பித்தன் என்பவன் யார்?

>> Sunday, May 24, 2009

பரமேஸ்வரனுக்கு, "பித்தன்' என்ற ஒரு பெயருமுண்டு. இவருக்கு
பிடித்துள்ள பித்து என்ன? உயிர்களை தம் பக்தர்களாக ஆக்குவதில்
பெரும் பித்தனாக இருக்கிறார். இந்த பித்தானது கருணை வடிவாகி,
அருள் பெருகி, பல பக்தர்களை அவன்பால் பித்து பிடிக்கும்படி
செய்கிறது.


அதீதமான பற்றுதலை பித்து என்பர். பணம், பணம் என்று அலைபவர்களை,
"பணப்பித்து' என்கின்றனர். சிவனையே நினைத்து பக்தி
செய்பவர்களையும் பித்தன் என்பர்.


பகவானைப் புகழ்ந்து பாடி வழிபட்டால், அவனை சந்தோஷப்படுத்தினால்,
அவன் பல சம்பத்துக்களையும் அளித்து, சம்சார பந்தத்திலிருந்து
நம்மை விடுவிக்கிறான்; பக்தர்களை ரட்சிக்க வேண்டியதை தன்
பொறுப்பாகவே ஏற்றுக் கொள்கிறான். கஷ்டம், மரணம் என்பதெல்லாம்
சாதாரண மக்களுக்குத் தான். அதை கண்டு அவர்கள் பயப்படுவர்; ஆனால்,
அவைகளைக் கண்டு பக்தர்கள் பயப்படுவதில்லை. பக்தர்களுக்கு வளமையோ,
செழுமையோ எதுவும் தெரியாது; தெய்வத்தின் அருளே அவர்களது செல்வம்.


சிவனார் ஆலகால விஷம் உண்டார். எதற்காக? அந்த விஷம் வெளியில்
இருந்தால் உலகத்துக்கு ஆபத்து என்பதற்காக. இது அவரது
கருணையல்லவா! தெய்வத்தை வழிபட்டு, நெறியான வாழ்க்கை வாழ்ந்து,
கடவுள் வழிபாட்டில் தீவிரமாக இருப்பவர்களை எந்தவித துன்பமும்
பாதிப்பதில்லை.


பாண்டிய மன்னன், மாணிக்க வாசகரை பலவிதமாக துன்புறுத்தினான்.
ஆனால், அவர் கலங்கவில்லை. பகவானை நம்பினார். பிரகலாதனும் பலவித
துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டும் வருத்தப்படவே இல்லை. தெய்வீக
இன்பத்தில் திளைத்திருப்பவர்களுக்கு சரீர துன்பம் எதுவுமே
தெரியாது!


தபஸ்விகள் தவம் செய்யும்போது, ஈ, எறும்பு கடித்தாலும், அதை
அவர்கள் அறிய மாட்டார் கள். மனம் கடவுளிடம் இருக்கும்போது சரீர
இன்ப, துன்பங்கள் அவர்களது தியானத்தை கலைப்பதில்லை.


ஒரு தபஸ்வியின் கழுத்தில் ஒரு செத்த பாம்பை போட்டான் பரீட்சித்து
மன்னன். ஆனால், அந்த தபஸ்விக்கு அது தெரியவே இல்லை. அவர் மனம்
தவத்தில் ஈடுபட்டிருந்தது.


தன்னை மறந்து பகவானிடம் மனதை வைப்பவர்களுக்கு வெளியில் அல்லது
தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஒருவர்
வாசற்படியின் அருகில் திண்ணையில் உட்கார்ந்து ஜெபம் செய்து
கொண்டிருக்கிறார். அவருக்கு எதிரில் ஒரு மாடு போகிறது. ஆனால்,
அதோ, மாடு போகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை.


ஒருவன் வந்து, "ஐயா! இந்த பக்கம் ஒரு மாடு போயிற்றா?' என்று
கேட்டான். அவர், "தெரியலையே! நான் கவனிக்கவில்லையே...' என்றார்.
இவரது கண் முன் ஒரு மாடு போயிருக்கிறது; ஆனால், விழித்திருந்தும்
அவர் அந்த மாட்டை கவனிக்கவில்லை; காரணம், அவரது மனம் முழுவதுமாக
பக்தியில் ஈடுபட்டிருந்தது.


மனம் எதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறதோ, அப்போது மற்ற விஷயங்கள்
மனதில் படுவதில்லை. இப்படி மெய்மறந்து பக்தி செய்ய வேண்டும்!

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP