்டத்தில் கலந்துக்கிட்டு அந்தப் பதவிக்கு வந்தாரு! தயாநிதி மாறன் எந்தப் போராட்டத்தில் கலந்துக்கிட்டு டெல்லி வரைக்கும் மந்திரி ஆகியிருக்காரு! அன்புமணி எந்தப் போராட்டம், தியாகம் செய்து மத்திய மந்திரி ஆகியிருக்கார்? யாரும் வரக்கூடாது என்பது நம்ம கையில் இல்லை. மக்கள் சக்திக்கு முன்னாடி எதுவும் மேல் இல்லை. மலை மீது ஏறுகிறவரைதான் பிரமிப்பு களைப்பு, பதற்றம் எல்லாம். ஏறிவந்த பிறகு அந்த பிரமிப்பு போயிடும். ஒண்ணு சொல்றேன். தெளிவுபடவும் சொல்றேன். எனக்கு இனியும் பணம் வேண்டாம். நான் எளிமையானவன். என் கவனம் எல்லாம் மக்கள் மேலேயிருக்கு. தயாநிதிமாறனும், அன்புமணியும் வந்தபிறகு அரசியல் அனுபவம் வேணும், போராட்டத்தில் கலந்துக்கிட்டு சிறைக்குப் போயிருக்கணும், கட்சி அனுபவம் வேணும் என்றெல்லாம் யாரும் பேச வேண்டாம்.
எனக்கு இங்கே இருக்கிற அத்தனை பேருடைய அரசியலும் தெரியும். ஒரு தேர்தலுக்கு ஒருத்தர், மறு தேர்தலுக்கு இன்னொருத்தர்னு போகிற அரசியல் கூட்டணி அசிங்கமும் எனக்குத் தெரியாதா, எனக்கு அவங்க சொல்ற அரசியல் தெரியாதுதான். அதாவது கொள்ளை அடிக்கிற அரசியல் தெரியாது. குறுக்கு வழி அரசியல் தெரியாது. உள்ளே ஒண்ணு வச்சுக்கிட்டு, வெளியே அரவணைக்கிற புத்தி எனக்குக் கிடையாது. என்கிட்டே ஒண்ணும் இல்லையென்றால், ஏன் என்னைப்பத்தி பயப்படணும்? உங்க கட்சியிலிருந்து பத்தில் இரண்டு பேர் பேசி, ‘நீங்க அரசியலுக்கு வரணும்’னு சொல்றாங்களே, எதுக்காக? எல்லோருக்கும் மாற்றம் தேவையாக இருக்கு. அந்த மாற்றத்திற்குத்தான் வழி தேடுறேன். மக்கள் ஏத்துக்கிட்டா நான் வரப்போறேன். நான் ஒண்ணும் சர்வாதிகாரியாக வரப்போறதில்லையே. ஆக, என் மேல் உங்களுக்கு ஒரு பயம் இருக்கு. அடடா, செப்டம்பரில் கட்சின்னு சொல்லிவிட்டது தப்போன்னு நினைக்கிறேன். உங்களுக்காக சீக்கிரமே வந்திருக்கணும்.
சிவாஜி அண்ணன்தான் அடிக்கடி சொல்வார். ‘டேய் மதுரைக்காரா. மனசில் இருக்கிறதையெல்லாம் பேசுற பயலா இருக்கே. புள்ளைகளை படிக்க வையி. தமிழ் தமிழ்னு சொல்லிட்டு, அவங்க பிள்ளைகளை டெல்லியில் கொண்டுபோய் விட்ருவாங்க’ன்னு சொல்வார். நடிகர் சங்கத்தில ஜாக்கிரதையாக பழகிக்கோ. வேட்டியை கட்டிக்கிட்டு வெள்ளந்தியா திரியறே. ஈகோ பிடிச்சவங்க இருக்கிற இடத்தில் இருக்கே. என்னையே சிமெண்ட் மூட்டையை திருடிட்டு போயிட்டான்னு சொன்ன இடம்பா அது’’. ‘செவலை’ அண்ணனே (எம்.ஜி.ஆரை அப்படிச் சொல்வார்) இந்த இடத்தில் உட்கார்ந்து திணறிப் போயிட்டாருடா’ன்னு சொல்வார். இப்படித்தான் எந்த ஒரு இடத்திலிருந்தும் பாடம் படிச்சிருக்கேன். சாதியோ, மதமோ எதை வேண்டுமானாலும் மனசுல வச்சுக்குங்க அதை அரசியல் ஆக்கி மக்களோட நிம்மதியை கெடுக்காதீங்க. அப்படி கெடுக்கிற எந்த முயற்சியையும் அரசியல் கட்சிகள் கைவிடணும். அதற்கு முன்மாதிரிதான் என் கட்சி!
(பொங்கி எழுவோம்)
தலைவர் எம்.ஜி.ஆர். எத்தனையோ கதாநாயகிகளோடு நடித்திருக்கிறார். ஆனால் ரசிகர்களின் மனதைத்தொட்டவர்கள் சரோஜாதேவி, ஜெயலலிதா மட்டும்தான்.
எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபிறகு ஜெயலலிதா நடிச்ச தனிப்பட்ட படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சோம். மதுரையிலிருந்து ஷ¨ட்டிங் பார்க்க வந்தபோது ஏ.வி.எம்.மில் அவரைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரிடம் பிடித்தது அவரது நடனம். அவ்வளவு ஈஸியாக, அருமையாக சளைக்காமல் ஆடுவார். முகராசி படத்தில் எம்.ஜி.ஆரும் அவரும் ஷார்ட் பேண்ட், ஷார்ட் கட்டம் போட்ட ஷர்ட் போட்டு, கம்பை குறுக்காக வைத்துக்கொண்டு போஸ் கொடுத்திருப்பார்கள். இரண்டு பேரும் கண் படுகிற அளவுக்கு அழகாக இருப்பார்கள். எம்.ஜி.ஆர். கூட நடித்ததில் அவரது ரசிகர்களுக்கு ஜெயலலிதா மட்டும்தான் ஒட்டுதல் ஆனார். அவர் சிவாஜியோடு நடிக்க ஆரம்பித்ததும் எங்களை மாதிரி எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தது. எம்.ஜி.ஆர். தீவிர அரசியலில் இறங்க, இவர் நடிக்கப்போக, நாளாக நாளாகத்தான் அந்த வருத்தம் மறைந்தது.
எம்.ஜி.ஆர். என்கிற பிரமாண்டமான சக்தியோடு நடிச்சாலும், அவங்க ரசிகர்களை தனியாக கட்டிப்போட்டு வைப்பாங்க.
ஸ்டார் டி.வி.க்கு அவங்க பேட்டி கொடுத்தாங்க. பழைய வாழ்க்கை பற்றிய பேட்டி அது. என் மனைவி பிரேமலதா மொழிபெயர்த்துச் சொல்லச் சொல்ல அவ்வளவு அற்புதமாக இருந்தது. கேட்ட கேள்விகளும், அம்மாவின் அற்புதமான பதில்களும் அவ்வளவு உண்மையாக இருக்கும். சந்தியா அம்மா மேல் வைச்சிருந்த அவங்களோட மாறாத பிரியம், திடீரென்று நல்லா படிச்சிட்டு இருந்த பொண்ணு சூழ்நிலையால சினிமாவிற்கு வரவேண்டிய நிர்ப்பந்தம், அதை எதிர்கொண்ட விதம் எல்லாத்தையும் தனியாக, அழகான ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டே வருவார். பார்த்தவர்கள் எல்லோரும் உருகிப்போன பேட்டி அது. அம்மாவின் மிகச் சிறந்த பேட்டி.
எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவர் அமைதியாக தலைவரின் தலைமாட்டில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது அவரைப் படுத்திய பாடு, அவர் பட்ட அவமானங்கள் எல்லாத்தையும் ஜீரணித்துக்கொண்டு அவர் தாங்கி நின்ற விதம், இன்னிக்கு அவர் காலூன்றி நிற்பதற்கான அச்சாரமாகத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர். அவரை கொள்கை பரப்புச் செயலாளராக ஆக்கினார். அப்புறம் அதற்கும் மேலே வந்தது எல்லாம் அம்மாவோட திறமைதான். ஆரம்பத்தில் ஆட்சியில் செய்த சிறுசிறு குற்றங்களை விடுங்கள், இன்றைக்கும் அவரது வழிமுறைகள் பெண்களால் பின்பற்றப்பட வேண்டியவை. சிறு கஷ்டத்திற்கும் அழுது துடிக்கிற பெண்களுக்கு மத்தியில் அவரின் தனித்த கலங்காத தன்மை தன்னிகரில்லாத உதாரணம். இந்திராகாந்தியை மட்டும் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டாம், இனி அம்மாவையும் உதாரணமாகச் சொல்லுங்கள்.
எனக்கு அவங்ககிட்டே பிடிச்ச விஷயம், அவங்க மத்த அரசியல்கட்சி பற்றி கவலைப்பட மாட்டாங்க. ஒரு வியூகத்தை அமைச்சுக்கிட்டு, அப்படியே போய்க்கிட்டு இருப்பாங்க. என்னை வைச்சே சொல்றேனே, என்னடா விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போறாரே என்று கவலைப்படமாட்டார். மத்தவங்க படுகிற அவஸ்தையை அவர் படமாட்டார். இதுதான் முடிவு என்றால் முடிவு, லாபமா, நஷ்டமா முடிஞ்ச பின்னாடிதான் பரிசீலிப்பார். இதை நம்ம ஆளுங்க ஆணவம், அகம்பாவம்னு சொல்வாங்க. உண்மையில் அதற்குப் பெயர் தன்னம்பிக்கை. தவறுகளைத் திருத்திக்கமாட்டார்னு அவரைப்பத்தி பேச்சிருக்கு. அதுவும் உண்மையில்லை. போன தடவை பாருங்க, எங்கே பார்த்தாலும் சசிகலா, சசிகலான்னு இருந்தது. இன்னிக்கு அவங்க ப்ரேமுக்குள்ளேயே இல்லை. போன தடவை ஊழல், ஊழல் என்று சொன்னாங்க, இந்தத் தடவை அப்படி எங்கேயாவது சொல்றார்களா! 90_95_ல் என்ன பேசினாங்களோ, 2001_2005_ல் அந்தப் பேச்சே இல்லை. அன்றைக்கு சினிமாவிலும் ஜெயலலிதாதான் முதலிடம். இன்னிக்கும் அரசியலியலும் அம்மாதான் முதலிடம். உண்மை இது. அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் கூட ஏற்றுக்கொள்ள கூடிய உண்மை இது.
இன்றைக்கு தனிப்பட்ட குணாதிசயங்களுக்காக மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவர்கள் அம்மாவும், கலைஞரும்தான். மத்த தலைவர்கள் வருவாங்க. போவாங்க. அவங்களுக்கான தனிப்பட்ட அடையாளங்கள் கிடையாது. நான் அம்மாவைச் சந்தித்து பேசியபோது கூட, அவங்க ஸ்டைலை ரசிச்சிருக்கேன். தனியாக கம்பீரமாக உட்கார்ந்துகொண்டு, நாம் சொல்றதைக் கேட்கிற விதம், அணுகுகிற விதம், எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கும். சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லணும் என்கிற பயம் வந்திடும். அவங்களோட பெரிய புகழுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. அவங்களோட வள்ளல் தன்மை. இன்னிக்கு பேப்பரில் பாருங்க. தொழிலாளருக்கு 25 ஆயிரம் நிதிஉதவி. ஐந்து போலீஸ்காரங்க குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் உதவி, காரில் அடிபட்டு இறந்த அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் உதவி இப்படித்தான் இருக்கும். தினம் நிதி கொடுத்து, அவங்க வாழ்க்கையில் விளக்கேற்றியதுதான் வருமே தவிர, இன்னாரைச் சந்தித்தார், இன்னார் பேசினார் என்பது குறைவுதான். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடுத்துப் பழகிய முதல்வர் அம்மா தவிர யாராவது இருக்காங்களா? முன்னாடி கோடையில் தண்ணீர் கிடைக்காமல் தடுமாறினோம் இப்பப் பாருங்க அம்மா அனாயாசமாக சமாளித்த விதத்தை. பிணீts ஷீயீயீ tஷீ கினீனீணீ. +2 வரைக்கும் மாணவர்களுக்கு புத்தகம், சைக்கிள் இதெல்லாம் எம்.ஜி.ஆரின் ஈடுஇணையற்ற மதிய உணவுத் திட்டம் மாதிரி வெற்றியடையும்.
இன்றைக்கு எத்தனையோ துயரப்பட்ட பெண்கள் முன்னுக்கு வரலாம் என்பதற்கு அம்மாதான் உதாரணம். ரோல்மாடல். இதைப் படிக்கிற அரசியல்வாதிகள் கிண்டல் பண்ணலாம். நீங்க கிண்டல் செய்தாலும் அதுதான் உண்மை. அம்மா பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருந்தால், இந்நேரம் எல்லோரும் புலம்பித் தீர்த்து இருப்பாங்க. அவங்களை முதுகில் குத்தியவர்கள் அதிகம். அதை இன்றைக்கு வரைக்கும் பேட்டியில் சொல்லிக்கிட்டதில்லை. தன்னந்தனியாக மீண்டு வந்து, சிரித்த முகமாக எல்லாத்தையும் மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அம்மாவோட மூன்று விஷயங்கள்தான் அவங்களோட வெற்றி. துணிச்சல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மாதவிகிட்டே அம்மா ஒரு வசனம் பேசுவாங்க. ‘அடியே’ கடலின் ஆழத்தைக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பெண்களோட மன ஆழத்தைக் கண்டுபிடிக்க முடியாது. போ’ன்னு சொல்வாங்க. அது வசனமோ இல்லையோ, அதுதான் நிஜம். அவர் கைதாகிப் போனபோது வீட்டைப்பூட்ட ஆள் இல்லையாம். என்னவொரு துயரம் பாருங்க. அவங்க சிறையில் பட்ட கொடுமைகளை போலீஸ் அதிகாரிகள் சொல்லக்கேட்டு இருக்கிறேன். அம்மா இதையெல்லாம் சொல்லி என்றைக்கும் குமுறியது கிடையாது. அப்படி குமுறினால் நிஜமாக இங்கே பூகம்பம் வெடிக்கும்.
எனக்கு அவங்க மேலே உள்ள சின்னக்குறை ஒண்ணுதான். அவங்களை சீக்கிரமாக அணுக முடியவில்லை. சிஷீனீனீuஸீவீநீணீtவீஷீஸீ ரீணீஜீ இருக்கு. அதை அவங்க சரிசெய்தே ஆகணும். என்னோட வேண்டுகோள் இது. இதை மட்டும் சரி செய்துவிட்டால் அவங்க இன்னும் விஸ்வரூபம் எடுப்பாங்க. அப்புறம் யாரும் அவங்களைத் தடுக்க முடியாது _ யாரும்!
(பொங்கி எழுவோம்)
இந்த வாழ்க்கையை எங்கே கத்துக்கிட்டேன்னு நினைச்சீங்க, ரைஸ்மில்லில்தான். வந்து நிக்கிற வேலைக்காரங்களைக் கவனிப்பேன். அப்படியே உயிரை உருக்கும். இரண்டு மூணு பேருக்கு ஒரு வாளிச்சட்டி சோறுதான் இருக்கும். ‘மாங்கு மாங்கு’ன்னு உழைக்கிறதுக்கு அந்த சோறு என்னத்தைக் காணும்! மத்யானம் பசி தொண்டைக்கும் வயிற்றுக்கும் இருக்கும்போது தலைக்கட்டை அவுத்து உட்காருவாங்க. நான் சத்தமில்லாமல் வீட்டிலிருந்து வந்திருக்கிற என் பெரிய கேரியரை அவங்க முன்னாடி வைப்பேன். ‘அவசரமா வெளியில் போகவேண்டியிருக்கு’ன்னு சொல்லிவிட்டு, ஒரு வேலையும் இல்லாமல் வெளியே கிளம்புவேன். ருசியாக இருக்கிற சாப்பாட்டுக்கு அடிதடி நடக்கும்.
உலகத்திலேயே பெரிய கொடுமை பசிதான்னு முடிவு பண்ணினது அந்தக்காலம்தான். வயிறு காஞ்சவனுக்கு என்ன சொன்னாலும் தலையில் ஏறாது என்று புரிஞ்சதும் அந்தச் சமயம்தான். ரைஸ்மில்லுக்குள்ளே மதிய உணவுத்திட்டத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தினேன். அதையே நம்ம தலைவர் பெரிசா பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்து மக்கள் மனசை அள்ளிட்டுப் போனார். மனுஷனுக்கு எது கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது. இன்னும் வேணும், இன்னும் வேணும்னு ஆசையாகக் கேட்டுட்டே இருப்பான். அவன் போதும் சாமின்னு சொல்கிற ஒரே விஷயம் சோறு மட்டும்தான். அதுதான் ஆரம்பத்திலேயே மனசில் பதிஞ்ச விஷயம். என்னால் கொடுக்க முடிஞ்சது. செய்யறேன்.
நான் சம்பாதிக்கிறது மக்களோட காசு. என் உழைப்புக்கு அதிகமாகவே ஊதியம் தர்றாங்க. அதில் ஒரு பகுதியைப் படிப்பு, தையல்மிஷின்னு அவங்க உதவிக்காக செலவழிக்கிறது என்னோட பொறுப்பு. காசை இறுக்க முடிஞ்சு வைச்சுக்கிட்டு இதை கிண்டல் பண்ணுகிறவர்களை எனக்குத் தெரியும். இவர்களை ரொம்ப ஈஸியாக அலட்சியம் செய்துவிடுவேன். நான் செலவழிச்சு படிச்சு வந்தவங்க டாக்டராக, வக்கீலாக ஏன் ஐ.ஏ.எஸ். ஆபீசராகக்கூட இருக்காங்க. சந்தோஷமாக இருக்கு. நல்ல நாளுக்கு, கல்யாணம் செய்தால் வந்து வாழ்த்துங்கன்னு வந்திட்டுப்போனாங்க. அப்படி வந்திட்டுப்போறவங்களைப் பார்க்கிறபோது கிடைக்கிற சந்தோசம் பெரிசு. அதை அனுபவிச்சுப் பார்த்தால் தெரியும். அவங்க ஈரம் கசிஞ்சு நம்மை கும்பிடும்போது, அந்தப் புண்ணியம் நம்மை காலத்துக்கும் காக்கும்.
ஆரம்பிச்சு இருபது படத்திற்கும் மேலே ஹீரோவாக நடிச்சு முடிச்சிட்டுப் பார்த்தால் திடீர்னு படமே இல்லை. ஆரம்பத்திலே இருந்தே என்னுடைய பயணம் ஈஸியாக இல்லை. யாருடைய ஆதரவும் இல்லை. எனக்கு தமிழ் தெரியாது என்று காரணம் சொல்லி இங்கிருந்து விரட்டப் பார்த்தாங்க. இந்த இடத்தில்தான் மதுரைக்குத் திரும்பக்கூடாது, போராடணும் என்று முடிவு பண்ணினேன். மதுரைக்காரர்களுக்கு இன்னிக்கும் பாருங்க, நாக்கு புரளாது வல்லினம், மெல்லினம் சரியாக வராது. அதை வைச்சுக்கிட்டு விளையாட்டுக் காட்டினாங்க.
வாழ்க்கையில் வசதி கொஞ்சம் கூடியிருக்கே தவிர, அதே விஜய்ராஜ்தான் இந்த விஜயகாந்த். அன்னிக்கு நண்பனாக கூட இருந்தவங்கதான், இன்னிக்கும் கூட இருக்கிறவங்க. இந்த வரவேற்பறையைத் தாண்டினால், நம்ம வீட்டுக்கு வந்திட்டோமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்திடும். எந்த ஆடம்பரமும் மனசைத் தொட மாட்டேங்குது. மனுஷனுக்கு எளிமைதான் முதல் நல்ல அடையாளம்னு நம்புறவன் நான். பிறந்தநாள் வந்தால் தி.நகர் ராஜாபாதர் தெருவே ததும்பி நின்னுச்சு. நீங்க கல்யாணம் கட்டி சாலிக்கிராமத்துக்குப் போன பின்னாடி ராஜாபாதர் தெரு நிரம்பிப் பார்க்கலைன்னு சொல்வாங்க. அப்புறம்தான்னு கொடி கேட்டாங்க ரசிகர்கள். எனக்கு எவ்வளளோ செய்திருக்காங்க ரசிகர்கள். கோவில் கட்டி கும்பிடுவது மாதிரி பக்தியோடு இருக்காங்க. ‘அண்ணே’ங்கிற வார்த்தைக்கு மறுவார்த்தை இல்லை. ‘கேப்டன்’னு செல்லமாகக் கூப்பிட்டாங்க.
கொடின்னு வந்தபிறகுதான் நம்ம அண்ணன் அரசியலுக்கு வரணும்னு அவங்களுக்கு பிரியம் வந்திடுச்சு. என் பலம் ரசிகர்கள். அவர்களுக்காக எதையும் செய்யணும் என்ற மனசு இருக்கு. எனக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகாரங்ககிட்டேயிருந்து அடி, உதை வாங்கியிருக்காங்க. எனக்கு பெரிய ஆசைகள் எதுவும் கிடையாது. எனக்குன்னு ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும். இராணுவத்திற்கு இணையான கட்டுப்பாடு இருக்கு. அண்ணனுக்காக எதையும் செய்யணும் என்ற பாசம் கொண்டவங்க என்மேல் மொத்த உயிரையும் வைச்சிருந்தாங்க. முடிஞ்சவரைக்கும் நற்பணிகள் செய்வோம்னு அவர்களை ஒரு ராணுவம் மாதிரி தயார்படுத்தி வைச்சிருக்கேன். எந்த சக்தியாலும் அவங்களை திசை திருப்ப முடியாது. ஆசை வார்த்தை காட்டி இழுக்க முடியாது. பயமுறுத்தி பணிய வைக்க முடியாது. எனக்கும் என் ரசிகர்களுக்கும் நடுவே யாரும் வித்தை காட்டி விளையாட முடியாது. திண்டிவனம் பக்கம் எவ்வளவோ மிரட்டிப் பார்த்தாங்க. அங்கே போலீஸ்கிட்டே அடிவாங்கும்போது அம்மாங்கிறதுக்கு பதிலா ‘அண்ணே’ன்னுத்தான் கத்தியிருக்காங்க.
இவர்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யணும். அவங்களுக்கு தலைவனாக இருக்கணும். அதைக் களமாக வைச்சுக்கிட்டு, இந்த ஜனங்களுக்கு நன்மை செய்யணும். எனக்கு நீட்டி முழக்கி கொள்கை விளக்கம் செய்யத் தெரியாது. எனக்குத் தெரிஞ்சது ஜனங்க சௌகரியம்தான். அவங்க முகம் சுளிக்க வைக்கிற அரசியல் எனக்குப் பிடிக்காது. நான் தனிநபர் அல்ல. என்னை கொஞ்சம் ஈஸியாக நினைக்கிற அரசியல்கட்சிகளுக்கு நிறைய வேலையிருக்கு. என் மேலே அன்பு காட்டுகிற ஜனங்களுக்கு நான் இப்போதைக்கு செய்யப்போறது அரசியலுக்கு வருவதுதான். ஐந்நூறு பேருக்கு உதவுவது ஐந்தாயிரம், ஐந்து லட்சம் என்று பரவட்டுமே என்ற ஆதங்கம்தான். முக்கியமாக எல்லோரும் தெரிஞ்சிக்க வேண்டியது, எல்லாம் இருந்துதான் நான் அரசியலுக்கு வர்றேன். ஜனங்களோட சல்லிக்காசு எனக்கு வேண்டாம்.
எல்லோரும் செய்கிற அரசியல் என்னால் செய்யமுடியாது. அப்புறம் ‘நீ எதுக்கு புதுசா’ன்னு ஜனங்க கேள்வி கேட்பாங்க. எனக்கு தேவைக்கு மேலே பணம் இருந்தாலும், சொகுசா வாழ்ந்திட்டுப் போக மனசு கேட்கலை. என்னால் முடிஞ்ச நாலைந்து விஷயங்களைச் செய்தேன். பார்க்கிறவங்க, இதைப் பெரிய அளவில், ஜனங்களோட பிரதிநிதியாக இருந்து செய்தால் நல்லாயிருக்கும்னு சொல்றாங்க, கொண்டு செல்ல தொண்டர் படை இருக்கு. அப்புறம் சோம்பிக் கிடந்தால் அது தகாது. அதனால்தான் இறங்கிட்டேன்.
என்னோட முன்மாதிரியானவர்கள் காமராஜரும், எம்.ஜி.ஆரும்தான். அவங்க ஏழை ஜனங்களைப்பத்தி எப்பவும் யோசிச்சவங்க. டவுன்ஹால் ரோட்டில் காமராஜரைப் பார்க்க அப்பா கூட்டிட்டுப் போனதை இப்பத்தான் நினைச்சுப்பார்க்கிறேன். எவ்வளவு உன்னதத்தலைவரை அவருக்கு வேண்டிய நியாயம், கவுரவம் செய்யாமல் இழந்திட்டோம்னு இப்பத்தான் தெரியுது. இன்னொரு காமராஜர், எம்.ஜி.ஆர். இப்போது இருந்தால் நான் அரசியல் பக்கமே தலைவைத்து படுத்திருக்க மாட்டேன். மக்களுக்கு நாம்தான் நல்லது செய்யணுமா, யாராவது நல்லது செய்தால் போதுமே.
மானசீகமாக காமராஜர், எம்.ஜி.ஆரிடம் ஆசி வாங்கிட்டுத்தான் கட்சியை ஆரம்பிக்கப் போறேன். தீபம் மாதிரி தன்னையே எரிச்சுக்கிட்டு ஏழைகளுக்காக வாழ்ந்தவங்கதான் எனக்கு முன் மாதிரி. அவங்க. அது அல்லாமல் இன்னொருவரிடமும் நான் ஆசி வாங்கப் போறேன். அந்த ஆசிர்வாதம் யாரிடமிருந்து?
(பொங்கி எழுவோம்)இத்தனை வாரமும் உங்களுக்கு நான் வளர்ந்த அரசியல் சூழல், என்னுடைய அரசியல் விருப்பம், நான் நேசித்த தலைவர்கள், நான் சந்தித்த தலைவர்கள் பற்றியெல்லாம் சொல்லிவந்தேன்.
நான் அரசியலுக்கு வருவேன்னு பகிரங்கமாக அறிவிச்சபிறகு நான் சந்தித்த சில கேள்விகள்ல முக்கியமானது_விஜயகாந்துக்கு என்ன அரசியல் தெரியும்? அப்படிங்கிற கேள்விதான். எனக்கு இப்பிடி கேக்கறவங்களைப் பார்த்தால் பாவமா இருக்கு. அரசியலுக்கு வர விரும்புகிற ஒரு மனிதனுக்கு தன்னுடைய இன மக்களை, நாட்டு மக்களைத்தான் தெரிஞ்சிருக்கணுமே தவிர, ஏதோ காலேஜ் சர்டிபிகேட் மாதிரி அரசியல் கட்சியில சேர்ந்து பழகி வரணும் என்ற அவசியம் இல்லை. தவிர இந்த நாட்டில் இருக்கிற மனிதர்களில் யார் அரசியலுக்கு வெளியே நிக்கறாங்க சொல்லுங்க? ஓட்டுப் போடறவங்க தனக்கு விருப்பமான அரசியலைத் தீர்மானிக்கிறாங்க. ஓட்டுப் போடாதவங்க அரசியலை வெறுத்துட்டாங்கன்னு அர்த்தமா? அவங்க இருக்கிற அரசியல் பிடிக்காமல் இன்னொரு நல்ல அரசியலுக்கு ஏங்கறாங்க. அவ்வளவுதான்.
என்னோட அரசியல் ஒவ்வொரு தமிழனுக்கும் நெஞ்சில் நிம்மதியைக் கொண்டு வரப்போகிற அரசியல். இருக்கிறவங்க நல்ல அரசியல் செய்திருந்தால் இந்த நாட்டில் சுபிட்ஷம்தானே இருந்திருக்கணும்? இந்த அரசியல்வாதிகளோட நோக்கம் மக்களுக்கு நல்லது செய்யறதுதான்னு இருந்தால், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஏழைஜாதி நிம்மதியாகத்தானே இருந்திருக்கணும்? ஏன் இல்லை. அப்புறம் எதுக்கு நமக்கு ஒரு அரசியல்? நல்லதே தெரியாத இந்த அரசியலை நானும் தெரிஞ்சுக்கணுமா? வேண்டாங்க. சந்தர்ப்பவாத அரசியலையும், மக்களைத் துன்பத்தில் தள்ளும் அரசியலையும் நாம் எல்லோரும் சேர்ந்து ஒழிச்சுக்கட்டுவோம். நான் இங்கு முதலில் கை நீட்டி இருக்கேன். கூட என் மன்றத்து ஆட்கள் கைநீட்டி இருக்காங்க. நீங்களும் கை கொடுங்க. எல்லாக் கைகளும் ஒண்ணா சேர்ந்தால் கிடைக்கிற சக்தியில் புதிய அரசியல் பிறக்கும். அந்த வெளிச்சத்தில் நாம் வாழ்வோம்.
நான் எல்லா கட்சித்தலைவர்களையும், சில முக்கியமானவர்களையும் சந்திக்கறதைக்கூட நிறைய விமர்சிக்கிறாங்க. அவங்களை எல்லாம் நல்லவங்கன்னு சொல்றதுக்கு நீங்க எதுக்கு வர்றீங்கன்னு கேட்கிறாங்க. நான் அவங்களை, சந்திச்சப்ப நடந்த நல்ல விஷயங்களை எடுத்துச் சொன்னேன். அதுக்காக அவங்களோட கொள்கைகளை எல்லாம் நான் அப்படியே ஒத்துக்கறேன்னு அர்த்தமே இல்லை. அவங்களோட தவறுகளையும், மோசமான பக்கங்களையும் அரசியல் மேடைகளில் கண்டிப்பாக எதிர்ப்பேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டும் என்னோட அரசியல் இல்லை. நல்ல பக்கத்தையும் பாராட்டுகிற நாகரிகம் நிறைந்த அரசியல் என்னோடது.
யார் எந்தக் கட்சிக்கு வந்தாலும், பதவிக்கு வந்தாலும், கட்சி ஆரம்பிச்சாலும் நீ எந்த ஜாதின்னு கேட்கிறாங்க. இதை வச்சே சில கட்சிகள், தலைவர்கள் பிழைப்பு நடத்தறாங்க. கூடவே ஜாதியை ஒழிப்பேன்னு நாடகமாடுகிற கும்பலும் உண்டு. நாம் விரும்பியோ, விரும்பாமலோ இந்த மாதிரி சில அடையாளங்கள் நமக்கு பொறக்கும்போதே வந்துடுது. அது ஒரு அடையாளம், அவ்வளவுதான். அதை ஏன் நம்மைப் பிரிக்கிற சுவராகப் பார்க்கணும்? ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டும் வெட்டிக்கிட்டும் சாகறதுக்கு நமக்கு ஒரு ஜாதி தேவையா?
விஜயகாந்தோட அரசியல், ஜாதியை வச்சு நடக்கிற பிரிவினையை எதிர்க்கும்.
என் மூச்சு என்றைக்கும் தமிழ்தான். அதை அவங்க கவனிக்கத் தவறுகிறார்கள். அவங்களுக்கு வெட்டிப்பேச்சு முக்கியம். தமிழ் தமிழ்னு சொல்லி இந்தத் தலைவர்கள் எல்லாம் நம்மளை ஏமாத்தினது போதும். இந்த தலைவர்கள் எல்லாம் அவங்க பசங்களை, பேரனுங்களை பெரிய பெரிய கான்வென்ட்ல படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிட்டாங்க. நாம் ஏமாந்தது மாதிரி நம்ம பிள்ளைகள் ஏமாற வேண்டாம். நமக்கு தமிழ் வேணும். அது உயிர்தான். இப்ப இருக்கிற சூழ்நிலையில் ஆங்கிலமும் வேணும். என்னோட கட்சி கொள்கைன்னு சொல்லி உங்களை, உங்க தலைமுறையை ஏமாத்தாது.
தமிழ்நாடு மட்டுமல்ல, குஜராத், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, கார்கில் என்று என் உதவிக்கரங்கள் நீண்டிருக்கு. நான் எந்தக்கட்சியாலும் உருவாக்கப்பட்டவன் இல்லை. மக்களால் வளர்க்கப்பட்டவன். நம்ம தலைவர்களுக்கு கூட்டம் சேர்க்க நடிகன் வேணும். அவனை பெரிய இடத்திற்கு வைச்சுப் பார்க்க ஆசைப்படமாட்டாங்க. அவங்க நடிகர்களைப் பயன்படுத்திக்குவாங்க. ஆனால் வெளியே நடிகனுக்கு அரசியல் தேவையான்னு கேள்வி கேட்பாங்க. இரண்டு டிவிக்குள்ளே அடிச்சிக்கிறதுதான் இப்ப நம்ம பிரச்னையா ஆகிப்போச்சு.
அரசியலுக்கு வர்றீங்களே பெரிய பணம் வேணுமேன்னு பலபேர் கேக்கறாங்க. வருஷாவருஷம் 25 லட்சம் ரூபாய் ஏழைமக்களுக்கு தர்றேன், ஆயிரக்கணக்கில் படிக்க வைக்கிறேன், நூறு தையல்மிஷினும், ஊனமுற்றார்களுக்கு வண்டியும் தர்றேன். எல்லாமே மக்கள் எனக்குக் கொடுத்த பணம். யார்கிட்டேயும் பிடுங்கித் தரலை. உழைச்சு, சம்பாதித்த பணம். எனக்கு ஆசை கொஞ்சம் பேருக்குச் செய்றதை, விஸ்தாரமா செய்ய முடியாதான்னு. அதுதான் அரசியலுக்கு வர்றேன்.
என்கிட்டே இவ்வளவு பெரிய அரசியலுக்கு பணம் இல்லை. மக்களோட மனம் இருக்கு. அதுல எம்மேல வச்சிருக்கிற அன்பு இருக்கு. அதை நம்பித்தான் அரசியலுக்கு வர்றேன். நான் ஒரு சாதாரண ஆள். என்னை தன்னோட கைகளால் அள்ளித் தூக்கி உசரத்துல வச்சு அழகு பார்த்த தமிழ்நாட்டுக்கு ஏதாவதுசெய்ய வேண்டாமா? ஒரு இயக்கமா இருந்தால், அதை ஒரு ஒழுங்கோட செய்ய முடியும். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே பலபேர் திட்டம் போட்டு பல துரோகம் செய்யறாங்க. சில விஷயங்கள்ல தப்பிச்சு வெளியே வர்றேன். சில விஷயங்கள்ல சின்ன காயம். சண்டைக்கு வந்த பிறகு காயத்தைப் பற்றிக் கவலைப்படலாமா? துரோகங்களை வெல்வேன். அதற்கு மக்கள்தான் எனக்கு உறுதுணை.
செப்டம்பர் மாநாட்டுக்குப் பிறகு முழுநேர அரசியல் தீவிரம் அடையும். ஒவ்வொரு நல்ல ஆன்மாவையும் எனக்குத் துணையாக எதிர்பார்க்கிறேன். மக்கள் சக்திதான் மகத்தானது. நான் உங்களுக்குச் சொல்ல விரும்பறது ஒண்ணே ஒண்ணுதான். உங்க மனசாட்சிக்கு நல்லவன்னு தோணுறவங்களுக்கு துணையா நில்லுங்க. புதிய அரசியலைக் கையில் எடுத்து, புதிய தமிழகத்தை உருவாக்கலாம். போனதடவை முக்கியமானவர்கிட்டே ஆசீர்வாதம் வாங்கப் போறேன்னு சொன்னேன் இல்லையா! அடுத்தவாரம் அந்தப் பேரனுபவம்.
(பொங்கி எழுவோம்)நான்தான் நினைச்ச இடத்திற்கு போகமுடிகிறதில்லை. நீங்க சொன்ன இடத்திற்கு வர்றேன். சொல்லுங்க _ என்று நம்மிடமே கேட்டார் விஜயகாந்த். ‘‘இத்தனை வாரம் மக்களைப் பற்றியே பேசிட்டு இருக்கீங்க, அவங்களையே சந்திப்போம்’’ என்று சொன்னதும் ‘‘ஆஹா, அப்படியே’’ என்று புறப்பட்டார்.
‘‘காங்கேயநத்தத்தில் இருக்கு எங்க சாமி வீர சின்னம்மா. எனக்கு எல்லாமே ஆத்தாதான். எந்த நல்லது கெட்டது என்றாலும், மனசு கொஞ்சம் சஞ்சலப்பட்டாலும், சந்தோஷப்பட்டாலும் ஓடி வந்து சேர்கிற இடம் வீரசின்னம்மா சன்னதி.’’ என்று சொன்னவர், மனைவி, இரண்டு மகன்கள் சகிதம் புறப்பட்டார். மதுரையிலிருந்து பயணம் தொடங்கியது.
பச்சை கலர் குவாலிஸ் வழுக்கிக்கொண்டு பயணமானது. வெள்ளை சட்டை, தழையத்தழையக் கட்டிய பட்டைக் கரை வேட்டி... என்று சந்தோஷமாக உட்கார்ந்திருந்தார் விஜயகாந்த். திருப்பரங்குன்றம், திருநகர், திருமங்கலம் என்று பறந்து, நக்கலக்கோட்டையை அடையவும் காரிலிருந்து இறங்கினார். திடீர் தரிசனம். யாராலும் நம்பமுடியவில்லை. காண்பது நிஜம்தானா என்று கண்களை கசக்கிப் பார்த்துக் கொண்டார்கள். விஜயகாந்துதான் என்றதும் ஆர்வமாய் ஓடிவந்தார்கள்.
கிழவிகள், ‘‘அப்படியே மகாராசன் மாதிரி இருக்கியேப்பா. இந்தச் சிரிப்புத்தாய்யா நெஞ்சை அள்ளுது’’ என்று திருஷ்டி கழித்தார்கள். ‘வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக்க பாட்டி’ என்று விஜயகாந்த் பணம் எடுத்துக் கொடுக்க, ‘‘உன் கையால கொடுத்ததை செலவழிக்க மாட்டேன் ராசா’’ என்று முந்தானையில் முடிந்தார் அந்தக்கிழவி.
அங்கேயிருந்து சற்றுத் தள்ளி, நடந்தார் கேப்டன். ‘‘ரஜினி மாதிரி வராமல் போயிடுவீங்களோனு பயந்தோம். நல்ல வேளை வந்துட்டீங்க. நிச்சயம் ஓட்டுப்போடுவோம்’’ என்று சொன்னார்கள் மக்கள். ‘‘ஆள் வந்தாச்சுன்னு, அளந்து விடுகிறீர்களா?’’ என்று பதம் பார்த்தார் கேப்டன். ‘‘என்ன அப்படிச் சொல்லிப்புட்டீங்க’’ என்று செல்லமாகக் கோபித்தார்கள் மக்கள்.
பத்துநிமிஷ நடையில் வந்தேவிட்டது வீரசின்னம்மா கோயில். ‘‘அப்பா, அம்மா இருக்கும்போது வீரசின்னம்மாவைப் பார்க்க வருவதே விசேஷம். சந்தோஷம் கொடிகட்டிப் பறக்கும். அப்பெல்லாம் கார் வசதி வராது. நடைதான். அனல்பறக்கிற வெயிலுக்கு ஓட்டமும், நடையுமா சாமிதான் கொண்டாந்து சேர்க்கும். ரத்தம் கேட்காது. யாரையும் பயமுறுத்தாது. பார்த்தாலே சிலிர்க்கும். நம்ம தொழிலில்தான் எவ்வளவு போட்டி பொறாமை இருக்கு. எனக்கு வர்ற அத்தனை சிரமத்தையும் அப்படியே எடுத்து விட்டுடும். அப்படியே போகும்போது மனசு ஈஸியாகிடும். பாரம் எல்லாம் நீங்கிடும்’’ என்று வீரசின்னம்மா மகத்துவத்தை சொல்லிக்கொண்டே வந்தார் விஜயகாந்த்.
கூடவே வந்தார்கள் மகன்கள் பிரபாகரனும், சண்முகபாண்டியனும். இரண்டு மகன்களையும் அணைத்துக் கொண்டே செல்வதைப் பார்த்துக் கொண்டே பின்தொடர்ந்தார் திருமதி விஜயகாந்த். ‘‘நான் உங்களையும் பார்க்க வந்திருக்கேன். சாமியையும் பார்க்க வந்திருக்கேன். இரண்டு பேர்கிட்டேயும் மனம்விட்டு பேச வேண்டியிருக்கு’’ என்றவர் சொல்லுக்கு, மகுடிப் பாம்புகளாய் கட்டுப்பட்டார்கள் மக்கள். அப்படியே பின் வாங்கிக்கொள்ள, கோயில் மாலையை பூசாரி எடுத்துத்தர, அப்படியே பயபக்தியுடன் அணிந்துகொண்டார் விஜயகாந்த். கண்கள் மூடி, கைகளை விரித்து கடவுளை வேண்டியவரை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
‘‘ரொம்ப வல்லமையான சாமிங்க. ஆனால் பாக்க வந்துடணும். நம்ம பசங்களை சன்னதிக்கு கொண்டு வந்து கண்ணால பாக்கணும்னு சாமிக்கே ஆசை இருக்கும்போல. இதுதான் உங்க ரூபத்தில் வந்திருக்கு’’ என்று நம்மைப் பார்த்துச் சிரித்தார் விஜயகாந்த். கை உயர்த்தி கும்பிட்டு நடந்தார். வழியெங்கும் ‘தலைவா’ என்று குரல்கள். ‘‘ஒரு வாய் தண்ணீர் குடிச்சிட்டுப் போங்க’’ என்ற அழைப்புகள். கன்னம் தொட்ட மக்களைப் பார்த்து ‘‘ஆமா, அவங்களை அப்படியே விட்டுடணும். மக்களை நெருங்கிய தலைவர்கள் எம்.ஜி.ஆருக்குப் பிறகு குறைஞ்சுக்கிட்டே இருக்காங்க. அதான் நம்மளை அவங்களுக்கு பிடிச்சிப்போச்சு. நான் என்னிக்கும் நடிகனாக அவங்ககிட்டே முகம் காட்டினதில்லை. ஜனங்களை நெருங்கலாமா என்று பலரும் யோசிக்கும்போது, நான் அவங்ககிட்டே ஈஸியாக கலந்திருப்பேன்’’ என்று வெற்றி ரகசியம் சொன்னார் கேப்டன்.
‘‘நிஜமாகவே நீங்க அரசியலுக்கு வந்திடுவீங்கன்னு எதிர்பார்க்கலை. எங்களுக்கு மாற்று வேணும். இரண்டு பேரையும் மாத்தி மாத்தி தேர்ந்தெடுத்து அலுத்துப்போச்சு. அவங்க சண்டை இப்ப டி.வி. வரைக்கும் வந்து நிக்குது’’ என்று நொந்தபடி சொன்னார் ஒரு படித்த இளைஞர். ‘‘ஆமாம், நானும் பார்த்துட்டுத்தான் இருக்கேன். நம்பிக்கையானவர்களோடும், உங்களை மாதிரி படிச்சவங்களோடும் திட்டங்கள் உருவாகிட்டே இருக்கு. கொஞ்சம் பொறுத்துக்கங்க, எல்லாத்தையும் சொல்றேன்’’ என்று அவரிடம் சொன்னார் விஜயகாந்த்.
‘‘நீதான் ராசா எம்.ஜி.ஆரு. அவர் சிகப்பு, நீ கருப்பு. அவ்வளவுதான்.’’ என்று தாய்மார்கள் சொல்ல அவர்களை கை கூப்பி வணங்கினார்.
‘‘ஏன் சார், உங்க ரசிகர்மன்றம், தனிக்கொடி வந்த நாளிலிருந்து உங்களை அரசியலுக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க. ஏன் அரசியலுக்கு வர இவ்வளவு காலம் எடுத்துக்கிட்டிங்க?’’ என்று இளைஞர்கள் கேட்க, விஜயகாந்திடமிருந்து திடமாக பதில் வந்தது.
‘‘என்னோட பலம் எனது ரசிகர்கள். மன்றங்கள். அவங்க கொடுத்த தைரியம், அன்பு இது எல்லாம்தான் அரசியலில் இறங்க எனக்கு உத்வேகம் கொடுத்தது. அவங்களுக்கு என்னைத் தெரியும். நான் அறியாத எவ்வளவோ இளைஞர்கள் மற்ற அரசியல் கட்சிகளிடம் சிக்கிப் பாடுபட்டாங்க. கேலிக்கு உள்ளானாங்க. அது மாதிரி எதற்கும் கலங்காமல் நிமிர்ந்து நின்னதை பார்த்த பின்னாடிதான் எனக்கே மனசு இளகிப்போச்சு. அந்த மேலான பிரியத்திற்கு எதாவது நான் செய்தாகணும். அவங்களுக்கும் நல்லது பண்ணி, மக்களுக்கு நல்லது செய்யறதுதான் சரின்னு தோன்றிவிட்டது. அப்புறம் ‘மளமள’ன்னு கட்சி வேலைகளில் இறங்க ஆரம்பிச்சிட்டேன்’’ என்றார் கேப்டன்.
‘‘புள்ளைக்கு இனிமேதான் ரொம்ப வேலை. பின்னி எடுக்கும். ஆட ஓட இருக்க வேண்டியிருக்கும். ஏராளமா பயணம் போக வேண்டியிருக்கும். பக்கத்திலே இருந்து பாத்துக்க ராஜாத்தி’’ என்று திருமதி விஜயகாந்தின் கன்னம் தொட்டு தடவினார் பெரியாத்தா. ‘‘பார்த்துக்கிறேன் ஆத்தா’’ என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் பிரேமலதா விஜயகாந்த். அப்பாவிற்குக் கிடைத்திருக்கிற பெருமையை சற்றுத் தள்ளி ரசித்துக்கொண்டிருந்தார்கள் மகன்கள் பிரபாவும், சம்முவும்.
போகிற வழியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள் போட்டது போட்டபடி ஓடிவர, ‘‘எங்களை நம்புங்க சாமி. தைரியமா வந்திடு. உன்னைய கரை சேத்திடுவோம்’’ என்று உறுதியளித்தார்கள். வண்டியில் ஏறி மூடிய கண்ணாடிக் கதவில் பதிந்தன ஏராளமான கைகள். அப்புறமும் முகம் பார்த்தன நிறைய கண்கள். மறுபடியும் கண்ணாடியை கீழிறக்கி வணங்கினார் விஜயகாந்த். ‘‘இந்த அன்புதாங்க என்னை அரசியலுக்கு இழுத்தது. அவங்க பிரியத்திற்கு ஏதாவது செய்தாகணும். எனக்கும் கடமை இருக்கிறதாக உணர்வது இந்த மாதிரி தருணங்களில்தான்!’’ என்றார் விஜயகாந்த். வெகுஜன சக்தியாய் கேப்டன் உருவெடுக்கிறார் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
(நிறைவு)

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP