ஆழ்ந்து தியானியுங்கள். உங்களின் வாழ்வே உயர்வடையும்

>> Sunday, January 11, 2009

ரொம்ப பசிக்குதே, இங்கே சாப்பிடறதுக்கு ஒண்ணுமே இல்லையா?' என்று சுற்றும் முற்றும் பார்த்த வியாபாரியின் கண்ணில் தென்பட்டது கொழுத்து பழுத்த மாம்பழங்கள் நிறைந்த மாந்தோப்பு. நாவில் எச்சில் ஊற ஒரு கல்லை எடுத்து, ஒரு மாம்பழத்தைக் குறிவைத்து எறிந்தார்.

ஒரு மாம்பழத்திற்குப் பதிலாக மூன்று மாம்பழங்களாக அறுத்துத் தள்ளிய கல், வேகமாக வேறெங்கோ சென்றது.

மூன்று மாம்பழங்களையும் எடுத்து வேகவேகமாகச் சாப்பிட ஆரம்பித்தார் வியாபாரி.

ஆனால், `விதி வலியது'. அவரை சில நொடிகளுக்குமேல் அதை சுவைக்க விடவில்லை. காரணம், மாம்பழத்திற்காக அவர் எறிந்த கல் அந்தத் தோப்பில் வேறொரு மூலையில் அமர்ந்து தன் மந்திரிகளோடும், தன் மனைவிகளோடும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்த அரசர் தலையில் விழுந்தது.

கல் விழுந்த வேகத்தில் அரசரின் தலைப்பாகை பறந்தது.

``யாரது? அரசரின் மீதே கல்லெறிந்தது?'' என்று மொத்தக் கூட்டமும், வெகுண்டெழுந்தது. காவலாளிகள் சில நிமிடங்களுக்குள் அந்த வியாபாரியைக் கையோடு பிடித்து, இழுத்து வந்தார்கள். அரசரே விசாரணையைத் துவக்கினார்.

``ஏனப்பா என் மீது கல் எறிந்தாய்? என் மீது உனக்கென்ன கோபம்?''

``அய்யோ! அரசே, உங்கள் மீது எனக்கென்ன கோபம். நான் உங்கள் மீது கல்லெறியவில்லை'' என்று பசியின் காரணமாக, தான் கல்லெறிந்த நோக்கத்தைச் சொன்னார் வியாபாரி.

வியாபாரியின் விளக்கத்தையெல்லாம் கேட்குமளவிற்கு பொறுமையில்லாத மந்திரி ஒருவர், ``அரசே, இவன் சொல்வது கதைபோன்று தெரிகிறது. இவனுக்கு தக்க தண்டனை தரவேண்டும்'' என்றார்.

அரசன் தன் பிரதான மந்திரியை அழைத்து, ``மந்திரியாரே, இது என்னுடைய தீர்ப்பு. இதைச் சரியாக நிறைவேற்றுவது உம் பொறுப்பு. இன்றிலிருந்து இந்த வியாபாரியின் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் தேவையான எல்லாத் தேவைகளை பார்த்துக் கொள்வதும், அவரை திருப்தியோடு வைத்துக்கொள்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு'' என்றார்.

மன்னனின் தீர்ப்பு அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மன்னரின் மனைவி முதல், மந்திரி, சேவகன் என அனைவருமே மன்னரின் சிறப்பான தீர்ப்புக்கு தாங்களும் ஏதோ ஒருவிதத்தில் காரணம் என்று தங்களுக்குள் ஒரு மாயையும் வளர்த்துக் கொண்டனர்.

ஆனால் வியாபாரியோ, ``அரசே! என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டிய எனக்கு, ஆயுள் காப்பீடு அளித்து வரம் தந்திருக்கிறீர்களே! அப்படி என்ன அரும்பாக்கியம் செய்துவிட்டேன்!?'' என்று நன்றியுணர்வுடன் கேட்டார்.

அதற்கு அரசர் கூறிய இந்த பதிலே தியானம்தான்...

``அப்பனே நீ அடித்த மரத்திற்கு புலனறிவு இருக்கிறதா?

புலனறிவு இல்லாத அந்த மரமே, அதன்மீது நீ எறிந்த கல்லுக்கு மூன்று பழங்களைத் தந்தது. உன்னுடைய பத்து நாள் பசியைப் போக்கியிருக்கிறது. தன்மேல் கல் பட்டதற்கு மரம் இவ்வளவு பொழிகிறதென்றால், புலனறிவோடு இயங்கும் நான் எவ்வளவு பொழிய வேண்டும்? அதைத்தான் செய்தேன். இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?'' என்றார் மிகவும் இனிமையாக.

சீண்டுபவரைத் தீண்டுவதால் சூழ்நிலையைச் சமாளிக்கலாம். ஆனால் வளர முடியாது. இன்றிலிருந்து சீண்டப்படும் நிமிடங்களை தியான காலங் களாக்குங்கள்.

அரசன் சொன்ன பதிலை ஆழ்ந்து தியானியுங்கள். உங்களின் வாழ்வே உயர்வடையும்.

(ஆனந்தம் பெருகும்)

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP