விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்!

>> Tuesday, November 4, 2008

விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்! ( முரசொலி 4-11-08 அன்று வந்த கட்டுரை )


இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் களிழைக்கப்படும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழக மக்கள் - சிங்கள அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதும், உடனடியாக,

பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பனப் பத்திரிகையாளர்களும் "இது இலங்கைத் தமிழர் களுக்கு அளிக்கும் ஆதரவல்ல; விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் முயற்சியே" என்று கூக்குரலிடுவதும் வாடிக்கையாகி இருந்து வருகிறது.


விடுதலைப் புலிகளை ஆதரித்து சீமானோ அமீரோ உணர்ச்சி வசப்பட்ட நிலையில்
பேசினால் "அவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை?" என்று தமிழின விரோதிகள் கனைப்பார்கள்.


ஆனால் அதே சமயம் தினமணி வைத்திநாத அய்யரோ, விகடன் சீனுவாச அய்யரோ - தமிழக மக்களின் கருத்து என்ற பேரால் - கருத்துக் கணிப்பு என்ற பேரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக - தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று எழுதினால் - எவனும்,

தினமணி வைத்திநாத அய்யரைக் கைது செய் என்றோ, விகடன் சீனுவாச அய்யரைக் கைது செய் என்றோ முனுமுனுக்கக்கூட மாட்டான்.

தினமணி கருத்துக் கணிப்பு என்ற பேரால் - விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளியிட்ட புள்ளி விபரம் இது:-

"விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என்று 51 சதவீத மக்கள் கருத்துத் தெரிவித்தார்கள்" என்பதோடு தினமணி நின்றுவிடவில்லை.

"புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால் - என்ற கேள்விக்கு

- தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் தரப்படவேண்டும் என்று 23 சதவீதத்தினரும்

- ஐக்கிய நாடுகள் சபை தலையிடவேண்டும் என்று 25 சதவீதத்தினரும்

- அப்படி நடக்காமலிருக்க நமது ராணுவத்தை அனுப்பவேண்டும் என்று 31 சதவீதத்தினரும் கருத்துத் தெரிவித்திருக் கிறார்கள்.

புலிகள் இயக்கம் பற்றிக் கருத்து என்ன?

- என்ற கேள்விக்கு கருத்துத் தெரிவித்த மக்களில் 12 சதவீதம் பேரே ‘பயங்கரவாதிகள்’ என்ற பட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

- ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள் என்று 30 சதவீதத்தினரும்

- ஈழத் தமிழர் நலனுக்காகப் பாடுபடுகிறவர்கள் என்று 22 சதவீதத்தினரும்,

- ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல் என்று 36 சதவீதத்தினரும்

கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது சரியா என்ற கேள்விக்கு,

- அங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் சரியே என்று 44 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்."

- என்பதாகப் புள்ளி விவரம் வெளியிட்டு - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் - புலிகள் தோற்கடிக்கப்பட்டு பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டால் தமிழ்நாட்டில் அவருக்கு அரசியல் புகலிடம் தரப்படவேண்டும்; ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும், அப்படி நடக்காமலிருக்க இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

- விடுதலைப் புலிகள் ஈழ விடுதலைக்காகப் போராடுகிறவர்கள், ஈழத் தமிழர் நலனுக்காகப் பாடுபடுபவர்கள்,

- ஈழத் தமிழர்களின் ஒரே, உண்மையான குரல் விடுதலைப் புலிகள்தான்.

- ஈழத்தில் இருப்பவர்களும் தமிழர்கள், இங்கே இருப்பதும் தமிழர்கள் என்பதால் ஈழப் பிரச்சினை யிலே தமிழக அரசியல்வாதிகள் தலையிடுவது தவறு அல்ல;

- என்றும் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்களிடம் எவ்வளவு அபாரமான ஆதரவு இருக்கிறது என்பதை புள்ளி விபரத்துடன் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டிருந்தார் தினமணி வைத்தினாத அய்யர்.

தினமணியை முந்திக் கொண்டு ஆனந்த விகடன் சீனுவாச அய்யர் -

‘நிச்சயம் தமிழீழம் வேண்டும்’ என்று தலைப்பிட்டு 4195 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தி "ஈழத் தமிழர் விவகாரத்தில் இங்கே நிலவும் மனநிலை இதுதான்" - என்று அடித்துச் சொல்லும் சர்வே என்ற முகவுரையோடு - விடுதலைப் புலிகளின் ஆற்றல், ராஜதந்திரம் - அவர்களுக்கு தமிழக மக்களிடையே இருக்கும் அபரிமிதமான ஆதரவு பற்றியெல்லாம் ஓங்கியடித்து ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டிருந்தார்.

அவர் கருத்துக் கணிப்புடன் சேர்த்து வெளியிட்டிருந்த கட்டுரையின் சில பகுதிகள் வருமாறு:

"ஜூலை 25, 1983...! இலங்கையில் இன வெறிக்கான வெறுப்பு விதை அழுத்தமாக விழுந்த நாள். சிங்கள ராணுவம் முதல்முறையாக ஈழத் தமிழ்ப் பகுதிகளில் வெறிபிடித்து வேட்டையாடி, அப்பாவித் தமிழர் பிணங்களை அடுக்கிய நாள். தனித் தமிழீழப் போராட்டத்துக்கு உணர்ச்சி நெருப்பேற்றிய அந்தக் கறுப்பு ஜூலை முடிந்து 25 வருடங்களாகின்றன!

அரை நூற்றாண்டு காலமாக யுத்தத்தின் ரத்தத்தில் நனைகிறது ஈழ மண். நிலம், குடும்பம், உயிர், உடைமை என எல்லாவற்றையும் இழந்து துயரத்தின் பிள்ளைகளாக வாழ்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழ விடுதலைக்காக, இலங்கை அரசுக்கு எதிராக எத்தனையோ இயக்கங்கள் எழுந்து விழுந்துவிட்டன. ஓயாத அலைகளாக இன்று வரை உலக அரங்கத்தில் உறுமிக்கொண்டு இருக்கிற ஒரே அமைப்பு, ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’!

சர்வதேசத் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ஒன்றாக இருந்தாலும், உலகில் வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத கண்ணிய மரியாதை விடுதலைப்புலிகளுக்கு உண்டு. உலக நாடுகளின் துணையோடு எதிர்க்கிற இலங்கை ராணுவத்துக்கு, புலிகள் ஒவ்வொரு கணமும் சிம்ம சொப்பனம்தான்!

‘ஷெல்லடிக்கிற ராவுகளும் எங்கட பெண்டு பிள்ளைகளைக் கைபிடிச்சு இழுக்கிற ஆர்மிக்காரவுகளும் இல்லாத எங்கட மண் வேண்டும்’ என ஏங்கிக் கிடக்கும் ஈழ மக்களின் ஒரே நம்பிக்கையும் புலிகள்தான்!

ஆனால், புலிகள் அமைப்பு பலவீனமடைந்துவிட்டது. அமைப்புக்குள்ளேயும் உலக நாடுகளின் பார்வையிலும் அது பின்னடைவில் இருக்கிறது என்பது மாதிரியான தோற்றம் இப்போது ஏற்பட்டிருப்பது உண்மையா..? ஆன்டன் பாலசிங்கம், சுப.தமிழ்ச்செல்வன் போன்ற முக்கிய தளகர்த்தர் களின் மறைவு அவர்களுக்கு மறுக்க முடியாத இழப்புதான். ஆனால், "விடுதலைப் புலிகளுக்கு இழப்புகள் புதிதல்ல. திலீபன் தொடங்கி தமிழ்ச்செல்வன் வரை அவர்கள் இழப்புகளில்தான் எழுந்து முளைத்திருக்கிறார்கள். 25 வருட போராட்டக் களத்தில் புலிகள் கண்ட இழப்புகள் நிகழ்காலச் சரித்திரத்தில் எந்த போராளிக் குழுக்களும் காணாதது. அவர்களை எதுவும் தடுக்க முடியாது" என்கிறார்கள் சர்வதேசப் பார்வையாளர்கள்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பகுதிகளில் சிங்கள ராணுவம் முன்னேறி வருகிறது என இலங்கை அமைச்சகம் வெளியிடும் செய்திகளில் எத்தனை உண்மை என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில் இலங்கையில் நடக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை அடுத்து தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவித்திருக்கிறார்கள் புலிகள். இந்த நேரத்தில் எல்லோருக்குள்ளும் எழுகிற கேள்விகள்... இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாடு சரிதானா? புலிகளின் போராட்டத்துக்குத் தமிழர்களிடையே ஆதரவு இருக்கிறதா..? தமிழ் ஈழம் அவசியமா? ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமா?

"ஒற்றைத் துப்பாக்கி, ஐந்து வீரர்களோடு பிரபாகரன் துவக்கிய அமைப்பு, இன்று 25 ஆயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் இயக்கம்! தரைப் புலிகள், கடற்புலிகள், வான் புலிகள் என சகல திசைகளிலும் கிளை பரப்பும் புலிகளின் ராணுவக் கட்டமைப்பு அசாத்தியக் கச்சிதமானது. இதுவரை புலிகள் தற்காப்பு நிலையில்தான் போரிட்டார்கள். அவர்கள் தாக்குதல் நிலையை எடுக்கும்போது சிங்கள ராணுவம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும். அந்தத் தருணத்துக்காகத்தான் புலிகள் காத்திருக்கிறார்கள்!" என்கிறார் ஈழத்துக் கவிஞர் காசிஆனந்தன் நம்பிக்கையாக!

இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக் கும்? எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் இயக்கத்தைக் கட்டுக்கோப்போடு முன்னெடுத் துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார் பிரபாகரன் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.

"பிரபாகரனின் சிந்தனைதான் விடுதலைப் புலிகளின் சிந்தனை. கட்டுக்கோப்புடனும் தலைமைக்கு விசுவாசமாகவும் இருக்கும் விடுதலை இயக்கத்துக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது புலிகள் அமைப்பு. பிரபாகரன், திறமையான ராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்திய நிலைமைகள் தெரிந்த பின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்" - சமீபத்தில் இலங்கை இணையதளப் பேட்டியில் இப்படிச் சொல்லியிருக்கிறார், இந்தியப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.

சரி... தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்..? தனி ஈழம், விடுதலைப் புலிகள் விஷயத்தில் அவர்கள் மனநிலை என்ன என அறிந்து கொள்ள தமிழகம் முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது விகடன்.

முடிவுகள், தமிழக மக்களின் மனசாட்சியை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஈழ மண்ணில் அமைதி மலர வேண்டும், விடுதலை வெளிச்சம் பரவ வேண்டும் என்பதே அது!"

- என்பது விகடன் சீனுவாச அய்யர் வெளியிட்ட கருத்துக்களும் - கருத்துக் கணிப்பும்.

விகடன் சர்வேயின் மிக முக்கியமான அம்சம் விடுதலைப் புலிகளை தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ஆதரிக்க வேண்டும் - என்று 47.48 சதவீத மக்கள் கருத்துக் கூறிய புள்ளி விவரமாகும்.

இப்படி வைத்தினாத அய்யர், சீனுவாச அய்யர் எல்லாம் - அமீர், சீமான் போல உணர்ச்சிவசப் பட்டுப் பேசாமல் - தங்களுக்கே உரிய சாமர்த்தியத்தோடு நாங்கள் சொல்லவில்லை தமிழக மக்கள் சொல்கிறார்கள்

- என்று தமிழக மக்களின் பேரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

விகடன் கருத்துக் கணிப்பில் இன்னும் ஒருபடி மேலே போய்

1. விடுதலைப் புலிகள் இயக்கத்தை எப்போதும் ஆதரிக்கிறேன் என்று 54.25 சதவீத மக்கள் கூறியதாகவும்,

2. இலங்கைத் தமிழர்களுக்காகத் தமிழீழம் அமைப்பது சரியான தீர்வு என்று 55.44 சதவீதத்தினர் கூறியதாகவும்,

3. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று 47.65 சதவீதத்தினர் கூறியதாகவும்,

4. விடுதலைப் புலிகள் இயக்கத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்றவர்கள் ஆதரிப்பது சரியான நிலைப்பாடுதான் என்று 49.36 சதவீத மக்கள் கூறியதாகவும்,

5. ராஜீவ் காந்தி படுகொலையில் பிரபாகரன் கைது செய்யப்பட வேண்டும் என்று 43.02 சதவீதத்தினரும் குற்ற மற்றவர், குற்றத்தை மன்னித்து விட்டுவிடலாம் என்று 56.97 சதவீத மக்கள் - அதாவது பெரும்பான்மையானவர்கள் கூறியதாகவும்,

6. இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று 62.59 சதவீதத்தினர் கூறியதாகவும்,

7. தரைப்படை, கடற்படை, வான்படை என்று விடுதலைப் புலிகள் வளர்ச்சி அடைவதாக 46.24 சதவீத மக்கள் கூறியதாகவும்,

8. கொள்கை மாறுபட்ட இலங்கைத் தமிழ்ப் பிரமுகர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்வது - 56.84 சதவீத மக்கள் தவிர்க்க முடியாத அணுகுமுறை, அங்குள்ள சூழ்நிலை புரியவில்லை என்று கூறியதாகவும்

- கருத்துக் கணிப்பு வெளியிட்டு - விடுதலைப் புலிகளை தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆதரிப்பதாக கணிப்பும் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறது!

இப்படி ஒருபுறம் கருத்துக் கணிப்பு என்ற பேரால் விடுதலைப் புலிகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு என்று தினமணி அய்யரும், விகடன் அய்யரும் சமத்தாக - கருத்து வெளியிடும் அதே நேரத்தில் -

பாப்பாத்தி அம்மாள் ஜெயலலிதாவோ - "விடுதலைப் புலிகளுக்கு தி.மு.க. ஆதரவு" என்றும் - "முதல்வர் திரட்டும் நிதி விடுதலைப் புலிகளையே சென்றடையும் என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பதாகவும்" அறிக்கை என்ற பெயரில் கயிறு திரித்திருக்கிறார்.

எது எப்படி இருப்பினும் -

அக்கிரகாரத்துப் பெரிய மனிதர்கள் எல்லோரது நோக்கமுமே - இலங்கைத் தமிழர்கள், விடுதலைப்புலிகள் பறறியதல்ல;

எதன் பேரிலாவது தி.மு.க.வுக்கு - தி.மு.கழக அரசுக்கு தொல்லை கொடுத்து - கெட்ட பெயர் உருவாக்கி - கழக அரசைக் கவிழ்த்து விட முடியுமா என்பதே அவர்களது உள்நோக்கம். அதை வேறு வேறு வடிவில் வெளியிடுகிறார்கள்; அவ்வளவுதான்!

( நன்றி: முரசொலி )
'தி.மு.க.வின் 10 மெகா தவறுகள்' என்று போன வாரம் விகடன் கவர் ஸ்டோரி வெளியிட்டது. நவம்பர் 2 முரசொலியில் 'துருப்பிடித்த ஜெயலலிதாவின் கட்சிக்கு தங்கமுலாம் பூசும் விகடனின் மெகா முயற்சி!' என்று விகடன் ஐயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. அது தொடர்கிறது.

0 comments:

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP