ஜெயலலிதாவும் கருணாநிதியும்!_இலங்கையும்

>> Sunday, October 26, 2008

இலங்கை ராணுவத்தின் இனப் படுகொலைக்கு ஆளாகி இருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்கிற பெயரில், தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளின் பேச்சும், செயல்பாடும் கடும் கண்டனத்துக்கு உரியதாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ம.தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேசுகின்ற பேச்சுகள், இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்படும் அப்பாவித் தமிழர்கள் மீது இருக்கும் அனுதாபத்தைக் குலைப்பதாக அமைந்திருக்கின்றன என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.

""தமிழ்நாடு தனிநாடு என்று சொல்லும் நாள் வரும். தமிழ் ஈழம் மட்டுமல்ல, தனித் தமிழ்நாடும் விரைவில் மலரும்'' என்று ம.தி.மு.க. அவைத் தலைவர் மு. கண்ணப்பன் சமீபத்தில் சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும் அந்தக் கருத்தை நியாயப்படுத்துவது போல பேசி இருக்கிறார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் நடத்திய போராட்டத்தில் எழுப்பிய கோஷங்கள் பிரிவினையைத் தூண்டும் விதத்திலும், தனித் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தும் விதத்திலும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரையில் ரயில் மறியல் என்ற பெயரில் அவர்கள்தான் இரண்டு ரயில் பெட்டிகளைத் தீக்கிரையாக்கியதாகவும், ஆனால் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் காவல்துறையினர் அவர்களை அதில் சம்பந்தப்படுத்தாமல் காப்பாற்றுவதாகவும் மதுரை மாநகரில் பரவலாகப் பேசப்படுகிறது.

""இந்திய இறையாண்மைக்கு எதிரான, தேச விரோதக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள்மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்க முடியாது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?'' என்று எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா எழுப்பி இருக்கும் நியாயமான கேள்விக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவை.

இலங்கை விஷயத்தில், சுதந்திரத்துக்கு முற்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை ஒரு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்னால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாநாடுகளுக்கு இலங்கை காங்கிரஸ் கமிட்டியின் சார்பிலும் பிரதிநிதிகள் வருவது வழக்கம். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இருப்பதுபோல, இலங்கை காங்கிரஸ் கமிட்டி ஒன்று இருந்தது.

சுதந்திரப் பேச்சு வார்த்தையின்போது, பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதித்த கையோடு இலங்கையை இந்தியாவில் இணைத்து, சிங்களப் பிரதேசம், ஈழநாடு என்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களாக்கி இருக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களையும், காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்கப் போராடியதுபோல, இதை அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் செய்யத் தவறிவிட்டனர். அப்படி நிகழ்ந்திருந்தால், சிங்களவர்கள் தனிநாடு கேட்டுப் போராடி இருப்பார்களே தவிர, நம்மவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்.

இலங்கையில் அல்லல்படும் அப்பாவித் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் பிரிவினைவாதம் பேசுவதும், தனித் தமிழ்நாடு என்று பேசுவதும் பிரச்னையைத் திசைதிருப்பி, இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாமல் இருப்பதற்குத்தான் உதவும்.

ம.தி.மு.க. தனது தோழமைக் கட்சி என்று தெரிந்தும், தான் தவறு என்று கருதுவதை தைரியமாகவும், கடுமையாகவும் கண்டிக்க முற்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைப் பாராட்டத்தான் வேண்டும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தலைவர்களின் கடுமையான விமர்சனமும், முதல்வர் கருணாநிதியை உடனடியாகச் செயல்பட வைத்தன என்றாலும், தான் வகிக்கும் பதவிக்கு உரித்தான கடமை உணர்வுடன் அவர் செயல்பட்டிருப்பதும் பாராட்டுக்குரிய விஷயம். தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில திமுக ஆதரவு திரைப்படத் துறையினர் விஷயத்திலும் அவர் இதே அணுகுமுறையைக் கையாள வேண்டும்.

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத்தான் நாம் எதிர்க்கலாமே தவிர அதற்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதை ஆதரிக்க முடியாது.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP