சொதப்பல் நாயகன் கருணாநிதி

>> Tuesday, February 24, 2009

""வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் ஒன்றுபடுவோம் என்று இணக்கம் தெரிவிக்கிற வரையில் மருத்துவமனையில் இருந்தே நான் உண்ணாவிரதம் மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறேன். உண்ணாவிரதத்துக்கான தேதியை விரைவில் அறிவிக்க இருக்கிறேன்'' என்று முதல்வர் கருணாநிதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ""இவ்வளவு பெரிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும், உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல்நிலையை மேலும் பாதிக்காதா? எதற்காக இப்படியொரு அறிவிப்பு? காக்கிச் சட்டைகளும், கறுப்புச் சட்டைகளும் விட்டுக்கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்கமாட்டார்களா?'' என்று தனக்குத் தானே கேள்விகளை எழுப்பி அதற்கு வழக்கம்போல பதிலும் எழுதியிருக்கிறார்.

அன்னிய ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டதன் நோக்கமும், அன்றைய சூழ்நிலையும் வேறு. பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர், நிலைமை கட்டுக்கடங்காமல் போகிறது என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக அறிவிப்பது என்பது தனது இயலாமையை வெளிப்படுத்தும் செயலாக அல்லவா கருதப்படும்; இது ஏன் முதல்வருக்குத் தெரியவில்லை?

மருத்துவமனையில் இருந்தபடி முதல்வர் கருணாநிதி "விடியோ கான்பரன்சிங்' மூலம் பேசுவதன் மூலம் தான் உடல்நிலை தேறிவருவதாக வெளிப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, தனது அரசியல் பலவீனங்களையும், தனது பயத்தையும் தேவையில்லாமல் வெளிப்படுத்தி வருகிறாரோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

""என்றைக்கும் நான் எளிய மக்களின் அங்கமாக, பாட்டாளி மக்களின் தோழனாக இருப்பேன். இந்த அரசை நீடிக்க விடுங்கள். மத்திய அரசை வாழ விடுங்கள். மத்திய, மாநில அரசுகளை ஒன்றுபடுத்தியிருக்கிற தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுங்கள்'' என்றெல்லாம் முதல்வர் கோரிக்கை விடுத்திருப்பது அவர் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், நிர்வாகத்தில் அவருக்கு இருக்கும் கட்டுப்பாட்டைக் கேள்விக்குறி ஆக்குகிறதே, அது ஏன் முதல்வர் கருணாநிதிக்குப் புரியவில்லை.

தமிழகத்தின் தலைசிறந்த நிர்வாகி, தேர்ந்த அரசியல் ராஜதந்திரி என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கும் முதல்வரது சமீபத்திய அறிக்கைகளும், செயல்பாடுகளும் அவர் தேவையில்லாமல் பாரங்களைத் தனது தோள்களில் சுமந்துகொண்டு வேதனைப்படுகிறாரோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்த வயதில், மருத்துவமனையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை நடந்து ஒய்வெடுக்கும் நேரத்திலும், அவர் இப்படி தன்னை வருத்திக் கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன?

உயர் நீதிமன்றப் பிரச்னை வந்தபோது, காவல்துறையினரால் உடனடியாக எந்தவித உத்தரவோ, ஆலோசனையோ பெற முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவரைத் தொந்தரவு செய்வதில் உயர் அதிகாரிகளுக்கும், சக அமைச்சர்களுக்கும் தயக்கம் இருப்பதில் என்ன தவறு? அமைச்சரவையிலுள்ள பல இளைய அமைச்சர்கள் முதல்வரிடம் பேசியே பல மாதங்களாகி விட்டதாகக் கூறுகிறார்கள்.

1984-ல் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் உடல்நலம் குன்றிய நிலையில் அப்போலோ மருத்துவமனையிலும், பிறகு அமெரிக்காவுக்கும் சிகிச்சைக்காகப் போனபோது, தனது இலாகாக்களை ஏனைய அமைச்சரவை சகாக்களிடம் பிரித்துத் தந்துவிட்டுத்தானே போனார்? இரண்டாம் இடத்தில் இருக்கும் நிதியமைச்சரும், கட்சியின் பொதுச் செயலாளருமான அன்பழகன், அரசியல் அனுபவம் இல்லாதவரா இல்லை நிர்வாகத் திறமையில்லாதவரா? அவரிடம் உள்துறையைத் தாற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு, தனது உடல்நிலையில் பூரண நலம் ஏற்படும்வரை முதல்வர் ஓய்வெடுக்கக் கூடாதா?

நிதியமைச்சர் அன்பழகனிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் தயக்கம் இருக்கலாம். ஆனால், அடுத்த வாரிசு என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறாரே, அவரிடமாவது தாற்காலிகப் பொறுப்பு அளிக்கப்படலாகாதா? உள்ளாட்சியில் நல்லாட்சி காண முடிந்த அவரால், உள்துறையை ஒருசில நாட்கள் பொறுப்பேற்று நடத்த முடியாதா?

""அரசியல் சட்ட விதிகளின்படி ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் செல்லக்கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை என்கிற ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது. இது தமிழக மக்கள் மீது நடத்தப்படுகின்ற மோசடியாகும்'' என்று நவம்பர் 15, 1984-ல் கூடிய திமுக செயற்குழுவின் தீர்மானம், இன்றைய திமுக அரசுக்கே கூடப் பொருத்தமாகிவிடும் சூழ்நிலை அல்லவா ஏற்பட்டு விட்டது. ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில், முதல்வர் தேவையில்லாமல் அத்தனை நிர்வாக பளுவையும் தொடர்ந்து சுமப்பதால், நிர்வாகம் ஸ்தம்பிக்கிறது என்பது மட்டுமல்ல, அவரது உடல்நிலையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழர்களைக் காப்பாற்ற வேண்டியபொறுப்பு இருப்பதால் பதவியைத் துறக்க விருப்பமில்லை என்கிறார் முதல்வர் கருணாநிதி. பதவியைத் துறக்கும்படி யாரும் சொல்லவில்லை. தாற்காலிகமாகப் பொறுப்புகளை யாரிடமாவது கொடுத்துவிட்டு, தயவுசெய்து ஓய்வெடுங்கள். பூரண குணமடைந்து, புதுத்தெம்புடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள். வேண்டாம் இந்த உண்ணாவிரத விஷப் பரீட்சை.

உலக இசையின் நாயகன் "அல்லா ரக்கா ரஹ்மான்"


சிறந்த பின்னணி இசை, சிறந்த பாடல் என்ற இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொண்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் பேசியபடி அனைவரது புருவத்தையும் உயரச் செய்தார் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

நாட்டு மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த பாராட்டுக்கும் சொந்தக்காரராகியுள்ள ரஹ்மான், சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவரானாலும், இன்று சாதனையாளராக மலர்ந்து, இளம் தலைமுறையினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

சென்னையில் 1966-ம் ஆண்டு, ஜனவரி 6-ம் தேதி பிறந்த இவருக்கு, தந்தை ஆர்.கே. சேகர் சூட்டிய பெயர் திலீப்குமார்.

சேகர் மலையாளப் பட இசை அமைப்பாளர். 22 படங்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களுக்கும் இசை அமைத்தவர்.

9- வது வயதில் தனது தந்தையைப் பறிகொடுத்தார் திலீப்குமார். அன்று முதல் திரைப்படத் துறையில் இருந்து சற்று விலகியே இருந்தது அவரது குடும்பம்.

10-ம் வகுப்பை பாதியில் நிறுத்திய திலீப்குமார், சிலரது வழிகாட்டுதலின்பேரில் லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் சில ஆண்டுகள் படித்தார்.

தொடக்கத்தில் "கீ போர்டு' வாசிப்பாளராக இசை உலகுக்குத் தெரிந்த அவர், படிப்படியாக தன்னை பட்டைதீட்டிக் கொண்டார்.

அயராத உழைப்பாலும், இசை ஆர்வத்தாலும் பிரபல இசையமைப்பாளர்களிடம் நற்பெயரைப் பெற்ற திலீப்குமார், 1989-ம் ஆண்டு அல்லா ரக்கா ரஹ்மான் என்கிற ஏ.ஆர். ரஹ்மானாக மாறினார்.

சில விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தவர் என்ற தகுதியோடு, இயக்குநர் மணிரத்னம் கண்ணில் பட்ட ரஹ்மான், 1992-ம் ஆண்டு "ரோஜா' படம் மூலம் இசை அமைப்பாளராக தமிழ் திரைப்படத் துறைக்கு தனது 26- வது வயதில் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர் "சின்ன சின்ன ஆசை' பாடல் மூலம் 1993-ம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்று இந்திய அளவில் பிரபலமடைந்தார். இந்தப் படத்துக்காக அவருக்கு குவிந்த விருதுகள் கணக்கிலடங்காதவை.

தொடர்ந்து அவர் இசையமைத்த அனைத்துப் படங்களும் வெற்றி பெறத் தொடங்கின. 1995-ல் "ரங்கீலா' படம் மூலம் "பாலிவுட்' என அழைக்கப்படும் ஹிந்தி திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். முன்னேற்றப்பாதையில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் அவர், இதுவரை நான்கு முறை தேசிய விருதுகள், 11 முறை பிலிம்பேர் விருதுகள், 6 முறை மாநில விருதுகள், 2000-ம் ஆண்டு பத்மசிறீ விருது பெற்று தன்னை அடையாளம் காட்டியுள்ளார்.

"பாம்பே ட்ரீம்ஸ்' மூலம் சர்வதேச இசை அரங்குக்கு அறிமுகமாகியிருந்த ரஹ்மானுக்கு 2009-ம் ஆண்டு வாழ்வில் மறக்கமுடியாத ஆண்டு என்றே கூறலாம்.

இந்தியப் பின்னணியில் அமைந்த "ஸ்லம்டாக் மில்லினர்' படத்தில் இவரது இசையைக் கேட்டு பாராட்டாதவர்களே கிடையாது.

இந்தப் படத்துக்காக கடந்த ஜனவரி 11-ம் தேதி அமெரிக்காவில் "கோல்டன் குளோப்' விருதை பெற்றதன் மூலமும், பிப்ரவரி 8-ம் தேதி இங்கிலாந்தில் பாஃப்டா விருது பெற்றதன் மூலமும் சர்வதேசப் பார்வையை தன்பக்கமும், இந்தியாவை நோக்கியும் திரும்பச் செய்தார்.

வசீகர இசையினால் கோடிக்கணக்கான ரசிகர்களை வருடிவிட்ட நவீன இசைக்குச் சொந்தக்காரர் இவர். இசை வெளியீட்டு நிறுவனங்களால் எப்போதும் "வெற்றியின் தொழிற்சாலை' என்றே வர்ணிக்கப்படுகிறார்.

தேர்ந்த உலகத் திரைப்பட அறிவு, இசைக் கருவிகளையும், இசை வல்லுநர்களையும் நன்கு கையாளத் தெரிந்த ஆளுமை இவையே இந்த சர்வதேச இசை நாயகனின் வெற்றியின் ரகசியம்.

தமிழ் இசை, இந்திய இசை என்ற எல்லைக்குள் தன்னை அடக்கிக்கொள்ளாமல், உலக அரங்கில் தனக்கென ஒரு கொடியை பறக்கவிட்டுள்ள ரஹ்மானின் வெற்றி ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான விஷயமே!.

பல்வேறு இசைப் பாணிகளைக் கலந்து சோதனை செய்வது, எளிமையான மற்றும் இனிமையான மெட்டுகள், கச்சிதமான ஒலி நேர்த்திக்கான தேடல், புதிய இசையொலிக்கான ஆர்வம், புதிதுபுதிதாக குரல்களை அறிமுகம் செய்தல் என்பதில் எப்போதுமே தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் கவனமாக இருந்து வருகிறார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய சாஸ்திரிய இசை, ஹிந்துஸ்தானி, சூஃபி, ஜாஸ், இந்திய பாப் இசை என எதையுமே விட்டுவைக்காமல் தேவைக்கேற்ப தனது பாடல்களில் பயன்படுத்துவதில் இவருக்கு நிகர் இவரே!.

மேலும், பாரம்பரிய இசைக் கருவிகளில் இருந்து உருவாகும் இசையை புதிய மின்னணுக் கருவியின் இசையோடு சேர்ப்பதில் இவரிடம் எப்போதுமே முக்கியத்துவம் உண்டு.

43 வயதாகும் ரஹ்மானுக்கு ஷாயிரா பானு என்ற மனைவியும், கதிஜா, ரஹிமா என்ற மகள்களும், அமன் என்ற மகனும் உள்ளனர்.

இந்திய இசைக் கலைஞர்கள் யாருமே இதுவரை தொட்டுப் பார்க்காத "ஆஸ்கர்' விருதை இரண்டு பிரிவுகளில் பெற்றதன் மூலம் தன்னை "முதல்வனாக' நிரூபித்துள்ள ரஹ்மானுக்கு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் வெற்றி.

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP