ஜெயலலிதா என்றொரு பாப்பாத்தி - முரசொலி

>> Tuesday, November 4, 2008

விகடன் கட்டுரை
தி.மு.க-வின் மெகா 10 தவறுகள்! - ப.திருமாவேலன்

கடந்த 40 ஆண்டு கால தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைப்புச் செய்தி! அவரை ஆதரித்தோ அல்லது எதிர்த்தோதான் அரசியல் நடந்தவேண்டிய நிர்ப்பந்தம் அனைத்துக் கட்சிகளுக்கும். 'வாழ்த்தினாலும் வசை பாடினாலும் அவர்கள் கருணாநிதி என்ற பெயரைச் சொல்லித்தானே ஆக வேண்டும்' என்று அவரே சொல்லி பெருமைப்பட்டுக்கொள்வார். உண்மையும் அதுதான்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறார் கருணாநிதி. அதோடு சட்ட மன்றத்துக்கும் தேர்தல் வருமாமே என்ற கேள்வியையும் அவர் உதாசீனப்படுத்தவில்லை. 'தி.மு.க. செயற்குழு கூடித் தீர்மானிக்கும்' என்று மையமாகப் பதிலளித்தார். 'அதுக்கென்ன அவசரம்?' என்று எதிர்க் கேள்வி போடவில்லை. எனவே, தனது தலைவிதியைத் தீர்மானிக்கப் போகும் இரண்டு தேர்தலுக்காகவும் காத்திருக்கிறார் கருணாநிதி.

கடந்த இரண்டு தேர்தலையும் யாரைத் தனது பங்காளிகளாக வைத்துக்கொண்டு கருணாநிதி எதிர்கொண்டாரோ அவர்கள் இப்போது இல்லை. ஜெயலலிதாவைப் பலப்படுத்த அவர்கள் பயன்படலாம். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்று யாரும் இல்லை என்ற நிலைமை மாறி, இப்போது விஜயகாந்த் அப்படியரு அடையாளத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், தி.மு.கவின் நிலைப்பாடுகள், பலவீனங்கள் கட்சியின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் பூதாகாரமான விஷயங்களாக ஆகிக்கொண்டு இருக்கின்றன.

கருணாநிதியின் அபாரமான உழைப்பும் பிரசாரமும் ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கத்தில் சறுக்கல்களும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன.

அவை இவை...

1. ஸ்டாலினா... அழகிரியா?

தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம்வந்துபோகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம், 'யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்' என்பதுதான். ஸ்டாலின் ஆட்களும் அழகிரி ஆதரவாளர்களும் தங்கள் அணியைப் பலப்படுத்தி வருவது ஒரு பக்கம் இருக்கட்டும், கருணாநிதியும் ஒருவகையில் இதற்கொரு காரணியாக இருப்பதுதான் தொண்டனின் மெகா குழப்பத்துக்கு முதல் காரணம்.

'சாதாரண தொண்டனாக இருந்து இளைஞரணிச் செயலாளராக மாறி, இன்று அமைச்சராகி உங்கள் ஆசீர்வாதத்தால் இன்னும் என்னென்னவோ ஆகப்போகின்ற...'' என்று ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டு உச்சி முகர்வார் தலைவர். அப்படிப்பட்ட ஸ்டாலின் மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் அழகிரி ஆதரவுப் பிரமுகர்கள் அந்தப் பக்கமாக எட்டியே பார்க்காததைத் ஒரு கட்சித் தலைவராகத் தட்டிக் கேட்க மாட்டார். தூத்துக்குடியில் ஸ்டாலின் கலந்துகொண்ட விழாவில் அவரைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, அப்படியே மதுரை கிளம்பி வந்து அழகிரிக்குத் தலைவர் ஆராதனை செய்வதைப் பார்த்து திக்குத் தெரியாமல் தவிக்கிறான் தொண்டன். அமைச்சர்களும் யார் பேச்சுக்கு கருணாநிதியிடம் மதிப்பு என்று தெரியாமல் தவிக்கிறார்கள். மதுரையில் அழகிரியின் ஆதிக்கத்தை எதிர்த்து ஸ்டாலின் பக்கமாகக் கம்பி நீட்டிய பிரமுகர் - திருமங்கலம் முத்துராமலிங்கம். ஸ்டாலினும் அழகிரியும் ஒரே ஒரு மாதம் ஒன்று சேர்ந்ததால், என்ன செய்வதென்று புரியாமல் வேறு கட்சிப் பக்கமே தாவிவிட்டார்! அப்படியரு தடுமாற்றத்-துக்கு மொத்த தொண்டனையும் அழைத்துப் போவ-தாக இருக்கிறது கருணாநிதியின் நடவடிக்கைகள்.

தி.மு.க-வுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின், அழகிரி யார் வேண்டுமானாலும் வரட்டும். அதற்கான குழப்பம் நிர்வாக மட்டத்தில் எதிரொலித்து பல்வேறு குழப்பங்களை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், போலீஸ் வட்டாரம், மாவட்டச் செயலாளர்கள் வரை கருணாநிதி காட்டி வரும் 'ரஜினி ஸ்டைல் குழப்பம்' பல்வேறு விஷயங்களில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடவைக்கிறது.

2. தயாநிதி மாறன் விவகாரம்

தி.மு.க-வில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது தயாநிதி மாறன் குடும்பப் பத்திரிகை. இது கட்சிக்குள் 'குட்டிக் கலாட்டா' ஏற்படுத்த... தயாநிதி தனது மந்திரி பதவியைத் துறக்க வேண்டி வந்தது. இப்படியரு கருத்துக் கணிப்பு வெளியிட்டதால் கோபப்பட்ட அழகிரியின் ஆதரவாளர்கள், அந்த பத்திரிகை அலுவலகத்தை அடித்து கொளுத்தியதில் அப்பாவி இளைஞர்கள் மூன்று பேர் அநியாயமாக இறந்துபோனார்கள். தி.மு.க. அரசாங்கத்தின் சட்டம்--ஒழுங்கு பராமரிப்பு மதுரையில் கேள்விக்குறியானது. விவகாரம் அரசியலாவது புரிந்து வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டார் கருணாநிதி. அந்த சம்பவத்துக்குப் பிறகு கருணாநிதி பெயரால் போட்டி தொலைகாட்சி துவங்கப்பட்டதும், அதற்கான சீரியல் தயாரிப்பது, சினிமா ஆட்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது, புதிய சினிமாக்களை வாங்குவது, சுமங்கலி கேபிளுக்கு மாற்றாக அரசு கேபிள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்குவது, கேபிள் டி.வி. ஆபரேட்டர்களைத் தங்கள் பக்கமாக இழுப்பது... போன்ற காரியங்களில் 'கலைஞர்' தொலைக்காட்சியும் அரசுத் தரப்பும் மாறி மாறி நடத்திய ஆக்ஷன்கள் காரணமாக, முதல்வரின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவானதாக தி.மு.க-வுக்குள்ளேயே பேச்சு கிளம்பியது.

3. 'சீனியர் சபா'?!

கருணாநிதியின் அமைச்சரவையில் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், சுப.தங்கவேலன் ஆகியோர் கட்சிக்காக உழைத்தவர்கள். மூத்த உறுப்பினர்கள். தங்கள் வாழ்க்கையைப் பல்லாண்டு காலம் கட்சிக்காகச் செலவு செய்தவர்கள். ஆனால், அவர்களால் அரசாங்கப் பணிகளை வேகமாகவும் விவேகமாகவும், வேண்டிய பொறுமை காட்டியும் செய்ய இயலவில்லை என்ற பேச்சு அதிகாரிகள் மத்தியில் இருப்பது முதல்வரின் காதை எந்தளவு எட்டியதோ தெரியவில்லை. மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைச் சரியாகக் கவனித்து உள்வாங்கிக்கொள்ள வீராசாமியால் முடியவில்லை. அதேபோன்றுதான் வீரபாண்டி ஆறுமுகமும் அடிக்கடி பொறுமை இழக்க ஆரம்பித்துவிட்டார். துரைமுருகனுக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சில மாத காலம் தனது இலாகாவை பொன்முடி வசம் ஒப்படைத்தார். மீண்டும் வந்து துறையை துரைமுருகன் பற்றிக்கொண்டாலும், ஜோக் அடித்து முதல்வரைச் சந்தோஷப்படுத்துகிற அளவுக்கு துறையின் அதிகாரிகளை வேலை வாங்க அவரால் முடியவில்லை. கோ.சி.மணியும் அவ்வாறே சிரமத்தின் உச்சத்தில்! ஆனால், இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சர் பதவி தராமல் தவிர்க்க கருணாநிதியால் இயலவில்லை. ஏன், இலாகா மாற்றம் செய்யக்கூட கருணாநிதியால் இயலவில்லை.

முதலமைச்சரின் செயலாளர்களாக இருக்கும் ராஜரத்தினம், தேவராஜ், ராஜமாணிக்கம் மூவரும் ஓய்வு பெற்ற அதிகாரிகள். சண்முகநாதன், மருதநாயகம் ஆகியோரும்கூட ஓய்வு பெற்றவர்கள்தான். 'முதலமைச்சர் அலுவலகம் சீனியர் சபா மாதிரி இருக்கிறது' என்று காமென்ட் கிளம்ப... பிரபாகரன் ஐ.ஏ.எஸ்., இப்போது அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். முகதாட்சண்யம், பழக்கம், ஆரம்ப காலத்தில் இருந்து உடன் இருந்தவர்கள் என்று பலருக்குப் பதவிகள் கொடுக்கும்போது அதனால் வரும் சிரமங்கள் தி.மு.க. ஆட்சியின் நிர்வாகக் குழப்பங்களாக உருவெடுக்கின்றன. தெரிந்தும் இதை முதல்வரால் தடுக்க முடியவில்லை என்றே கோட்டையில் கிசுகிசுக்கிறார்கள்.

4. காற்றில் பறந்த கொள்கைகள்

'நீங்கள் மாவட்டச் செயலாளராக யாரை வேண்டுமானாலும் நியமித்துக்கொள்ளுங்கள். அவர் பகுத்தறிவாள-ராக இருக்க வேண்டும்' என்று கட்சிப் பொதுக் குழுவில் பரமத்தி சண்முகம் சொன்னார். 'அதெல்லாம் முடியாதுய்யா'--படக்கென்று மறுத்தாராம் கருணாநிதி. கட்சியின் பொருளாதாரக் கொள்கை 'விஞ்ஞான சோஷலிசம்' என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. இன்று உலகமயமாக்கல் கொள்கையை அச்சு மாறாமல் பின்பற்றுகிறது தி.மு.க. மாநில சுயாட்சி என்ற முழக்கத்தைக் மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்கக்கூட தி.மு.க. முயற்சிக்கவில்லை. நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தி எழுத்தை எழுதிவைத்தது டி.ஆர். பாலுவின் துறை.

சூரியநாராயண சாஸ்திரி என்ற சம்ஸ்கிருதப் பெயரை பரிதிமாற்கலைஞர் என்று அந்தத் தமிழறிஞர் மாற்றிக்கொண்டார். அவருக்கு வெளியிட்ட அஞ்சல் தலையில் சூரியநாராயண சாஸ்திரி என்றே அச்சடித்தவர் மத்திய அமைச்சர் ஆ.ராசா. கடந்த தி.மு.க. ஆட்சியின் தமிழ் வளர்ச்சிக்கு என தனி அமைச்சர் நியமிக்கப்பட்டார். இன்று அதுவும் இல்லை. இப்படி பகுத்தறிவு, பொருளாதாரம், அரசியல், மொழி என அனைத்து முனைகளிலும் வைத்திருந்த கொள்கைகள் காலப்போக்கில் காற்றில் பறந்ததால்... அந்தக் கொள்கை-களுக்காகவே தி.மு.க. மீது பிரியம் காட்டியவர்கள் பின்னுக்குப் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

5.வினையே பங்கு தராததால்தான்!

2004 நாடாளுமன்றத் தேர்தல், அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தல் ஆகிய இரண்டிலும் வலுவான கூட்டணி தி.மு.க. தலைமையில் அமைந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் 40 தொகுதிகளையும் கைப்பற்றினார்கள். சட்டமன்றத் தேர்தலில் வைகோவைத் தன் பக்கம் அழைத்து நிறுத்தினார் ஜெயலலிதா. அந்தத் தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் தங்கள் ஆதரவை வெளியில் இருந்து கொடுத்தன. அவர்களுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் இந்த இரண்டாண்டுகளாக அவர்கள் கொடுத்த குடைச்சலும் இதனால் ஏற்பட்ட குழப்பமும் நடந்திருக்காது.

அரசாங்கத்தின் மீது அ.தி.மு.க. வைத்த குற்றச்சாட்டுகளைவிட கூட்ட-ணிக் கட்சிகளாக இருந்த பா.ம.க-வும் மார்க்சிஸ்ட்டும் வைத்த விமர்-சனங்கள்-தான் அதிகம். அவர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்திருந்தால் சில தி.மு.க-வினர் மந்திரி ஆக முடிந்திருக்காது. ஆனால், கூட்டணியாவது கெட்டியாகியிருக்கும். சில தனி மனிதர்களைத் திருப்திப் படுத்துவதற்காக சில கட்சிகளை இழந்து, இன்று நாலு பக்கமும் இடி வாங்கும் நிலை வந்திருக்காது. பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்றுதான் தேர்தலுக்கு முன் கருணாநிதி பேட்டி தந்தார். ஆனால், வெற்றி பெற்றதும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. பகிர்ந்து கொடுத்திருந்தால் இன்று தி.மு.க. அரசுதான் அத்தனைக் குழப்பத்துக்கும் காரணம் என்று கூட இருந்தவர்களே மக்களோடு சேர்ந்து 'சிங்கிள் குற்றவாளியாக' நிறுத்தியிருக்க மாட்டார்கள்!

6. கூட்டணிக் கட்சிகளைக் காரணம் இல்லாமல் பகைத்தது.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து கூட்டணியை விட்டு கம்யூனிஸ்ட்டுகள் விலகியதில் சிக்கல் ஆரம்பமானது. அப்போது காங்கிரஸை கம்யூனிஸ்ட்டுகள் விமர்சிக்க ஆரம்பித்தார்கள். இதெல்லாம் டெல்லி விவகாரம் என்று அமைதியாக இருக்காமல், விமர்சனக் களத்தில் குதித்தார் ஆற்காடு வீராசாமி. 'அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் அடுத்த தேர்தலில் காணாமல் போவார்கள்' என்று அவர் ஆரம்பித்ததும்தான் கம்யூனிஸ்ட்டுகள் பதில் தர வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அதை கட்டுப்படுத்தாமல் கவிதை அஸ்திரம் தொடுத்து, மார்க்சிஸ்ட் எம்.பி-யை வம்புக்கு இழுத்தார் கருணாநிதி. கம்யூனிஸ்ட்டுகள் மொத்தமாகக் கம்பி நீட்ட, இந்த இரண்டு விஷயங்கள் காரணமானது.

அதற்கு முன்னால் கழட்டிக்கொண்டவர் டாக்டர் ராமதாஸ். ராமதாஸ் தடங்கல் போட்ட திட்டங்களை-எல்லாம் தள்ளி வைத்து மக்கள் நலப் பணிகளில் பின்னுக்குப் போகவும் தயாராக இருந்த இதே தி.மு.க. அரசு, தனிநபரான காடுவெட்டி குரு விவகாரத்தில் சீறிக்கொண்டு பாய்ந்து கைது செய்தது! குருவின் குதர்க்க பேச்சையட்டிய நிகழ்வுகளால் கூட்டணி துண்டானது. இந்த உடைப்பு மக்களை எந்த வகையிலும் தி.மு.க. மீது அனுதாபத்தோடு பார்க்க வைக்கவில்லை. கடைசியாக இருந்தது காங்கிரஸ்தான். அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே மாநில மந்திரி பதவி மீது குறிவைத்து வந்தார்கள். கருணாநிதி அதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தங்கபாலு குரல் கொடுத்ததைத் தொடர்ந்து... திருச்சியில் திடீரென்று 'சோனியா சொன்னால் பொதுக்குழுவைக் கூட்டி விவாதிக்கலாம்' என்று கருணாநிதி இறங்கி வருவதைப் போல காட்டிக்கொண்டதும் காங்கிரஸார் துள்ளிக் குதித்தனர். அன்றைய தினமே காட்சிகள் மாறி... டெல்லிக்கு அழைத்து தங்கபாலு கண்டிக்கப்பட்டார். சும்மா இருந்த காங்கிரஸாருக்கு இது சுரீரென்றது. காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள். இலங்கைப் பிரச்னை வெடிக்கவும், 'கருணாநிதியோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா அணுகுமுறைதான் சூப்பர்' என்று பட்டவர்த்தனமாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள்.

"நெடுமாறனிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும். 'சோ' ராமசாமியும் திட்டக் கூடாது... இப்படியரு எல்லார்க்கும் இனியராக இருக்க நினைக்கிற எங்கள் தலைவரின் குணம்தான் இன்று எம்.பி-க்கள் ராஜினாமா என்று கெடு வைத்து சபதம் போடுகிற அளவுக்கு அவரைக் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது. வைகோ தொடங்கி எத்தனை பேரை எங்கள் அரசு கைது செய்தாலும் குழப்பம் பண்ணுகிற தமிழக காங்கிரஸார் திருப்தி அடையவே மாட்டார்கள். அவர்களின் நோக்கம் 'மந்திரி சபையில் இடம் கொடுக்காமல், டெல்லியை வைத்து தண்ணி காட்டிய கருணாநிதிதானே, தவிர பிரபாகரன் அல்ல!" என்பது தி.மு.க-விலேயே நிலவும் வருத்தமான கருத்து.

7. பல்டிகள் பலவிதம்

யோசித்து முடிவுகள் எடுப்பார். எடுத்த முடிவில் கடைசி வரை உறுதி-யாகவும் இருப்பார் என்று கருணா-நிதிக்குப் பெயர் உண்டு. ஆனால்,சமீப காலமாக அவர் அடித்து வரும் பல்டி களுக்கு அளவில்லாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்-படுத்துபவர்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் என்ற அவரது அறிவிப்பை யாரும் ஏற்கவில்லை. ஆற்காடு வீராசாமியைத் தவிர. எதிர்க்கட்சிகள் கண்டித்ததும் வாபஸ் வாங்கினார். இது கடைசியாக வந்த வாபஸ் அறிவிப்பு! அதற்கு முந்தையது பெரிய பட்டியல்!

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் பணி மூப்பு அடிப்படையில் இருக்கும் என்று முந்தைய தி.மு.க. ஆட்சியில் போடப்பட அறிவிப்பை, இந்த அரசு வந்ததும் மாற்றினார்கள். இதை எதிர்த்து வழக்குகள் பாய்ந்தது. எதிர்த்து வாதாடினார்கள். வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை போனது. கடைசியில் அப்படியே ஆகட்டும் என்று ஒப்புக்கொண்டார்கள். ஹெல்மெட் கட்டாயம் சட்டமும் அங்ஙனமே! 'போட்டால் நல்லது... போலீஸ் பிடிக்க வேண்டாம்' என்று பிற்பாடு குழப்பக் களஞ்சியமாக மாறியது. ஒகேனக்கல் திட்டத் துவக்க விழாவை ஊரறிய நடத்தி வெளிச்சமிட்டு, கர்நாடகத்துக் கண்களை உறுத்தி அது விவகாரமாக மாறிய பின்... டெல்லியிலிருந்து வந்த மறைமுக பிரஷரால் 'கர்நாடகாவில் புது அரசு அமைந்த பிறகு, அது பற்றி பேசலாம்' என்று பின் வாங்கினார் கருணாநிதி. பால் விலை உயர்வும்கூட மூன்று நாட்கள் திருத்தித் திருத்தி அறிவிக்கப்பட்டன.

தாம்பரம் அருகே சேட்டிலைட் சிட்டி, பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வது என்ற அறிவிப்புகள் ராமதாஸின் எதிர்ப்பில் முனை மழுங்கிப் போனது. இது போதாது என்று கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அவர்களே கூட்டமாக வந்து திருப்பிக் கொடுத்துவிட்டுப் போன சம்பவங்களும் நடந்தன.

இப்படி எந்த முடிவுகள் எடுத்தாலும் அதில் தீர்க்கமான முன்யோசனைகள் முதல்வருக்குப் போய்ச் சேராமல், மாற்றுக் கட்சிகளின் விமர்சனங்களைப் புறந்தள்ளக்கூடிய உறுதியும் இல்லாமல், நல்ல விஷயங்களைக்கூட காவு கொடுப்பதை தி.மு.க. அரசு தனது அடையாளமாக்கிவிட்டது!

8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி!

தனியார் ஏலம் எடுத்து நடத்தி வந்த மதுக்கடைகளை டாஸ்மாக் வசம் மாற்றி இதன் மூலம் கிடைக்கும் பணம் அரசுக்குச் சொந்தம் என்று ஜெயலலிதா அறிவித்தார். 'அரசாங்கம் சாராயம் விற்கலாமா' என்று கேட்டார் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி. இரண்டு ஆண்டுகளாக இந்த அரசும் அதே காரியங்களைத்தான் செய்து வருகிறது. மணல் அள்ளும் காரியங்களையும் அரசு வசம் கொண்டுவந்தது அ.தி.மு.க. இது சிலர் கொள்ளை லாபம் பார்க்கவே பயன்படும் என்றது தி.மு.க! இப்போதும் மணல் அள்ளும் முறை பற்றிய மிகக் கடுமையான விமர்சனங்கள்! அரசு கேபிள் ஆரம்பிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மசோதா தாக்கல் செய்ததும் கவர்னரைப் பார்த்துவிட்டு வந்து, மசோதா முடிவுக்கு கடும் எதிர்ப்பு காட்டினார் கருணாநிதி. இப்போது ஜெயலலிதா அரசைவிட மிகத் தீவிரம் காட்டினார் அரசு கேபிள் அமைப்பதில் (பிறகு, சொந்த காரணங்களுக்காக அதை தி.மு.க. அரசே மந்தப்படுத்தி வைத்திருப்பது தனிக் கதை!). இப்படி ஜெயலலிதா சொல்லி செயல்படுத்திய முக்கிய திட்டங்களை அப்படியே வழி மொழிந்ததன் மூலம் ஜெ. செய்தது எல்லாம் சரிதானோ என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிட்டது.

மேலும், ஜெயலலிதா மீதும் அவரது ஆட்சியில் செய்யப்பட்ட முறைகேடுகள் என்றோ பெரிய அளவில் வழக்குகள் இந்த ஆட்சியில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏற்கெனவே போட்ட வழக்குகளிலும் அணுகுமுறை திருப்தியாக இல்லை என்று தி.மு.க-வுக்குள்ளேயே கருத்து இருக்கிறது. "ஏன் இந்த வழவழப்பு?" என்று உடன்பிறப்புகள் கேள்வியில் அதிருப்தி நிறைய தெரிகிறது.

9. கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்

'ஜனநாயக முறைப்படி கட்சித் தேர்தல் நடத்தும் ஒரே கட்சி' என்று தி.மு.க-வினர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். ஆனால், இம்முறை நடந்து வரும் உள்கட்சித் தேர்தலிலோ, போட்டி போட நினைப்பவர்களுக்குத் தாக்கல் செய்ய மனு கொடுக்கவே மறுப்பதாகக் குற்றச்சாட்டு மலைமலையாய் தலைமைக் கழகத்தில் குவிந்துகொண்டு இருக்கிறது. கிளைக் கழகச் செயலாளர் தேர்தலில் போட்டியிடக் கூட மாவட்டச் செயலாளர் மனது வைத்தால்தான் முடியும். கஷ்டப்பட்டு மனு வாங்கிவிட்டால் அதற்குப் பணம் கட்டிய பில் வாங்க முடியாது. இவ்வளவையும் மீறி மாவட்டச் செயலாளரை 10 தடவை பார்த்து தலைமைக்கு 100 தடவை போன் செய்வதற்கு, போட்டியிடாமல் சும்மாவே இருக்கலாம் என்று ஒதுங்கும் தலைகளையும் பார்க்க முடிகிறது. கிளைக் கழகத் தேர்தலில் இந்த நிலைமை என்றால் நகரச் செயலாளர் பதவிக்கு மாவட்டச் செயலாளரை மீறி யாரும் போட்டி போட முடியாது. அப்படியே மீறி நடந்தாலும் வேண்டாதவர் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது என்றால், இருக்கிற மொத்த கோஷ்டியிலும் ஆளுக்கு ஒருவருக்கு சான்ஸ் அடிக்கிற மாதிரி குழு அமைத்து அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். மாவட்டச் செயலாளர் பதவி மொத்தமும் நியமனம்தான். 'தலைவர் சொல்லிட்டார்... தளபதி சொல்லிட்டார்...' என்று நியமனங்கள் மளமளவென்று நடந்து முடிகிறதாம். அனைத்து ஒன்றியங்களையும் நகரங்களையும் தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருந்த மாவட்டச் செயலாளர்களாக ஒரு காலத்தில் வீரபாண்டி ஆறுமுகம், கோ.சி.மணி, செஞ்சி ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ் ஆகியோர் வலம் வந்தார்கள். அப்படிப்பட்ட அசைக்க முடியாத தலைகள் இன்று இல்லை. தலைமை தயவால் மாவட்டச் செயலாளர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டவர்கள்தான் அதிகம். இவர்கள் தங்களுக்குக் கீழ் செல்வாக்கான நபர்கள் வந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்கி-றார்கள். மீறி செல்வாக்கான ஆள் வந்து விட்டால் அவரது கிளையை அ, ஆ என்று பாகம் பிரித்து பலவீனமாக்கிவிடுவதாகவும் குமுறல் இருக்கிறது. இவை அனைத்தும் தலைமைக் கழகத்தின் பார்வையிலேயே சத்தம் இல்லாமல் செய்து முடிக்கப்படுகிறது.

அத்தனையும் அருகில் நின்று பார்க்கும் அடிமட்டத் தொண்டனுக்கு, திகைப்பு தாங்கவில்லை. 'நம் கட்சியை நடத்துவது யார்?' என்ற கேள்விக்கு அவனிடம் பதிலே இல்லை!

10. காணவில்லை கட்டுப்பாடு!

'தி.மு.க. ஒன்றும் சங்கர மடமல்ல' என்பார் வாரிசு அரசியல் பற்றிப் பேச்சு வரும்போது. கலந்து பேசாமல் எடுக்கப்படும் தன்னிச்சையான முடிவுகளோ, குடும்பத்தின் தலையீடுகளோ தி.மு.க-வில் சாத்தியமே இல்லை என்ற அர்த்தமும் அதற்கு உண்டு. ஆனால், "இன்று பெரிய குடும்பத்தின் '3ஜி' (மூன்றாம் தலைமுறை) வரை சாலையில் பிரமாண்ட பேனர்களாக வந்து கட்சியில் தங்களுக்கான செல்வாக்கை நிலைநாட்டி வருகிறார்கள்" என்று எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனம் வைக்கின்றன.

மாறன் சகோதரர்களோடு வெடித்த மோதலின் போக்கை அடுத்தடுத்து எப்படிக் கொண்டுசெல்வது என்பதில் இருகூறாகப் பிரிந்து நின்றனர் கருணாநிதியின் குழந்தைகளான மு.க.அழகிரியும் செல்வியும்! கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை அமைச்சரவையில் வைத்திருப்பது தொடர்பாக ஸ்டாலின் - அழகிரிக்குள் இருவித கருத்துக்கள். கனிமொழிக்குப் பிடித்த அண்ணன் ஸ்டாலினா, அழகிரியா என்பதிலும் சிக்கல்கள்! கட்சியிலும் இதே நிலைமைதான். ஆண்டுதோறும் ஒரு முறையாவது பொதுக்குழு கூட்டுவார்கள். ஆட்சிக்கு வந்தது முதல் ஒரு முறைதான் நடந்துள்ளது. கட்சிக்கு முக்கியமே பேச்சாளர்கள்தான். சொற்பொழி-வாளர்கள் கூட்டமே சமீபத்தில் நடக்கவில்லை. இதுபோன்ற விஷயங்களை முன்பு அளவுக்கு முழுநேரமும் கவனிக்க முடியாத அளவுக்கு குடும்ப விவகாரங்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையெல்-லாம் நன்கு புரிந்து வைத்திருக்கும் மிக முக்கிய அதிகாரிகள் சிலர், அந்தக் குடும்ப பேதங்களையே தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டு... 'இங்கு தெரியாமல் அங்கும்... அங்கு தெரியாமல் இங்குமாக' தங்கள் விருப்பப்படி தயக்கமின்றி காரியங்களை நடத்திக்கொள்வதாகவும் வேதனைக் குரல்கள் கேட்கின்றன!

"எங்கள் தலைவர் நினைத்தால், அத்தனை விஷயங்களையும் தன் கட்டை விரலுக்கு அடியில் கொண்டுவந்து கட்டுப்படுத்திவிடுவார். ஆனால், அப்படி அவர் ஏன் நினைக்கவில்லை என்றுதான் புரியவில்லை" என்கிறார்கள் தி.மு.க-வின் உண்மைத் தொண்டர்கள்!

ம்... நடப்பது நடந்துதானே தீரும்!
( நன்றி: விகடன் )



--------------------------------------------------------------------------------

முரசொலி கட்டுரை
துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி!

தி. மு.கழக ஆட்சியை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் பாப்பாத்தி அம்மாளை அமர வைக்கவேண்டும் என்று துடியாய்த் துடிக்கின்றன அக்கிரகாரத்துப் பத்திரிகைகள்.

இந்த வாரத்து ஆனந்த விகடனில் ‘தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்’ என்ற தலைப்பில் - தி.மு.க.வையும் கலைஞரையும் கேலி செய்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. கட்டுரையை எழுதியிருப்பவர் ப.திருமாவேலன். (இவர் பார்ப்பனரல்ல)

பார்ப்பன நிர்வாகம் - ஆசிரியர் குழு இட்ட கட்டளையையேற்று - அல்லது ஆலோசனையை ஏற்று - 10 மெகா தவறுகள் என்று பட்டியலிட்டிருக்கிறார் அவர். முதல் தவறு என்று அவர் கண்டுபிடித்திருப்பது:-

தி.மு.க.வினர் அடி மட்டத் தொண்டன் முதல் தினமும் அடிக்கடி தலைமைக் கழகம் வந்து போகும் அமைச்சர்கள் வரை அத்தனை பேருக்கும் உள்ள சந்தேகம் "யார் தங்களுக்குத் தலைமை தாங்கப் போகும் அடுத்த தலைவர்" என்பதுதான்

- என்கிறார் கட்டுரையாளர்.

தி.மு.கழகம் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட 1949ம் ஆண்டு முதல் இன்று வரையில் உள்கட்சித் தேர்தல்களை - 12 முறை நடத்தி இருக்கிறது. 13வது தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

கிளைக்கழகத்திலிருந்து - மாவட்டக் கழகம் - பொதுக்குழு வரையில் அனைத்து மட்டங்களுக்கான தேர்தல்களும் ஜனநாயக முறைப்படி உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நடைபெற்று வருகிறது.

அண்ணா காலம் வரையில் - அதாவது 1969 வரையில் கட்சியில் பொதுச் செயலாளர் பதவி மட்டுமே இருந்து வந்தது. 1956 வரையில் அண்ணாவே பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு வகித்தார். 1956ல் அண்ணாவின் ஆதரவோடு நாவலர் இரா.நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969ல் கட்சியில் தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டது. கலைஞர் தலைவர் ஆனார்; நாவலர் பொதுச் செயலாளராக நீடித்தார்.

1969க்குப் பிறகு இன்று வரையிலும் நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் கழகத்தின் தலைவராக கலைஞர் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.

நாவலர் - அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளராக இனமானப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார். இன்று வரையில் - ஒவ்வொரு தேர்தலிலும் தேர்ந் தெடுக்கப்பட்டு பொதுச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஆகவே தி.மு.க.வில் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியே எழ இடமில்லை.

தேர்தலில் போட்டியிட்டு - பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுபவர்களே - தலைவர் ஆகப் பொறுப்பேற்க முடியும்.

இது தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிலிருந்து, அமைச்சர் பெருமக்கள் வரையில் எல்லோருக்கும் தெரியும்.

ஆனந்தவிகடன் போல -

வாசன்

வாசன் மகன் பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியத்தின் மகன்

சீனிவாசன் என்று

எழுதத் தெரியுமோ - தெரியாதோ - ஆசிரியராக வந்து விடுவதுபோல - தி.மு.கழகத்தில் தலைவர் ஆகிவிட முடியாது.

இப்போது - ஒன்றியத் தேர்தல்கள் முடிந்து - மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முறையாக இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு - பொதுக்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் மூலம் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இன்னும் ஓரிரு மாதங்கள் காத்திருந்தால் - புதிய பொதுக்குழு கூடி தி.மு.கழகத்தின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இதுவெல்லாம் விகடனுக்குத் தெரியாதா என்றால், தெரியும்!

உட்கட்சித் தேர்தல்களையே நடத்தாது - தனது இஷ்டம் போல கிளைச் செயலாளர் - மாவட்டச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர் வரையில் பந்தாடுவார் ஜெயலலிதா! நேற்று இருந்தவர் இன்றில்லை என்கிற அளவுக்கு - கட்சியின் சகல மட்டங்களுக்கும் தனது விருப்பு வெறுப்புக்கேற்ப - நிர்வாகிகளை நியமனம் என்ற பேரால் திணிப்பார் அல்லது மிதிப்பார். பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்று அ.தி.மு.க.வில் யாருக்குமே தெரியாது. ஜெயலலிதா இஷ்டப்பட்டு பொதுக்குழு என்று ஒன்றினைக் கூட்டுவார். அதிலே கலந்து கொள்ள அவர் யார் யாருக்கு அழைப்பு அனுப்புகிறாரோ - அவர்கள் மட்டும்தான் பொதுக்குழு உறுப்பினர்கள்.

பொதுக்குழுவுக்கு வரலாம். எதுபற்றியும் எவரும் பேச முடியாது. ஜெயலலிதா ஏழு நிமிடமோ - பத்து நிமிடமோ பேசுவார். கைதட்டலாம். வயிறு நிறைய பிரியாணி விருந்து சாப்பிடலாம்!

அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்

யார் என்று கேட்கக்கூட

யாருக்கும்

தைரியம் கிடையாது.

அவர்களாவது கட்சிக்காரர்கள் - ஜெயலலிதாவைக் கண்டு நடுங்கி - ஒடுங்கிக் கிடப்பது பற்றி ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

ஆனால் விகடன் போன்ற

வீராதி வீர ஏடுகள்கூட,

ஜெயலலிதாவின் 10 மெகா தவறுகள் என்று விமர்சனமோ; அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? ஜெயலலிதாவா? சசிகலாவா? தினகரனா? - என்று கேள்வியோ எழுதுவதில்லையே; ஏன்?

ஜெயலலிதா

அவரே மார்தட்டிக்

கொண்டதுபோல

பாப்பாத்தி.

விகடன் சீனுவாச அய்யரின் சாதியைச் சேர்ந்தவர். அதனால் - அவர் இடறி விழுந்தாலும் அடடா; என்ன அழகாக விழுந்தார் என்று எழுதுவார்கள்! கோடநாட்டில் போய் மாதக்கணக்கில் ஓய்வு என்ற பேரில் ஒளிந்து கிடந்தாலும், அடடா; எப்பேர்ப்பட்ட ஓய்வு? எப்படிப்பட்ட தூக்கம்? என்ன இனிமையான குறட்டை?

- என்று பார்ப்பன பக்திபரவசத்துடன் - உடலெல்லாம் புல்லரிக்க - புளகாங்கிதத்தோடு போற்றி எழுதுவார்கள்!

2. ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக் குடும்பத்தில் எத்தனை எத்தனையோ சண்டைகள் நடக்கும். வளர்ப்பு மகனையே கஞ்சா வழக்கில் கைது செய்வார்கள்; தினகரனா, மகாதேவனா என்று சிண்டு பிடிச் சண்டை நடக்கும்; சசிகலா வேண்டும்; சசிகலாவின் கணவர் வேண்டாதவர் என்று புழுதி மாயம் செய்யப்படும். சசிகலாவின் கணவருக்கு வேண்டியவர் என்பதாலேயே ஒரு பெண்ணை கஞ்சா வழக்கில் கைது செய்து - அவரிடமிருந்து பல லட்சம் ரூபாய்கள் பறிமுதல் செய்யப்படும்! சசிகலாவா? இளவரசியா? என்று புதிய போர் மூளும். இந்த மன்னார்குடிக் குடும்பத்து விவகாரங்களால் - ஜெயலலிதாவின் பெரும்பகுதி கவனம் அதிலேயே செலவாகிறது - என்று குற்றம் சொல்லாது விகடன் - காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

3. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மந்திரிகள் அடிக்கடி பதவி பறிக்கப்பட்டார்கள்; ஒரு மந்திரி பதவி ஏற்ற மூன்றாம் நாளே கல்தா கொடுக்கப்பட்டார். ஒரு மந்திரி கன்னத்தில் போட்டுக் கொள்வதாலேயே பதவியில் நீடித்தார். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிக்கு புதிய பதவி வீரப்பன் பேரால் உருவாக்கப்படும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் சட்டசபைச் செயலாளர் பதவி நீட்டிப்புச் செய்தபடியே இருக்கும். ஜெயலலிதாவுக்கு வேண்டியவர் என்பதால் தேர்தல் அதிகாரியின் பதவி ஆயுட்கால பதவியாக நீட்டிக்கப்படும் - அதையெல்லாம் சுட்டிக்காட்டி ‘சீனியர் சபா’ என்று தவறுப் பட்டியல் போடாது விகடன்!

காரணம்

ஜெயலலிதா

பாப்பாத்தி!

4. ஆரியமாயையும், கம்பரசமும், மாஜி கடவுள்களும், எழுதிய அண்ணாவின் பெயரைக் கட்சிக்கும் - அவரது உருவத்தைக் கொடியிலும் பொறித்து வைத்துக் கொண்டு - மலையாளத்து உன்னிகிருஷ்ணன் பணிக்கரின் ஆலோசனை கேட்டு யாகம் நடத்துவார்; அண்ணாவின் ஆட்சியில் நிறுவப் பெற்ற கண்ணகி சிலையை அகற்றி மியூசியத்து இருட்டறையில் தள்ளுவார்; சங்கர மடம் போய் கஜபூஜை நடத்துவார். குருவாயூர் கிருஷ்ணனுக்கு குட்டி யானை காணிக்கை செலுத்துவார். இப்படி அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு - வர்ணாஸ்ரமதர்ம - மனுதர்ம ஆட்சி நடத்தினாலும் ஜெயலலிதா கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டார் என்று ஒரு பட்டியல் போடாது விகடன். காரணம் என்ன?

ஜெயலலிதா

பாப்பாத்தி!

5 - 6 ராஜீவ் படுகொலையில் மூப்பனாருக்கும் பங்குண்டு என்று குற்றஞ்சாட்டிய ஜெயலலிதா - 2001 தேர்தலில் மூப்பனாரின் வீடு தேடிச் சென்று அவரோடு கூட்டணி அமைத்துக் கொண்டார்.

2001 தேர்தலில் அவரை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பா.ம.க., இடதுசாரிகள், காங்கிரஸ் (த.மா.கா.) ஆகிய கட்சிகளை எல்லாம் கூட்டணியிலிருந்து கழற்றிவிட்டார். ஜெயலலிதா தனது கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராதது மெகா தவறு என்றோ, கூட்டணிக் கட்சிகளை காரணம் இல்லாமல் பகைத்தது மெகா தவறு என்றோ விகடன் பட்டியலிடாது. காரணம் என்ன? ஜெயலலிதா சுயஜாதியைச் சேர்ந்தவராயிற்றே!

7. பல்டிகள் பலவிதம் என்று தி.மு.கழக ஆட்சியின் மெகா தவறு என்று பேனாவை ஓட்டும் விகடன்! மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது; பின்னர் 2004 தேர்தல் தோல்வி காரணமாக வாபஸ் பெற்றது; கிராமப்புற தெய்வங்களின் ஆலயங்களில் ஆடு, கோழி பலியிட்டு படையலிடக்கூடாது என்று ஒரு உத்தரவு; 2004 தேர்தலுக்குப் பிறகு - தோல்வி தந்த பாடத்தால் - வாபஸ் பெற்றது போன்றவையெல்லாம் விகடனின் பார்வையில் பல்டிகளாகப் படாது! பொடா சிறையிலடைத்த வைகோ.வை 2006 தேர்தலில் கூட்டணி சேர்த்துக் கொண்டதுகூட விகடனுக்கு பல்டிகள் பலவிதமாகத் தோன்றாது. காரணம் என்ன? ஜெயலலிதா பாப்பாத்தி ஆச்சே!

8. ஜெயலலிதா செய்ததெல்லாம் சரி என்பது போல இன்றைய தி.மு.கழக ஆட்சி நடைபெறுகிறதாம். ஜெயலலிதா 10 ஆயிரம் சாலைப்பணியாளர்களையும், 13 ஆயிரம் மக்கள் நல ஊழியர்களையும் வேலை நீக்கம் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்களுக்கெல்லாம் மீண்டும் வேலை கொடுத்தது. ஜெயலலிதா அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஒரு சொட்டு மையில் டிஸ்மிஸ் செய்தார். தி.மு.கழக ஆட்சி அவர்கள் மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை எல்லாம் அறவே ரத்துச் செய்தது. 20 சதவிகித போனசைத் திருப்பித் தந்தது; எஸ்மா - டெஸ்மா சட்டங்களுக்கு முடிவு கட்டியது. இவையெல்லாம் ஜெயலலிதா செய்த தவறுகளைச் சரி செய்த நடவடிக்கைகள். ஆனால் விகடன் மெகா தவறு என்ற பெயரில் என்ன கூறுகிறது? "ஜெயலலிதா செய்ததெல்லாம் சரிதான் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தி.மு.கழக ஆட்சி ஏற்படுத்திவிட்டது" என்கிறது. காரணம் என்ன? கலைஞர் மீதான - சாதித் துவேஷம்; ஜெயலலிதா மீதான சுயசாதி அபிமானம்!

9. விகடனின் இட்டுக்கட்டலில் ஒன்பதா வதாகக் கூறப்படும் தவறு "கேலிக் கூத்தாகும் கட்சித் தேர்தல்" என்பதாகும். தேர்தலே கிடையாது; வைத்தால் குடுமி, சிரைத்தால் மொட்டை என்பது போலச் செயல்படும் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்கி ‘பராக்’ கூறும் விகடன் - சிற்றூர்க் கிளை முதல் - மாநகராட்சி வரையில் நடத்தப்படும் தேர்தலில் - அங்கொன்றும் - இங்கொன்றுமாகத் தென்படும் சிறுசிறு குறைகளை - துரும்பைத் தூணாக்கிக் காட்டுவது போல - பூதக் கண்ணாடி வைத்து அவைகளைப் பெரிது படுத்தப் படாதபாடு பட்டிருக்கிறது.

"நம் கட்சியை நடத்துவது யார்?" என்ற கேள்விக்கு தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டனிடம் பதிலே இல்லையாம்! தி.மு.க.வை நடத்துவது விகடன் சீனுவாச அய்யர் இல்லை என்று தி.மு.க. தொண்டர்கள் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்!

10 ‘காணவில்லை கட்டுப்பாடு’ என்று ஒரு மெகா தவறை கற்பித்திருக்கிறது விகடன்! ஒன்றியத் தேர்தல் வரை பல்லாயிரக்கணக்கான ஊர்களில் - நிர்வாகிகள் தேர்தலில் போட்டி நடந்ததையும் - வெற்றி பெற்ற நிர்வாகிகளின் பெயர்ப் பட்டியல்களையும் நாள் தவறாது - தி.மு.க. தலைமை நிலையம் - முரசொலியில் பக்கம் பக்கமாக வெளியிட்டபடியே இருக்கிறது! ஆனால் விகடனோ காணவில்லை கட்டுப்பாடு என்கிறது! ஆட்சிக்கு வந்த பிறகு ஒருமுறைதான் கழகப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது என்பது ஒரு தவறாம். ஆட்சிக்கு வருவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு 3.3.2006 அன்று திருச்சியில் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஆட்சிக்கு வந்தபின் 2.6.2008 அன்று சென்னையில் பொதுக்குழு நடத்தப்பட்டது. சொற்பொழிவாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெறவே இல்லை என்று கூறுகிறது விகடன். 2006 மார்ச் மாதத்தில் சொற்பொழிவாளர்கள் கூட்டமும் நடந்திருக்கிறது. மெகா தவறுகள் 10 என்று விகடன் பட்டியலிட்டிருப்பவை எல்லாம் - தி.மு.க.வின் தவறுகள் என்பதைவிட - ஜெயலலிதாவின் தவறுகளை மறைத்து - அவருக்குத் தங்க முலாம் பூசி - அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்கிற சுயசாதி அபிமானத்தின் வெளிப்பாடுகள் என்பதே பொருத்தமாக இருக்கும்.



* ஒரு நாட்டை ஆளும் முதலமைச்சரிடம் இவ்வளவு ஜாதி காழ்ப்புணர்வு இருந்தால் எப்படி எல்லோரையும் சமமாக பார்க்கமுடியும் ?
* பதிலுக்குக் கருணாநிதியின் ஜாதிக் பெயரை நாலு முறை விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும் எழுத/பேச ஆரம்பித்தால் நன்றாக இருக்குமா ?
* பார்ப்பனர்களை பேசினால் ஜாதிக்கலவரம் வராது என்ற ஒரே கரணத்துக்காக இப்படி பேசிக்கொண்டே போகலாமா ?
* அடிக்கடி நானும் ஒரு பத்திரிக்கையாளன், பத்திரிக்கை சுதந்திரம் என்று பேசுவதெல்லாம் சும்மாவா ?
* இந்த மாதிரி கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால் அது கன்னித்தீவை மிஞ்சிவிடும் என்பதால் நிறுத்துகிறேன்.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP