பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

>> Sunday, October 26, 2008

பரந்த மனப்பான்மையே ஹிந்துத்துவம்!

இல. கணேசன்

உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை - அதாவது ஹிந்துத் தன்மை - அதாவது ஹிந்துத்துவம்.

இதன் சிறப்புகள் பல; ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை ஆண்டவனுக்குச் சமமாகக் கருதல் போன்ற பலவற்றையும் சொல்லலாம்.

ஒரு கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து மனிதநேயம் குறித்து பேசச் சொன்னார்கள். ஒருக்கால் "குறுகிய' ஹிந்துத்துவா குறித்து பேசிவிடுவேனோ என அஞ்சி பரந்த கருத்துடைய மனிதநேயம் குறித்து பேசட்டும் என நினைத்திருக்கலாம்.

""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்'' எனப் பாடியவர் நமது தாயுமானவ சுவாமிகள். "சர்வே ஜனா சுகினோ பவந்து' எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள். "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தமிழன் குரல் கொடுத்தால் உலகமே ஒரு குடும்பம் அதாவது வசுதைவ குடும்பகம் என மறு குரல் வந்ததும் இந்த நாட்டில்தான். இவைகள் எல்லாம் இந்த நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.

இந்த நாட்டின் சிறப்பான தன்மையாக நான் கருதுவது சகிப்புத்தன்மை என எவராவது சொன்னால் என்னால் சகிக்க முடியவில்லை. நான் எழுதியது பிடிக்கவில்லை; ஆனாலும் எதையும் படித்துத்தொலைப்பது என்கின்ற பழக்கதோஷத்தால் இதையும் சகித்துக்கொண்டு படித்துத் தொலைக்கிறீர்கள். இது சகிப்புத்தன்மை. இந்த தேசத்தின் தன்மை அதுவல்ல, ""கட்டுரை நன்றாக இருக்கிறது; தொடர்ந்து எழுதுங்கள்'' என சொல்பவர்களது தன்மை சகிப்புத்தன்மை அல்ல; ரசிப்புத்தன்மை; எதையும் வரவேற்கும் தன்மை. காரணம் உயர்ந்த கருத்துகள் எல்லா திசையிலிருந்தும் நம்மை வந்து அடையட்டும் என்கின்ற கருத்து ரிக் வேதத்திலேயே உள்ளது.

ஆகாயத்திலிருந்து பொழியும் நீர், நதிகள் வழியாகப் பாய்ந்தோடி கடலில் கலப்பதுபோல எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றினாலும் அது ஒரே பரம்பொருளையே அடைகிறது என உபநிஷத்துகள் சொல்கின்றன.

எம்மதமும் சம்மதம் எனச் சொன்னவனே ஹிந்துதான். நமது பிரார்த்தனை எல்லாம் "லோகா சமஸ்தா சுகினோ பவந்து' (உலகம் சுகமாகவும் சந்தோஷமாகவும் வாழக்கடவது!) என உலகம் வாழவே பிரார்த்தனை.

இத்தனை உயர்ந்த கருத்துகளை, பரந்த கருத்துகளை உலகின் எந்த நாட்டு அறிஞராவது சொல்லியிருப்பாரா என்பது சந்தேகமே! எனவே மனிதனிடத்தில் அன்பு செலுத்து என்பதே மனித நேயம் என்றால் அதைத்தானே இந்த நாட்டின் பண்பாடும் சொல்கிறது. இந்த நாட்டின் தன்மையே அதுதான்.

எனவே ஹிந்துத்துவம் என்றாலும் மனித நேயம் என்றாலும் ஒன்றுதானே தவிர ஹிந்துத்துவம் என்பது குறுகிய மனப்பான்மை அல்ல. சொல்லப்போனால் ஹிந்துத்துவம் என்பது மனித நேயத்தைவிட உயர்ந்த பரந்த தன்மை.

ஒரு புறாவுக்காக இரங்கி தனது சதையையே அறுத்துத் தந்த சிபி சக்ரவர்த்திக்கு சமமான மன்னன் உலகில் எங்கேனும் உண்டா? ஒரு பசுவுக்காகத் தனது உயிரையே தர முனைந்த திலீபன் போல எங்கேனும் உண்டா? ஒரு பசு தன் கன்றை இழந்த சோகத்தை உணர்ந்து தனது மகனை தேர்க்காலில் இட முனைந்தது எந்த நாட்டில்? பாம்புக்கு கூட பால் வார்க்கும் சமுதாயம் இந்நாட்டு சமுதாயம்தானே? எறும்புக்கும் உணவு இட வேண்டும் என்பதற்காகவே கோலமிடத் தொடங்கிய மக்கள் நம் மக்கள்தானே? ஒரு கொடி படர தனது தேரையே தந்த பாரி போல வேறு யார் உண்டு வெளி உலகில்? பசுமையான புல்வெளி மீது காளை பாய்ந்து சென்றபோது தானே மிதிபடுவதுபோல் உணர்ந்து அலறிய சிறீராமகிருஷ்ணர் வாழ்ந்தது எந்த நாட்டில்?

அமெரிக்க நாட்டிலிருந்து வந்து நம் நாட்டை ஆராய்வதற்கு வந்த சிலரிடம் ""எங்கள் நாட்டில் உங்களை எது வியக்க வைத்தது?'' எனக் கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

நாற்சந்தியில் வாகனங்கள் பச்சை விளக்குக்காக காத்திருந்தன. பச்சை விளக்கு எரிந்தும் வாகனங்கள் நகரவில்லை. காரணம் நாய்க்குட்டி ஒன்று அப்போதுதான் சாலையைக் கடந்தது.

""அது கடந்து போவதற்காகவா இத்தனை வாகனங்கள் பொறுமை காத்தன. அமெரிக்க நாட்டில் நசுக்கிவிட்டு போய்விடுவார்கள்'' என்றனர் அவர்கள்.

பேருந்தின் முன்பகுதியில் அமர்ந்து பயணம் செய்தவர்களுக்கு ஒரு அனுபவம் கிடைத்திருக்கும். வேகமாக வண்டி ஓட்டும்போது சடக்கென வண்டியை நிறுத்த ஓட்டுநர் எத்தனித்தபோது வண்டி குலுங்கும். காரணம் இருட்டில் சாலையில் திடீரென ஒரு கீரியோ, பாம்போ குறுக்கே ஓடும். இதைப் பார்த்து ஓட்டுநர் நிறுத்த முனைந்தது அனிச்சைச் செயல். அதாவது ரத்தத்தோடு கலந்துவிட்ட உணர்வு. அதற்குப் பெயர்தான் இந்தியப் பண்பாடு!

எனவே எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு. மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் இந்த நாட்டின் பண்பாடோடு மனித நேயத்தை ஒப்பிட்டால் மனிதநேயம் என்பதே குறுகிய மனப்பான்மை!

இந்த நாட்டின் தனித்தன்மை-பண்பாடு-மண்வாசனை-ஆன்மநேயம் என்கின்ற உயர்ந்த கருத்து. எனவே இந்த நாட்டு மக்கள் மத்தியில் மதச்சார்பற்ற தன்மை குறித்தும், பரந்த மனப்பான்மை குறித்தும் உபதேசம் செய்ய முயல்வது நெல் விளைவிக்கும் விவசாயிக்கே அரிசி விற்பதற்குச் சமமாகும்.

இந்த நாட்டில் வாழ்ந்த மக்களுக்கு இந்தத் தன்மை இருந்ததால்தான் புதிதாக வெளியிலிருந்து ஒரு மதம் வந்தபோது அதை வரவேற்றார்கள். தங்க இடம் தந்தார்கள். வழிபடுவதற்கு, அவர்கள் மதத்து ஆலயம் அமைக்க நிலமும் தந்தார்கள். கட்டுவதற்கு பொருள் உதவியும் தந்தார்கள்.

நமது பரந்த மனப்பான்மையே நமக்குப் பலவீனமாக ஆனது. நம்மவர்கள் மதம் மாற்றப்பட்டார்கள். ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஆட்சியாளர்கள் துணையுடன் வேகமாகப் பரப்பப்பட்டது. அச்சுறுத்தியும், ஆசை வார்த்தை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் நடைபெற்றது.

மதம் மாறினால் என்ன? ஹிந்துப் பண்பாடுதான் எம்மதமும் சம்மதம் எனச் சொல்கிறதே எனக் கேட்கலாம். உண்மையில் மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றம் என்றால் அதில் மறுப்பதற்கு எதுவும் இல்லை.

ஓர் உதாரணம் குறிப்பிடுகிறேன் - மார்கழி மாதம் வந்துவிட்டால் தெருவின் இருபுறமும் உள்ள வீடுகளின் முன்பு மகளிர் மகிழ்ச்சியுடன் கோலமிடுவார்கள். அந்தத் தெருவிலேயே சிறப்பாகக் கோலமிடும் பெண்மணி மங்களம்தான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ஆனால் அந்த ஆண்டு மங்களம் டீச்சர் மார்கழி மாதம் கோலமிடவேயில்லை. சில நாள்களாகவே அவர் வீட்டு வாசலில் கோலமிடப்படுவதில்லை. இதுகுறித்து பக்கத்து வீட்டு அம்மையார் காரணம் கேட்டார். மங்களம் சொன்ன பதில் - ""இனிமேல் நான் வீட்டு வாசலில் கோலமே இடமாட்டேன். காரணம் நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். என் பெயரும் மங்களம் இல்லை''.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு அதிர்ச்சி - ""மதம் மாறிப் போனா கோலம் போடக்கூடாதென்று எவடீ சொன்னா?'' என்றாரே பார்க்கலாம்.

அடுத்த வீட்டு அம்மையாருக்கு பண்பாடு என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது. மதம் மாறிய மங்களத்துக்கு அது மரத்துவிட்டது. கோலம் இடுவது இந்த நாட்டின் பண்பாடு. அது எல்லா மதத்துக்கும் பொது.

கோலம் இடுவது மட்டுமல்ல; வளையல் அணிவது; திலகம் இடுவது; மருதாணி வைப்பது; வாயிலிலே வாழைமரம், குருத்தோலை தோரணம், குத்து விளக்கு என பண்பாட்டின் சின்னங்களாக பல உள்ளன. இவை போய்விடுகின்றன. பண்பாட்டைப் பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் எவரும் மத மாற்றத்தை எதிர்க்கவே செய்வார்கள்.

திருச்சியிலே ஒரு வீடு. உச்சிப்பிள்ளையாரே குலதெய்வம். வீட்டின் பூஜை அறையில் பிரதானமாக விநாயகர் படம் பெரிதாக அலங்கரிக்கும். அந்த வீட்டின் மூத்த மகன் அய்யப்பன் கோயிலுக்கு மாலை அணிந்தான். ஒரு அய்யப்பன் படத்தைக் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்தான். மலர் இடும்போது விநாயகருக்கும் ஒரு மாலை, அய்யப்பனுக்கும் மாலை. சரணம் விளிக்கும்போது கன்னி மூல மகா கணபதிக்கும் சரணம். அய்யப்ப சாஸ்தாவுக்கும் சரணம். இரு படங்களுக்கும் தீபாராதனை.

அடுத்தவன் ஆதிபராசக்தி வழிபாட்டுக்கு மாறினான். செவ்வாடை அணிந்தான். சக்தியை அம்மா பங்காரு அடிகள் பூஜிப்பதுபோல ஒரு படத்தை மாட்டினான். மாலையில் 3 படங்களுக்கும் மாலை. சக்தி கணேசா, சக்தி அய்யப்பா, சக்தி அம்மா என மூவருக்கும் வழிபாடு. மூன்று படத்துக்கும் தீபாராதனை.

மூன்றாமவன் இளையவன். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக சென்னையில் ஒரு கான்வென்டில் சேர்த்தனர். நல்ல படிப்பு எனறால் ஆங்கிலத்தில் பேசுகின்றபடி படிக்க வேண்டும் என்கின்ற கற்பனை. வீட்டில் தங்கிப் படித்தால் கெட்டுவிடுவான் (தமிழ் பேசி கெட்டுவிடுவான்) என்பதற்காக விடுதியில் தங்கிப் படிப்பு.

படித்து முடித்து அவன் வீடு திரும்பும்போது கழுத்திலே சிலுவை. கையிலே ஏசுநாதர் படம். தனது அறையிலேயே வைத்து தனி வழிபாடு. பெயரும் ஏதோ அன்னிய நாட்டுப் பெயராக மாற்றிக்கொண்டு விட்டான்.

மதமாற்றம் என்பது வழிபாடு மாற்றம் என்றால் பெயர் மாறுவானேன்? பெற்றோர்களும் முன்னோர்களும் வழிபட்ட தெய்வத்தை மதிக்கின்ற பரந்த மனப்பான்மை மறந்து போனதேன்? இந்த தேசத்தின் பண்பாட்டின் அடிப்படையே பரந்த மனப்பான்மை என்றால் அது மதம் மாறியவருக்கு மறந்து போவதேன்?

எனவே பண்பாட்டைக் காக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் மதமாற்றத்தை எதிர்ப்பதில் நியாயம் உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

3 comments:

Unknown December 18, 2009 at 11:02 AM  

today most of the ppl dont knw our culture but simply they telling culture,culture, for those ppl it will be very usefull, still iam expecting to give brief explaine abt our culture..

Anonymous January 3, 2011 at 3:09 PM  

வணக்கம் சகோதரர்களே,

மிக ஆருமையான கருத்தை இல. கணேசன் கூறி உள்ளார், அவருக்கு எனது நன்றிகள்.


இன்றளவில் நமது சனாதன தர்மம் காக்கவும் மதமாற்றம் தவிர்க்கப் பாடவும் நிகழ வேண்டிய முக்கியமான காரியம் என்னவெனில், நமது பாரத பண்பாடு முதலில் பேணப் படல் வேண்டும். பெற்றோகள் தமது குழந்தைக்கு நமது பண்பாடு பற்றி போதிக்க வேண்டும், இளம் பெற்றோர்கள் முதலில் அந்நிய மோகத்தை கைவிடல் வேண்டும்.

நமது கலாசாரம், முக்கிய சடங்குகள் எல்லாம் பித்துக்குளியானது என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். கோலமிடுதல் எறும்புக்கும், இதர சிறு ஜீவன்களுக்கும் உணவாகவே இந்த பண்பாடு அதனை செய்ய சொல்லி உள்ளது அது போன்றே பல சடங்குகள், பழக்கங்களின் அடிப்படை காரணம் கண்டு அதனை உயர்வாக எண்ணுதல் வேண்டும். அடிப்படையில் உண்மை எது என்றால் அன்னியர் நம்மிடம் கரும்பை வாங்கி அதை நம் கண்களுக்கு தெரியாமல் பிழிந்து சாறாக்கி அதை ஒரு குப்பியிலே அடைத்து நம்மிடமே விற்கிறார்கள் என்றால் எப்படியோ அப்படியே பிற மதங்களையும் நமது வேதங்கள், உபநிஷத்துகள் இவ்வளவு ஏன் திருக்குறள் முதல் பல விஷயங்களில் அவர்களின் முத்திரை பதிக்க, அதன் மூலம் அப்பாவிகளை மதம் மாற்ற முனைவதும் ஆனா காரியங்கள் நடை பெறுகின்றன. பக்தி என்பதற்கு யாரை வேண்டுமானால் பூஜிக்கலாம் , அது தனி விருப்பம் ஆனால் மதம் மாற்றம் எனும்போது ஒரு பண்பாடும் கலாசாரம் எல்லாம் மாறும், நாம் நமது தன்மையை இழக்க நேரும்.

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP