Showing posts with label திண்ணை. Show all posts
Showing posts with label திண்ணை. Show all posts

இது பகடி செய்யும் காலம்

>> Tuesday, October 21, 2008

ஜெயமோகன் தன்னுடைய வலைப்பதிவில் எழுதிக் கொண்டிருந்த கட்டுரைகள் ஆனந்த விகடன் புண்ணியத்தில் ஊரெங்கும் விளம்பரமாயிருக்கின்றன. யாரோ சும்பன், குசும்பனெல்லாம் இக்கட்டுரைகளைப் பற்றிய ஆனந்த விகடனின் விமர்சனத்தின் பின்னணியில் இருப்பதாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் எரிந்ததென்னவோ ஆனந்த விகடன் பிரதிகள்தான். 'கொஞ்சம் பேர் மட்டும் படித்துக் கொண்டிருந்த கட்டுரைகளை இப்படி ஊருக்கெல்லாம் சொன்னது விகடன்தான்' என்று எரித்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைத்தாண்டி வன்முறையாய் எதுவும் நடக்கவில்லை என்பது மிக ஆறுதலான விஷயம்.



தமிழர்களின் நடிகர்கள், தலைவர்கள் மீதான 'கடவுள்' வழிபாடு தமிழர்கள் அல்லாத எல்லோராலும் கேலி செய்யப்படும் ஒன்று. சென்னை வடபழனியில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்த ஒரு நடிகருக்கு கட்-அவுட் வைத்து, மாலை போட்டு, பாலபிஷேகம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் அந்த இரண்டு திரைப்படங்களில் ஒன்று மட்டுமே ஹிட், இன்னொன்று மகா ஃப்ளாப். மூன்றாவது படமும் விழுந்தால் அதற்கப்புறம் நடிப்பாரா என்பதே சந்தேகம். அதற்குள்ளாகவே, குமரன் நகர், மூன்றாவது தெருவைக் கிளையாகக் கொண்டு ஒரு ரசிகர் மன்றம்; பாலபிஷேகம்.



சென்ற வருடம் இரண்டு புரட்சி நடிகர்களின் ரசிகர்களுக்கிடையே மோதல் வந்து கத்திக்குத்து வாங்கி ஒரு புரட்சி நடிகரின் ரசிகர் செத்துப் போனார். பொதுவாக என் தமிழரல்லாத நண்பர்கள் 'உங்க ஆளுங்களைக் கொல்லனும்னா, உங்க தலைவனைப் பற்றித் தப்பாப் பேசினா போதும்... உடனே தீக்குளிச்சிடுவீங்க, இல்லை?' என்று கேட்கும்போது புன்னகைப்பதைத் தவிர வேறு வழி இருப்பதில்லை எனக்கு. சிலை வழிபாட்டைக் கேலி செய்யும், ‘சிலை உடைப்புகளில்’ நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு ‘நம்பிக்கை’யாளர்கள் சிலைகளை உடைத்துப் பழகியபின் தங்களுக்கென்று சிலைகளைவிடக் கடினமான உடைக்க முடியாததொரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். விரலைச் சுற்றி கண்ணைக் குத்துவது, கண்ணைச் சின்னதாக்கி புருவத்தை உயர்த்தி முறைத்துப் பார்ப்பது, பளாரென்று அறைவது போல் (பார்ப்பவர்களைத்தான்) பஞ்ச் டயலாக் பேசுவது என்று முந்தாநேற்று நடிப்பதற்கு அட்வான்ஸ் வாங்கிய நடிகர்கள் கூட இந்த ‘பிம்ப’ கட்டமைப்பில் டிப்ளொமா வாங்கியிருக்கிறார்கள். நடிகர்கள், தலைவர்களை மனிதர்களாக இல்லாமல் கடவுள்களாகப் பார்க்கும் போக்கு, பாசாங்கு இது போன்ற பகடிச் சித்திரங்களிலாவது அழிந்து போகாதா என்று ஒரு நப்பாசை இருக்கிறது எனக்கு.



***


அபத்தங்களை எதிர்கொள்ள நகைச்சுவையை விட வேறு சிறந்த ஆயுதம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட ஆனந்த விகடன் செய்ய நினைத்த வேலையை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள். (ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு அத்தனை அதிகாரம் இல்லை, அவ்வளவே!) கொள்கைச் சாயம் வெளுக்காமலிருக்க ரேடியோ, திரைப்படம், பத்திரிகை இப்படி அத்தனை வாசல்களையும் மூடி எங்கெங்கும் கம்யூனிஸப் புகழ் மட்டுமே பரவி வந்தது. யதார்த்தத்துக்கும், வாழ்பனுபவத்துக்கும் சற்றும் ஒத்து வராத விஷயங்கள் மேல் ஏளனம் ஏற்படும். ஆனால் யதார்த்தமே தங்கள் கொள்கைகளின் அடிப்படை என்று கூறிக்கொண்ட கம்யூனிஸ்டுகளுக்கு இந்த விஷயம் புரியாமல் போனது ஆச்சரியமான விஷயம். ஏளனத்தையும், நையாண்டியையும் புரிந்து கொள்ளவும் கொஞ்சம் கற்பனா சக்தி வேண்டும். மக்களின் கற்பனா சக்திதான் தங்கள் அதிகாரத்துக்கு முதல் எதிரி என்று கம்யூனிஸ்டுகளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அந்த கற்பனா சக்திக்கான வாசல்களைத்தான் அவர்கள் அடைத்து வைத்திருந்தார்கள்.


மக்கள் தங்களுக்கிடையே கூட கிண்டலாகக் கம்யூனிஸ்டுகளைப் பற்றி எதுவும் சொல்லிவிட முடியாது. ('1984' என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஆர்வெல் இந்த விஷயத்தை மிகச்சிறப்பாக எழுதியிருப்பார்). நோபல் பரிசு பெற்ற அலெக்ஸாண்டர் சோல்ஸெனிட்ஸின் (Alexander Solzhenitsyn) தன் நண்பர்களிடம் சோவியத் அரசாங்கம் பற்றிப் பேசியதையும், அவரெழுதியக் கட்டுரையையும் காரணமாகக் காட்டி எட்டு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. ஆனால் அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களை “இவான் டெனிஸவிச்சின் வாழ்வில் ஒரு நாள்” (One day in the life of Ivan Denisovich) என்ற புத்தகமாக எழுதியதுதான் அவருக்கு உலகப்புகழையும், நோபல் பரிசையும் வாங்கித்தந்தது.



கம்யூனிஸக் கொடுமைகள் கண்ணில் பட்டாலும் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பொய் சொல்ல வேண்டும் என்றுதான் அன்றைய ரஷ்ய மக்களின் நிலை இருந்திருக்கிறது. அதைப் பற்றி கூட ஒரு ஜோக் இருக்கிறது.



இரண்டு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு இலவசமாக ரஷ்யாவைச் சுற்றிப் பார்த்து வர வாய்ப்புக் கிடைத்ததாம். ஆனால் ரஷ்யாவுக்குப் போன இருவரில் ஒருவன் தான் திரும்பி வந்தான். திரும்பிவந்த அவனிடம் அவன் நண்பன் கேட்கிறான்.


“சோவியத் யூனியனில் வாழும் சூழ்நிலை எப்படி இருக்கிறது?”

“பிரமாதம். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”

“வீடுகள் எப்படி இருக்கின்றன? சாப்பாட்டு விஷயம் எப்படி?”

“மிக அருமை. என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.”

“ஆனால் உன்னுடன் சென்ற உன் நண்பனுக்கு என்ன ஆயிற்று?”

“அவன் இப்போது சைபீரியச் சிறையில் இருக்கிறான் - அவன் கண்களை அவன் நம்பியதால் வந்த வினை!”



ராய் மெத்வதேவ் (Roy Medvedev) என்ற வரலாற்று ஆய்வாளர் கே.ஜி.பி(K.G.B)-யின் ஆவணங்களை ஆராய்ந்ததில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேர் ஸ்டாலின் காலத்தில் ஜோக்கடித்தற்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. அப்போதும் மக்களுக்கிடையே ரகசியமாகப் பல்வேறு ஜோக்குகள் சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஜோக்குகளால் கம்யூனிஸம் சரிந்து விடவில்லை. ஆனால் அடக்குமுறையில் அமிழ்ந்து கிடந்த மக்களுக்கு இப்படி தங்களுக்கிடையே நகைச்சுவையாகப் பேசிக்கொள்வது, ஒரு மிகப்பெரிய சுதந்திர உணர்வைத் தந்திருக்கிறது.



ஆனால் இந்த அடக்குமுறை நிலை ஸ்டாலினின் மறைவுக்குப் பிறகிலிருந்தே கொஞ்ச கொஞ்சமாக மாறத்தொடங்கியது. அதிலும் கடைசிக்கால கட்டங்களில் வந்த கம்யூனிஸ அதிபர்கள் பத்திரிகைகளில் வெகுவாக விமர்சிக்கப்பட்டார்கள். கம்யூனிஸ அரசாங்கத்தோடு அதன் தலைவர்கள் அத்தனை பேரும் மலையேறி விட்டபடியால் சமீப காலங்களில் நிறைய விமர்சனங்களும், புத்தகங்களும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளைப் பற்றி எழுதப்பட்டு வருகிறது. (நான் இங்கே குறிப்பிடுவது உண்மையான நடுநிலை விமர்சனங்கள் மட்டுமே.) அந்த வரிசையில், “சிறு புரட்சிகள்” (Tiny Revolutions) என்ற பெயரில் ரஷ்ய அரசியல் நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக ப்ரூஸ் ஆடம்ஸ் (Bruce Adams) என்பவர் வெளியிட்டிருக்கிறார்.[சுட்டி1] (நகைச்சுவைத் துணுக்கை சிறு புரட்சி என்று முதன் முதலில் அழைத்தவர் ஜார்ஜ் ஆர்வெல்).


ரஷ்யத் தலைவர்களைப் பற்றி பெரும்பாலும் ரஷ்ய மக்களே பேசி வந்த நகைச்சுவைத் துணுக்குகளும், சம்பவங்களும் “சிறு புரட்சிகள்” புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. புத்தகம் அரசியல் காலக்கிரமப்படி தொகுக்கப்பட்டிருக்கிறது. புத்தகத்தில் மொத்தம் ஆறு பகுதிகள். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தலைவரைப் பற்றிய ஜோக்குகள் அடங்கியிருக்கின்றன. லெனின், ஸ்டாலின், க்ருஷ்சாவ் (Khrushchev), ப்ரெஷ்னெவ் ஆகியோருக்குத் தனித்தனிப் பகுதிகளும் - ஆந்த்ரபோவ், செர்ன்யென்கோ ஆகியோர் ஒரு பகுதியிலும் இதர பிற்கால சோவியத் தலைவர்கள் கடைசிப் பகுதியிலும் வருமாறு புத்தகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் பற்றிய ஜோக்குகளும் பிற்காலத் தலைவர்கள் பற்றிய ஜோக்குகளும் மிகவும் சிறப்பாக வந்திருக்கின்றன.


“ரஷ்ய அதிபர் ப்ரெஷ்னெவ் 1980 ஒலிம்பிக் பந்தயத்தைத் தொடங்கி வைத்துத் தன்னுடைய உரையைப் படிக்கத் தொடங்குகிறார்.

‘ஓ... !ஓ... !ஓ... !’

உடனே அவருடைய உதவியாளர் அவர் காதுகளில் கிசுகிசுக்கிறார்.

‘அது ஒலிம்பிக் சின்னம். உரை அதற்குக் கீழே தொடங்குகிறது!”


மேலும் ஒவ்வொரு பகுதிக்கு முன்னரும் தேவைப்பட்ட முன்னுரையும், விளக்கமும் அளிக்கப்பட்டிருக்கிறது. ‘கம்யூனிஸத்தின் கீழ் பொதுமக்கள் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இப்புத்தகம் பேருதவியாக இருக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறது “காண்டெம்பரரி ரீவ்யூ” (Contemporary Review) என்னும் பிரிட்டிஷ் பத்திரிக்கை. மேலும் பிற நாடுகள் அதிலும் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, சோவியத் அரசாங்கத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள், சோவியத் அரசாங்கம் மற்றும் அமைச்சரவை செயல்பட்டவிதம் ஆகியவற்றைப் பற்றி புரிந்துகொள்ளவும் இத்துணுக்குகள் உதவியாக இருக்கின்றன.


புத்தகத்திலிருந்து ஒரு ஜோக்:

“பி.பி.சி (BBC) செய்தி நிறுவனம் ரஷ்ய அரசியல் ரகசியங்களை எப்படியோ உடனுக்குடன் தெரிந்துகொண்டு வந்தது ரஷ்ய அரசாங்கத்தை மிகவும் எரிச்சலூட்டியது. அதனால் அடுத்த அமைச்சரவை சந்திப்பை யாருக்கும் சொல்லாமல் மூடப்பட்ட அறையில் நடத்தினார் ப்ரஷ்னெவ். கூட்டம் முடியும் வரை யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று உத்தரவும் போடப்பட்டிருந்தது.


கூட்டத்தின் நடுவில் பிரதமர் கஸீகினுக்கு (Kosygin) வயிற்றைக் கலக்க ஆரம்பித்து விட்டது. நெளிந்துகொண்டே வெளியில் செல்ல அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கப்பட்டு விட்டது.


சில நிமிடங்களில் கதவை யாரோ தட்டினார்கள். திறந்து பார்த்தால் துப்புரவுப்பணி செய்யும் வேலைக்காரி கையில் ஒரு பெரிய வாளியுடன் நின்று கொண்டிருந்தாள்.


‘கஸீகின் ‘டூ பாத்ரூம்’ போய்விட்டார் என்று பி.பி.சி-யில் சொன்னார்கள் அதுதான் சுத்தம் செய்வதற்காக வந்தேன்!’



***


பென் லூயி(Ben Lewis) இயக்கிய ஆவணப் படமான "சுத்தியலும், நகைச்சுவையும்" ('Hammer and Sickle' - ஐ நக்கலடித்து தலைப்பிடப்பட்ட Hammer and Tickle) சோவியத் ரஷ்யா மட்டுமில்லாமல் பல்வேறு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளின் ஜோக்குகளையும், நகைச்சுவைத் துணுக்குகள் சமூக, அரசியல் ரீதியாக எவ்விதமான தாக்கங்களை ஏற்படுத்தின என்பதைக் கூறுகிறது.



இத்திரைப்படத்தைக் குறித்து 'ப்ராஸ்பெக்ட்' (Prospect) என்ற இதழில் இவரெழுதிய கட்டுரை[சுட்டி2] மிகச்சுவையான ஒன்று.



அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:



"ரொமேனியாவில் கொஸாக்கோவைப் (Ceausescu) பற்றித் திரைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது முதன்முறையாக கம்யூனிஸ்டு ஜோக்குகளைப் பற்றிய வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தெரிந்து கொண்டேன். என்ற புகாரஸ்ட் போக்குவரத்துத் துறையில் எழுத்தராக வேலை செய்த கேலின் பாக்தன் ஸ்டெஃபானெஸ்கோ (Calin Bogdan Stefanescu), கொஸாக்கோவின் ஆட்சியின் கடைசி பத்து வருடங்கள் அரசியல் ஜோக்குகளை சேகரித்து வந்திருக்கிறார். தான் எந்த ஜோக்கை, எப்போது கேட்டோம், என்று குறிப்பெடுத்து கிட்டத்தட்ட 900 ஜோக்குகளை புள்ளியியல் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார். ஒரு அரசியல் நிகழ்வுக்கும், அந்த நிகழ்வு மீதான ஜோக்குக்கும் இடைப்பட்ட கால இடைவெளியை வரைபடமாக்கி (graph) ரொமேனிய கம்யூனிஸ ஜோக்குகளின் வேகத்தை ஆய்வு செய்திருக்கிறார். கொஸாக்கோவின் கடைசி மூன்று வருட ஆட்சிக்காலத்தில் ஜோக்குகளின் எண்ணிக்கை இரண்டு மடங்கானதால் இந்த ஜோக்குகளுக்கும் கொஸாக்கோவின் வீழ்ச்சிக்கும் தொடர்பு இருந்ததாகக் கூட அவர் முடிவு செய்திருக்கிறார். ஜோக்குகளின் புள்ளியிலாளரான ஸ்டெஃபானெஸ்கோவின் கதை, அவர் ஆய்வு செய்த ஜோக்குகளை விட நகைச்சுவையாக இருந்தது ஒரு நரண்முகை. அது ஒரு கம்யூனிஸ்ட் உலகை எதிர்த்துப் போராடிய ஒரு சாதாரண மனிதரின் உண்மைநிலையைக் காட்டியது போலிருந்தது.”


“... எனக்குத் தெரிந்தவரை ஜோக் சொல்வதில் யாரும் சலிப்படையவே இல்லை. ஆனால் ஜோக் சொன்னதற்காக அவர்கள் ஜெயிலுக்குப் போவது வழக்கமாக இருந்தது. ஹங்கேரியின் ரகசிய போலிஸின் ஆவணக் கோப்புகள் சேகரிப்பில் ஏராளமான ஆவணங்கள் ஜோக்குகள் சொன்னதற்காகக் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றியே இருந்தது. அரசு அலுவலர்கள் நாள் தோறும் இது போன்று ஜோக் சொன்னவர்களைத் தேடிக் கண்டுபிடித்து, சில வழக்குகளில் ஜோக் சொன்னதற்கான ஆதாரங்களைக் காட்டி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்”.


“கம்யூனிஸம் ஒரு நகைச்சுவை உற்பத்தி செய்யும் இயந்திரமாக இருந்தது. அதன் பொருளாதாரக் கோட்பாடுகளும், அடக்குமுறை இயக்கமும் நகைச்சுவைக்கான சூழ்நிலைகளை இயல்பாகவே உருவாக்கின. ஃபாஸிஸ ஆட்சி, நாஜி ஆட்சி இதிலெல்லாமும் நகைச்சுவைத் துணுக்குகள் இருந்தன. ஆனால் கம்யூனிஸம் போல ஒவ்வொரு நிமிடமும் ஜோக் சொல்வதற்கான அபத்தத்தை அவை கொண்டிருக்கவில்லை.


கம்யூனிஸ ஜோக்குகள், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான ஒரு விஷயமாக மட்டுமில்லாமல், மக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றம் நடக்க உதவும் ஒரு ரகசிய மொழியைப் போலவும் இருந்தது.”


ரஷ்யப் புரட்சியைப் பற்றிய ஜோக்குகள் அக்டோபர் 1917-இலேயே ஆரம்பித்துவிட்டன.

ஆரம்பகால ஜோக் ஒன்று:

ஒரு மூதாட்டி மாஸ்கோ மிருகக்காட்சி சாலைக்கு சென்று முதல் முறையாக ஒரு ஒட்டகத்தைப் பார்த்துவிட்டு வியந்துபோய் சொன்னாள். “போல்ஷெவிக்குகள் ஒரு குதிரையை எப்படி மாற்றி விட்டார்கள்!”


கார்பசேவும் நிறைய அரசியல் ஜோக்குகளைத் தெரிந்து வைத்திருந்தார். தனக்கு முன்பு அதிகாரத்திலிருந்தவர்கள் போலவே அவற்றைப் பிறரிடம் பகிர்ந்தும் கொண்டார். ஸ்டாலினோ, க்ருஷ்சாவோ தங்களுடைய செல்வாக்கின் வீழ்ச்சியைப் பற்றி ஜோக்கடித்துக் கொள்வது உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத காரியம். ஆனால் கார்பசேவ் அதைச் செய்தார். 1996-இல் கிளைவ் ஆண்டர்சன் வழங்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கார்பசேவ் கலந்து கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு ஜோக்.


மாஸ்கோவில் ஒருவர் உணவுப்பொருட்களுக்கான க்யூவில் நின்று கொண்டிருந்தார். க்யூ மிக நீண்டதாக இருந்ததால் பொறுமையிழந்த அவர், “இவ்வளவுதான்.. இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. இப்போதே போய் கார்பசேவைக் கொல்லப் போகிறேன்” என்று அருகிலிருந்த மனிதரிடம் சொல்லிவிட்டுச் சென்றார். சற்று நேரம் கழித்து கொலை செய்யப் போனவர் திரும்பி வந்து விட்டார். அருகிலிருந்த மனிதர் “என்ன கொலை செய்யவில்லையா?” என்று கேட்க, “அங்கே இதை விட நீளமான க்யூ இருந்தது. அதற்கு இதுவே பரவாயில்லை என்று திரும்பிவந்துவிட்டேன்” என்றார்.


‘அரசியல் ஜோக்குகள் நம்மைக் காப்பாற்றுபவையாக இருந்தன’ என்று ஏமாற்றத்திலிருந்தும், மன உளைச்சலிலிருந்தும் விடுபட ஜோக்குகள் காரணமாக இருந்ததைக் காட்டி 1989 - இல் கார்பவேவ் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.


கவனித்தால் ஒன்று புரியும் - மொத்த கம்யூனிஸ்ட் புள்ளிகளிலேயே கார்பசேவ் ஓரளவு சுதந்திர சமுதாயத்தை ஆதரித்தவர். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதை வெளிப்படுத்துவதில் தைரியமும் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. நகைச்சுவை உணர்வில்லாதவர்களுக்கு அரசியல் அதிகாரம் தரக்கூடாது என்று கூட ஒரு சட்டத்தைக் கொண்டு வரலாம் போலிருக்கிறது.


***

“ஒருவேளை கம்யூனிஸம் ஒழிந்துவிட்டால் நாங்கள் பேசிக்கொள்வதற்கு நகைச்சுவையான விஷயமே இருக்காதோ என்றெல்லாம் நாங்கள் வேடிக்கையாகக் கவலைப்பட்டிருக்கிறோம்” என்று பென் லூயியிடம் சொல்லி இருக்கிறார் ஒரு ஹங்கேரியர்.


ஆனால் ரஷ்யர்கள் அப்படியில்லை. விளாதிமிர் புதின் தாண்டி இப்போது வந்திருக்கும் திமித்ரி மெத்வதேவையும் விட்டு வவக்காமல் வாரு, வாரென்று வாருகிறார்கள் [சுட்டி3].


திமித்ரி மெத்வதேவ், விளாதிமிர் புதினால் ஆட்டி வைக்கப்படும் ஒரு பொம்மை என்பது ஊரெங்கும் தெரிந்த ரகசியம். அதை வைத்துதான் இப்போது அங்கே காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள்.


உதாரணத்துக்கு ஒன்று:

மெத்வதேவ் பதவியேற்பு உரை நிகழ்த்தவிருக்கிறார். அப்போது அவருடைய உதவியாளர் ஒருவர் மெத்வதேவின் கோட்டிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நூல்களைப் பார்த்துவிட்டு அகற்றப்போகிறார்.


அவரிடம் புதின் சொல்கிறார். “அவற்றை நீக்காதே. அவை என்னுடையவை!”


பாவம் மெத்வதேவ். “ஆரம்பத்துலயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா!” என்று கவலைப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.


****


இரண்டு வருடங்களுக்கு முன்னால் தமிழ் நாட்டில் ஒரு மிகப்பெரிய நகைச்சுவை அலை கிளம்பியது. ஒரு டிவி சேனலில் வந்த ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய எந்த சேனலைத் திருப்பினாலும் ஒரே நகைச்சுவை மழை! இந்த நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்பவர்களிடம் நிச்சயமாக ஒரு எம்.ஜி.ஆர், ஒரு சிவாஜி மீதான ‘ஐட்டம்’ கண்டிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர் என்றால் அவர் குரலையோ, சிவாஜி என்றால் அவர் மிகை நடிப்பையோ கிண்டல் செய்யாமல் நகைச்சுவையே இருக்காது! இங்கே உடைபட்ட பிம்பங்கள் எழுத்தானபோதுதான் ஆனந்த விகடனுக்குக் கோவம் வந்துவிட்டது.


ஆரம்பத்தில் நன்றாக இருந்த இந்நிகழ்ச்சிகள் போகப்போக சலிப்பூட்ட ஆரம்பித்துவிட்டன. புளித்துப்போன மிமிக்ரி, சலித்துப் போன ஜோக்குகள், அபத்தமான கிண்டல்கள். இப்போதெல்லாம் ஏதாவது மிரட்டுவதற்காக நாக்கை மடித்தால் கூட, ஆறே வயதான என் அக்கா மகன் “விஜய்காந்த் மாதிரி பண்ணாதீங்க மாமா..” என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறான். இத்தனைக்கும் அவன் வாழ்நாளில் பார்த்தது இரண்டே தமிழ்த் திரைப்படங்கள்தான் (ஒன்று சண்ட்ரமுகி, இன்னொன்று சிவாஜி). மற்றதெல்லாம் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளின் உபயம்தான்.


இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரும் விருந்தினர்கள் எப்படிப்பட்ட மட்டமான ஜோக்குக்கும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். (இந்தக் கலையில் விற்பன்னர், ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடிய நவ்ஜோத்சிங் சித்து. இவர் சிரிக்கும்போது தட்டித் தட்டியே நிறைய மேஜைகளை உடைத்திருக்கிறார் என்று ஒரு வதந்தி நிலவுகிறது).


ஒரு மாதம் முன்பு நான் பார்க்க நேர்ந்த மகா அபத்தமான காமெடி நிகழ்ச்சியில் ஒரு ‘வளர்ந்துவரும்’ நடிகர் நடுவராக வந்திருந்தார். எந்த ஜோக்குக்கும் சிரிக்காமல் ‘உர்ர்ரென்றே’ இருந்தார். பரவாயில்லையே.. திராபை ஜோக்குக்கெல்லாம் சிரிக்காமல் இயல்பானவராக இருக்கிறாரே என்று நினைத்தேன். நினைப்பில் விழுந்தது ஆற்றில் திருடிய ஒரு லாரி மணல்.


நிகழ்ச்சியில் கமலஹாசனைப் பற்றி ஏதோ கிண்டலாகச் சொல்லப்போக கோவம் வந்ததே பார்க்கவேண்டும் நம் விருந்தினருக்கு. “ஒரு உலக மகா கலைஞனை இப்படியெல்லாம் பேசலாமா? அதிலும் சினிமாவிலேயே இருக்கும் நாமே அதைக் கேட்டுக்கொண்டும் இருக்கலாமா? அவர் நம்முடன் இருப்பதே நமக்குப் பெருமை இல்லையா?” என்றெல்லாம் எகிற ஆரம்பித்து விட்டார். ‘கமலஹாச அஷ்டோத்ர நாமாவளி’ ஏதாவது எடுத்து வந்திருக்கிறாரா என்று பார்த்தேன். நல்லவேளையாக அப்படி எதுவும் இல்லை.


நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த சினிமா நடிகருக்கோ ஒரே தர்மசங்கடம். “ஹி... ஹி... இதெல்லாம் சும்மா காமெடிக்குதானே... ஹி... ஹி... கமல்ஹாசன் மிகச்சிறந்த நடிகர்தான்.. ஹி.. ஹி.. இருந்தாலும் இந்த நிகழ்ச்சியே ஒரு காமெடி நிகழ்ச்சிதானே...” என்றெல்லாம் வழிந்த அந்த நடிகர்... அட.. ஜெயமோகனை தொலைபேசியில் கூப்பிட்டு “செந்தமிழில்” திட்டிய அதே நடிகர்! கம்யூனிஸ நாட்டில் மட்டுமில்லை நம் நாட்டிலும் நகைச்சுவைக்குப் பஞ்சமே இல்லை போங்கள்!



***

ஒரு பின்குறிப்பு:


கம்யூனிஸ ஜோக்குகளைப் பற்றிய புத்தக, திரைப்பட மேற்கோள்கள் தற்செயல் நிகழ்வுகள் மட்டுமே. இதை வைத்து நான் கம்யூனிஸ அரசியலையும், தமிழ்நாட்டின் திராவிட அரசியலையும் ஒப்பிடுவதாக வீணாக முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டாம். சும்ப, நிசும்பர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி எனக்கு விளம்பரமெல்லாம் தர மாட்டார்கள். என்னையே அடித்து ஒட்டுவார்கள். அதனால் இந்த desclaimer மிக முக்கியமான ஒன்று.


****

Read more...

உடம்பு இளைப்பது எப்படி?

முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தவிர்ப்பதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது.


மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ்ப்பண்ணை’ நிகழ்ச்சியில் எங்கே பேராசிரியர் நன்னன் அவர்கள் என்னுடைய வாக்கியத்தை எடுத்து வைத்துக் கொண்டு அக்கு வேறு ஆணிவேறாகப் பிரித்து நம்மை நாற அடித்து விடுவாரோ என்ற ‘கிலி’ ஆட்கொண்டு ஆட்டிப் படைக்கிறது.


உயர்திணைக்கும், அஃறினைக்கும் வேறுபாடு தெரியாத இவர்களெல்லாம் ஏன் எழுத வருகிறார்கள் என்று கேட்டு நம் மானத்தை வாங்கி விடுவார்.


அவர் நம்மை “பண்ணையாளர்களே!” என்று அழைப்பது கேட்க காதுக்கு குளுமையாக இருக்கும். விவசாயத்திற்கு ஒரு ‘குழி’ நிலம் இல்லாத போதிலும் நம்மைப் பார்த்து ‘பண்ணையாளர்களாகிய நீங்கள்தான் யோசித்து இதற்கு ஒரு முடிவு சொல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டு ‘என்ன நான் சொல்வது சரிதானே?” என்று கேட்டு உறுதி படுத்திக் கொள்வார். என்னை நானே ஜிப்பா அணிந்த மிராசுதாராக கற்பனை செய்து மகிழ்ந்துக் கொள்வேன். முடிக்கும் போது “இனி நாம் அடுத்த விழாவில் கூ..டுவோமே?” என்று சொல்வது அழகாக இருக்கும்.


எது எப்படியோ, துணிந்து நான் பட்ட அவஸ்தையை (மறுபடியும் ஒரு வடமொழிச் சொல் வந்து விழுத்து விட்டது) ஏதோ ஒரு மொழியில் அல்லது பாஷையில் வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வது என முடிவு செய்து விட்டேன்.


இந்த அத்னான் சாமியை நினைத்தாலே எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. அடிக்கடி தொலைக்காட்சி வழியே புகுந்து எங்கள் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணி போய் விடுகிறார்.


“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிவிட்டார் பாத்தீங்களா? நீங்களும்தான் இருக்கீங்களே?” கொஞ்ச நாட்களாகவே என் மனைவியின் உபத்திரவம் தாங்க முடியாமல் போய்விட்டது.


அந்த சாமியைப் போல் நானும் இளைத்து தொலைக்க வேண்டுமாம். என் மனைவி பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள். நம்மை ஜாலியாகவே இருக்க விட மாட்டர்கள் போலிருக்கிறதே. “Marriage is not a word. It’s a sentence” என்று மொழிந்த வாய்க்கு சர்க்கரையை அள்ளிப் போட வேண்டும்.


என்னை என் மனைவி டாக்டரிடம் ‘தர தர’ வென்று இழுத்துக் கொண்டுப் போக, வேண்டா வெறுப்பாக கிளீனிக்குக்குள் நுழைந்தேன். என்னை சோதித்துப் பார்த்தது ஒரு பெண் டாக்டர். வெறுப்பு கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. வழக்கப்படி ‘ஹி.. ஹி..’ என்று அசடு வழிய தைரியம் வரவில்லை; கூடவே என் மனைவி இருந்ததால்.


ஸ்டெதாஸ்கோப்பை (தமிழில் இதற்குப் பெயர் மார்பாய்வியாம். பெயர் ஒரு மாதிரியாக இருந்ததால், இதனை நான் பயன் படுத்தவில்லை. தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்) முதுகில் வைத்து நன்றாக மூச்சை இழுத்து இழுத்து விடச் சொன்னார். “உ..ம் இன்னும் நன்றாக இழுத்து விடுங்க” என்று அன்பாணை விடுத்தார். “இதுக்கு மேல் மூச்சை விட்டால் நான் பரலோகத்திற்குச் சென்று விடுவேன்” என்றேன். சிரித்துக் கொண்டார். பரவாயில்லையே.. டாக்டர்கள்கூட அழகாக சிரிக்கிறார்களே?


“யுவர் மெயின் ப்ராப்ளம் இஸ் ஓபிசிட்டி” என்றார். பப்ளிசிட்டி, எலக்ட்ரிசிட்டி, மெட்ராஸ் சிட்டி - இவைகள் தெரியும். ஏன் ஏ.பி.சி.டி. கூட நன்றாகத் தெரியும். இது என்ன ஓபிசிட்டி (Obesity)? புரியாமல் போனதும் நல்லதற்கே. டாக்டரே அவருடைய கொஞ்சும் தமிழில் சற்று விளக்கமாக புரிய வைத்தார். கேட்பதற்கு மனதுக்கு இதமாக இருந்தது.


“தெனிக்கும் 2 கிலோ மீட்டராவது வெறும் வவுத்திலே நீங்கோ நடக்கணும்” என்றார் டாக்டர். “யார் வயித்திலே டாக்டர்?” என்று கேட்க வேண்டும் போலிருந்தது. சீரியஸான இடத்தில் தமாஷ் பண்ணக் கூடாது என்று என்னை நானே கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்.


தினமும் 2 கிலோமீட்டர் என்ற கணக்கில் நடந்து வீட்டிற்கு திரும்ப வராமல் அப்படியே காசிபக்கம் போகாலாமா என்று கூட நினைத்தேன். அந்த அளவுக்கு “உடம்பை குறை, உடம்பைக் குறை” என்று ஒரு டார்ச்சர்.


உண்மைதான். படிமீது ஏறும்போதெல்லாம் மூச்சிரைக்கத்தான் செய்கிறது. கண்ணாடியில் என் மேனியை பார்த்தபோது ‘மடிப்பு அம்சா’ போன்று வயிற்றில் எக்ஸ்ட்ரா சுருக்கங்களும் தெரிந்தன.


இதில் வேடிக்கை என்னவென்றால் உடம்பு இளைப்பதற்காக நான் ஏற்கனவே Tread Mill (கால் மிதியாலை) வாங்கிப் போட்டிருந்தேன். அது ஒரு மூலையில் ‘கைப்படாத ரோஜாவாக’ காட்சியளித்தது.


சில வணிக வளாகத்தில் “இன்று கடன் கிடையாது” என்று எழுதி வைத்திருப்பார்கள். இன்றுதானே கிடையாது என்று அடுத்த நாள் வந்து பார்த்தோமானால் அப்பொழுதும் அதே வாசகம் கண்ணில் படும்.


ஒவ்வொரு முறையும் என் மனைவி வற்புறுத்தும்போதும் “நாளை முதல் நான் நடக்கிறேனே?” என்று கெஞ்சிக் கூத்தாடி சமாளித்து விடுவேன். Tread Mill-ல் நடப்பதற்கு பதிலாக அந்த நேரத்தில் கணினி முன் அமர்ந்து “Thread” போடலாமே என்றுதான். வேறென்ன?


இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்று எண்ணி அன்று முதல் நடந்தே தீருவது என்று முடிவு செய்து விட்டேன். அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டு, ஜாகிங் ஷூவை அணிந்துக் கொண்டுதான் நடக்க வேண்டுமாம். இதென்ன பெரிய வம்பாக போய்விட்டது என்று நினைத்துக் கொண்டேன்.


உபகரணங்களை அணித்துக் கொண்டு கண்ணாடி முன் நின்று மீண்டும் ஒரு பார்வை பார்த்தேன், கண்றாவியாக இருந்தது. பாலச்சந்தர் படத்தில் வரும் அனுமந்துவைப் போலிருந்தது. கையில் ஒரு லாலிபாப்பையும் (அதுதாங்க குச்சிமுட்டாய்) கொடுத்து விட்டால் சுத்தம்… போங்க.


மிதியாலையில் ஏறி லேசாக ஓட ஆரம்பித்தேன். சிவாஜி பேசிய வசனம்தான் நினைவில் வந்தது. ‘ஓடினேன்; ஓடினேன், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’. கலைஞரும் மிதியாலையில் நடந்துக் கொண்டேதான் இந்த வசனத்தை எழுதியிருப்பாரோ?


கலைஞர் தினமும் காலையில் எழுந்து ‘வாக்கிங்’ போவதாக கேள்வி. ஒரு மேடையில் பேசும்போது விவேக் கூட இதனை அழகான பாணியில் சொன்னார். “ஒரு சூரியன் எழுந்திருக்கும் முன்பே இன்னொரு சூரியன் எழுந்து நடை பழக போகின்றது” என்று.


“ச்சே.. எழுந்து நடப்பதற்கு அலுப்பு பட்டுக் கொண்டு இப்படி ஒரு வாழைப்பழ சோம்பேறியாக இருக்கின்றோமே” என்று என்னை நானே நொந்துக் கொண்டேன். கலைஞர் மீது பொறாமைகூட வந்தது.


பரிட்சை ஹாலில் மாணவர்கள் காப்பியடிக்கிறார்களா என்று பார்வையிடுவதற்காக கண்காணிப்பாளர்கள் இருப்பார்களே அதுபோல என் மனைவி பக்கத்திலேயே காவல் புரிந்தாள். என்ன ஒன்று. கையில் பிரம்பு மிஸ்ஸிங். அவ்வளவுதான். ‘ஹா.. ஹா.. ஹா..’ லேசாக இளைத்தது.


“ஏம்பா! இந்த நிலைமை உனக்குத் தேவைதானா? என்று என் மனசாட்சியே என்னை கிண்டலடித்தது. இனி Junk Food சாப்பிடுவாயா? KFC பக்கம் போவாயா? என்று யாரோ பின்னாலிருந்து அதட்டுவது போலிருந்தது.


நாளையிலிந்து சாண்ட்விச்சில் எனக்கு Cheese-ம் கிடையாதாம். இல்லத்தரசி நினைத்து நினைத்து புதிய சட்டம் போட்டுக் கொண்டிருந்தாள். “ஏ சீஸ் படிஹே மஸ்த் மஸ்த்” என்று cheese-ன் மகிமையை மனதுக்குள் பாடிக் கொண்டேன். இன்னும் என்னென்ன சுவையான அயிட்டங்கள் போகப்போக நம் மெனுவிலிருந்து கட் ஆகுமோ தெரியாது.


“ஹா,, ஹா.. ஹா..” திருச்சி கல்லூரியில் படித்த காலத்தில் வெங்கடேஸ்வரா கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் பார்த்து விட்ட வந்த சமயத்தில் நாய் ஒன்று துரத்திய போது இப்படிதான் எனக்கு வேர்த்து விறுவிறுத்தது.


மிதியாலையிலிருந்து இறங்கலாம் என்று ஆயத்தமாகையில் அதெல்லாம் கிடையாது வெறும் அரை கிலோ மீட்டர்தான் ஆகியிருக்கிறது என்று சட்டாம் பிள்ளை போல் பேசினாள். 200 கலோரியாவது எரிக்க வேண்டும் என்றாள். கண்ணகி மதுரையை எரிப்பது போலிருந்தது அவள் பார்வை.


நடக்கும்போதும் கவிதைதான் என் நினைவில் நிழாலாடிக் கொண்டிருந்தது. முந்தைய தினம் உணவகத்தில் சிக்கன் டிக்கா சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலும் இதேபோன்றுதான் ஒரு கவிதை பிறந்தது.


“இங்கு வளைகுடா நாட்டில்

தினந்தோறும் தைப்பூசம் திருவிழாதான்

அலகு குத்திக் கொள்ளும் சிக்கன் டிக்கா”


என்று ‘பண்புடன்’ குழுமத்தில் ஒரு கவிதை வடித்திருந்தேன். “உக்காந்துதான் யோசிப்பீங்களோ?” என்று ஒரு நண்பரும், “இது ‘அய்யோ..கூ’ ரகமா என்று வேறொரு நண்பரும் கலாய்த்திருந்தார்கள்.


கவிதை சிந்தனையை கலைந்து விட்டு ‘கருமமே கண்ணாக’ வேக வேகமாக நடந்து கொண்டிருந்தேன். இந்த பாழாய்ப் போன சிந்தனை எங்கு போனாலும் நம்மை விட மாட்டேன் என்கிறதே. என்ன பண்ணுவது?


கவிஞர் வைரமுத்துவின் மேல் கூட எனக்கு தீராத கோபம். “ஊசி போன்று உடம்பிருந்தால் தேவையில்லை பார்மஸி” என்று திருவாய் மலர்ந்தருளியவர் அவர்தானே? ‘ஊசி’ போன்று இருந்தால்தான் ‘தையல்’ விரும்புவாள் போல் தெரிகிறது. அப்படிப் பார்த்தால் தயிர்வடை தேசிகருக்குத்தான் அதிக அளவில் ‘கேர்ள் பிரண்ட்ஸ்’ இருந்திருக்க வேண்டும்.


கவிஞர் வைரமுத்துவின் கூற்றில் உண்மை இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பார்மஸிக்கு வருபவர்களை நோட்டம் விட்டால் குண்டாக இருப்பவர்களை விட வத்தலும் சொத்தலுமாக இருப்பவர்கள்தான் அதிகமாக மருந்து வாங்க வருகிறார்கள்.


ஒருவன் குண்டாக இருந்தால் இவர்களுக்கு எவ்வளவு இளக்காரம் பாருங்கள். அடாவடித்தனம் புரியும் போக்கிரிகள் ஒல்லியாக இருந்தால் கூட அவர்களுக்கு இந்த பத்திரிக்கைக்காரர்கள் வைத்திருக்கும் பெயர் ‘குண்டர்கள்’. இது என்ன நியாயம்?


ஆட்களை காலி பண்ணுவதற்கு அமெரிக்காகாரன் ஒரு ஆயுதத்தை கண்டு பிடித்து வைத்திருந்தாலும் அதற்குப் பெயர் ‘குண்டு’. ‘குண்டர்கள் சட்டம்’ என்ற ஒரு ஒரு சட்டத்தை தயார் செய்து வைத்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டாலும் அதற்குப் பெயர் குண்டு. ஹிரோஷிமா மீது போட்டாலும் அதற்குப் பெயர் குண்டு.


வாயில்லா ஜீவன்களுக்காகக் கூட ஜீவகாருண்யச் சங்கம் இருக்கின்றது. கொஞ்சம் சதை போட்ட மனிதர்களுக்காக வேண்டி எந்த ஒரு சங்கமும் இல்லாதது வருத்தத்திற்குரிய விஷயம்தான்.


அண்மையில் துபாய் சென்றிருந்தபோது எழுத்தாளர் ஆபிதீனைச் சந்தித்தேன். “தொப்பையை கொஞ்சம் குறையுங்கள்” என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். “வளைகுடாவிற்கு வந்த பிறகு அறிவைத்தான் வளர்க்க முடியவில்லை. இதையாவது வளர்க்கிறேனே?” என்று சொன்னேன். அவர் முகம் அஷ்ட கோணலாய் மாறியது. “போயும் போயும் இந்த மனுஷனுக்கு போய் அட்வைஸ் பண்ணினேனே.. எம்புத்தியை .. ..” என்று நினைத்திருப்பார் போலும்.


ஒருபிடி சதை அதிகமாக ஆனதும் அவரவர் கூறும் ஆலோசனைகள் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்படி ஆகும் என்று முன்னமே தெரிந்திருந்தால் நான் ஒல்லியாகவே இருந்து தொலைந்திருப்பேன்.


“எதுக்கும் ஒரு தடவை கொலஸ்ட்ரால் செக் பண்ணிக்குங்க. இப்படித்தான் என் நண்பர் ஒருவர் கவனிக்காம விட்டுப்புட்டார். கடைசியிலே என்ன ஆச்சு தெரியுமா?” என் நண்பர் ஒருவர் சொல்லி முடிப்பதற்கு முன்பே அந்த இடத்தை நான் காலி பண்ணி விட்டேன். இது மாதிரி நம்மை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே பிறவி எடுத்து வந்த பிரகஸ்பதிகள் ஊரில் பல பேர் இருக்கிறார்கள்.


ஹைதராபாத் போயிருந்தபோது என் மனைவி எனக்குத் தெரியாமலேயே ஒரு DVD வாங்கி வைத்திருந்திருக்கிறாள். பாபா ராம் தேவ் நடத்தும் யோகா பயிற்சி அது. ஜாலியாக திருவள்ளுவர் மாதிரி சம்மணம் கொட்டி அமர்ந்துக் கொண்டு வேகமாக இருமுவது போல் வாயிலிருந்து மூச்சை “உ..ய்…ங்..” என்று வேகமாக விடவேண்டும். வாக்கிங் போவதைக் காட்டிலும் இது சுலபமாகத்தான் இருந்தது. உட்கார்ந்துக் கொண்டே ஏதாவது வேலை பாருங்கள் என்று சொன்னால் அது நமக்கு வசதிதானே? கையைக் காலை தூக்குவதை தவிர மற்ற எதுவாக இருந்தாலும் உடனே நான் செய்து விடுவேன்.


“இந்த பயிற்சிக்கு பேரு என்ன தெரியுமா?” என்று மனைவி கேட்டாள். “தெரியாது” என்று உதட்டை பிதுக்கினேன். “கபால் பாரதி” என்று விளக்கினாள். “எனக்கு கபால் பாரதியைத் தெரியாது. சுப்பிரமணிய பாரதியைத்தான் தெரியும்” என்றேன். கோபக்கனல் தெரித்தது. அதே கண்ணகி பார்வை. “உங்களையெல்லாம் திருத்தவே முடியாது” என்று சொல்லிவிட்டு விருட்டென்று சென்று விட்டாள்.


அரபி நண்பர் ஒருவர் அட்வைஸ் கொடுத்தார். சூரியகாந்தி விதையைச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கொழுப்புச் சத்தை எல்லாம் அது உறிஞ்சி விடுமாம். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது நினைவில் வந்தது. இனிமேல் “சூரியகாந்தி” என்று சொல்லக் கூடாதாம். அது வடமொழிச் சொல்லாம். “கதிர் வணங்கி” என்றுதான் சொல்ல வேண்டுமாம்.


இப்படித்தான் ஒருமுறை நண்பர் சரவணன் “இனிமேல் நீங்கள் சுத்தத் தமிழில்தான் பேச வேண்டும்” என்று வரையறுத்தார். “சுத்தத்தமிழ் என்று சொல்வதே தவறு. தூயதமிழ் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உங்களை திருத்திக் கொள்ளுங்கள். பிறகு என்னைத் திருத்தலாம்” என்று கடுப்படித்து அனுப்பினேன்.


தமிழில் பேசிப் பழகுவதில் தப்பே இல்லை. எதார்த்தமாக இருப்பதிலே எத்தனை சங்கடங்களை சந்திக்க நேருகிறது பாருங்கள்.


“யாமறிந்த மொழிகளிலோ தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்”


என்று பாடிய பாட்டுக்கோர் புலவன் மகாகவி பாரதியின் கொள்ளுப்பேத்திக்குத் தமிழ் மொழி தெரியாதாம். அண்மையில்தான் படித்தேன். பாரதியின் சந்ததிக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து கண்ணீர் வடித்தேன்.


குண்டாக இருப்பவர்களைக் கண்டால் என்னையறியாமலேயே ஒரு நட்புணர்வு ஏற்படுகிறது. ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கு இயற்கையிலேயே ஒரு நகைச்சுவை உணர்வு பொதிந்திருப்பதை நாம் காண முடிகிறது. எப்பொழுதும் சிரித்த முகமாகவே இருப்பார்கள்.


வின்ஸ்டன் சர்ச்சில் மீது அவருடைய நகைச்சுவை உணர்வுக்காகவே அவர் மீது எனக்கு ஒரு ஈடுபாடு. அவரும் பிந்துகோஷ் கேஸ்தான்.


இன்னொரு நண்பர் “எதற்கும் நீங்க பத்மாசனம் ட்ரை பண்ணி பாருங்க” என்று அறிவுரை சொன்னார். “யாரு? பத்மா சுப்பிரமணியமா?” என்று கேட்டேன். அன்றிலிருந்து எனக்கு அட்வைஸ் பண்ணவே அவருக்கு பயம்.


இப்படி ஆளாளுக்கு அறிவுரை பண்ணத் தொடங்கியதிலிருந்து எனக்கு ஒரு நல்லது நடக்க ஆரம்பித்து விட்டது. எப்படியும் இளைத்தே தீர வேண்டும் என்ற கவலை வந்து விட்டது.


“என்ன! தினமும் நடக்க ஆரம்பித்து விட்டீர்களா?” என்று கேட்காதீர்கள். இளைக்க வேண்டுமே என்ற கவலை பட்டே நான் இளைக்கத் தொடங்கி விட்டேன்.


அதிகமாக கவலைப் பட்டால் உடம்பு இளைத்து விடும் என்பது சரிதான் போலும்.

Read more...

பெயரிலி!

பெயரிலி!

லக்கிலுக்




வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார்.


முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெறியில் இருந்திருக்கிறார். எனவே ”குமரன்” என்ற பெயரை சூட்டியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் நின்றிருக்கிறார். பெரியப்பா அப்போது மடிப்பாக்கத்தில் கிருஷ்ணனுக்கு ஒரு பஜனைக்கோயில் கட்டியிருந்தார். எனவே கிருஷ்ணன் பெயரை தான் தன் தம்பி மகனுக்கு சூட்டவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார்.


மூன்றுத் தரப்பும் பெயர் சூட்டும் விழா அன்று முட்டிக்கொள்ள, யாரோ ஒரு நாட்டாமை பஞ்சாயத்து செய்து, கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவில் “மோகன கிருஷ்ண குமார்” என்று நாமகரணம் செய்துவிட்டிருக்கிறார். பட்டுத்துணி போர்த்தி என்னை அலங்கரிக்கப்பட்ட கூடையில் கிடத்தி 'காஞ்சிபுரம் சிறுணை மோகனகிருஷ்ணகுமார்' என்று பெற்றோர் மூன்று முறை அழைக்க வேண்டும். தான் வலியுறுத்திய பெயரோடு இன்னும் இரண்டும் பெயர் எக்ஸ்ட்ராவாக சேர்ந்துக் கொண்ட கோபத்தில் இருந்த அப்பா “குமரா, குமரா, குமரா” என்று தான் சூட்ட விரும்பிய பெயரை மட்டும் சுருக்கமாக அழைத்திருக்கிறார். பாவம் அம்மா தான் வினோதமான என் பெயரை மூன்று முறை கஷ்டப்பட்டு சொல்லி அழைத்தாராம்.


* - * - * - * - * - * - * - *


எல்.கே.ஜி. சேர்க்கும்போது எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்டெண்டனன்ஸில் பெயர் எழுதும்போது தான் முழுப்பெயரையும் எழுதமுடியாமல் மிஸ் அவதிப்பட்டார்.


”உன் பெயரை சுருக்கமா சொல்லு!”


சுருக்கம் என்ற வார்த்தைக்கு அப்போது பொருள் தெரியாத நான், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!” என்றேன்.


“அது புல் நேம். சுருக்கமா சொல்லு!”


மறுபடியும், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!”


எரிச்சலாகி, “சரி நானே சுருக்கிடறேன். இனிமே உன் பெயர் எல்.கிருஷ்ணகுமார்”


இந்த பெயர் எனக்கு கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.


* - * - * - * - * - * - * - *


கிருஷ்ணகுமார் என்று பள்ளியில் அறியப்பட்டாலும் கூட வீட்டிலும், தெருவிலும் அவரவர் வாய்க்கு வந்த பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். பள்ளியில் கூட ஆசிரியர்கள் தவிர்த்து கூட படிக்கும் மாணவ, மாணவிகள் ‘கிருஷ்ணா' என்று சொல்லியே அழைத்தார்கள். எனக்கு ‘கிருஷ்ணர்' அப்போது இஷ்டதெய்வம் என்பதால் ‘கிருஷ்ணா' பிடித்திருந்தது.


அப்பா மட்டும் கடைசி வரை ‘குமரா' என்றே அழைத்து வந்தார். அம்மாவும் சில நேரங்களில் ‘குமரா' என்றும் பல நேரங்களில் 'நைனீ' என்றும் அழைப்பார். ‘நைனீ' என்பதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை :-(


* - * - * - * - * - * - * - *


ரஜினி - கமல் உச்சத்தில் இருந்த நேரம் அது. தீவிர கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரசிகர்களோடு வாய்ச்சண்டையோடு, மல்யுத்தமும் போட்டிருக்கிறேன். சில நேரங்களில் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டு சில்மூக்கு உடைந்து ரத்தமும் வந்ததுண்டு. துரதிருஷ்டவசமாக கூட படித்தவர்களில், தெருப்பசங்களில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்.


ரஜினி நன்றாக சண்டை போடுவதால் ரஜினியை அவர்களுக்கு பிடித்திருந்தது. கமல் அட்டகாசமாக காதலித்ததால் கமலை எனக்கு பிடித்திருந்தது. ”கமல் கெட்டவன். பொம்பளைங்களை எல்லாம் கட்டிப் புடிக்கிறான். ரஜினி நல்லவன். அதனாலே தான் கெட்டவங்க கிட்டே சண்டையெல்லாம் போடுறான்” என்று பக்கத்து வீட்டு கோவாலு விளக்கம் அளித்தான். ”சண்டை போட்டதுக்கப்புறமா ரஜினி கூட பூர்ணிமாவை கட்டி புடிச்சிருக்காரே?” என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது.


ரஜினி ஆண்மையின் அடையாளமாக என் சக பசங்களுக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டுமே கமலை ஹீரோவாக பார்க்கமுடிந்தது ஏனென்று தெரியவில்லை. கமல் ரசிகன் என்பதால் என்னை ரஜினி வெறியர்கள் “கமலா” என்று கூப்பிட்டு வெறுப்பேற்றத் தொடங்கினார்கள். “கமல்” என்று கூப்பிட்டிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் “லா” சேர்த்து பெண்பாலில் கூப்பிட்டதால் கடுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு எனக்கு இந்த பட்டப்பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கோடைவிடுமுறையில் அம்மம்மா வீட்டுக்கு போய் வந்ததற்கு பிறகு பசங்களுக்கு இந்த பட்டப்பெயர் மறந்து தொலைத்ததால் தப்பித்தேன்.


* - * - * - * - * - * - * - *


கிருஷ்ணகுமார் என்ற பெயரில் கடைசியில் இருக்கும் ‘குமார்' என்ற பெயரை விளித்து கூட நிறையப் பேர் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் ஓக்கே என்றிருந்தாலும் ‘குமார்' குமாரு ஆகி காலச்சக்கரம் சுழன்று ”கொமாரு” ஆகியபோது வாழ்க்கையே வெறுத்துவிட்டது.


* - * - * - * - * - * - * - *


கல்யாணராமன் தான் என்னை “கிச்சா” என்று முதலில் அழைத்ததாக நினைவிருக்கிறது. அவன் அண்ணன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் ஆத்தில் கிருஷ்ணமூர்த்தியை சுருக்கி “கிச்சா” என்று தான் அழைப்பார்களாம். அதனாலேயே கிருஷ்ணகுமாரையும் “கிச்சா” ஆக்கிவிட்டான் கல்யாணம்.


கல்யாணத்தை தொடர்ந்து நிறைய பேர் ”கிச்சா”வென்று அழைக்க ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இன்றுவரை பலரும் என்னை ”கிச்சா” என்றுதான் அழைக்கிறார்கள். கிரேஸி மோகன் ஆனந்தவிகடனில் “கிச்சா” என்றொரு கோமாளி கேரக்டரை வைத்து சில காமெடிக்கதைகள் எழுத அந்தப் பெயர் ஏனோ சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. நான் பணிபுரியும் நிறுவனங்களில் மேலதிகாரிகள் கூட ”கிச்சா” என்று கூப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த ”கிருஷ்ணா” என்ற பெயரை புதியதாக அறிமுகமாகுபவர்கள் தான் அழைக்கிறார்கள். சில சந்திப்புகளுக்கு பின்னர் அவர்களும் “கிச்சா” என்று கூப்பிட தொடங்கிவிடுகிறார்கள்.


* - * - * - * - * - * - * - *


எட்டாவது வகுப்பு வரை எல்.கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட எனக்கு ஒன்பதாவது வகுப்பில் தமிழய்யா ரூபத்தில் சோதனை வந்தது. தனித்தமிழில் பெருத்த ஆர்வம் கொண்ட தமிழய்யா தான் வகுப்பாசிரியர். அட்டெண்டன்ஸ் அவரது பொறுப்பில் வந்தபோது வடமொழி சொற்களை நீக்கி தூயத்தமிழில் எல்லோரது பெயரையும் எழுதினார். அஷோக் “அசோகன்” ஆனான். சுரேஷ்குமார் “சுரேசுகுமார்” ஆனான். எல். கிருஷ்ணகுமாராகிய நான் “இல.கிருட்டிணகுமார்” ஆகி தொலைத்தேன்.


“இல.கிருட்டிணகுமார்” என்று ஆசிரியர் அழைக்கும்போது வேறு யாரையோ அழைக்கிறார் என்று பல நேரங்களில் சும்மா இருந்து கொட்டு வாங்கியது உண்டு. என் அட்டெண்டன்ஸ் பெயரை லேடீஸ் செக்‌ஷனிலும் (லேடிஸ் எல்லாம் ”பி” செக்‌ஷன், நாங்கள் “ஏ” செக்‌ஷன்) சரவணனோ யாரோ பரப்பிவிட, என்னை காதலிக்க திட்டமிட்டிருந்த குமுதா என் தமிழ்ப்பெயரை கேள்விப்பட்டு என்னை வெறுக்கத் தொடங்கினாள்.


* - * - * - * - * - * - * - *


ஒன்பதாவது படிக்கும்போது சந்தானகிருட்டிணன் தான் என்னை ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அவர்களது ஊர் பக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லி ”சீன்னா”, ”கான்னா” என்றெல்லாம் அழைப்பார்களாம். அதுபோலவே கிருஷ்ணகுமார் என்று அழைக்க சோம்பேறித்தனப்பட்டு ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அடுத்த இரு ஆண்டுகளுக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். காமோசோமாவாக இருந்ததால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத பெயர் அது.


* - * - * - * - * - * - * - *


பத்தாவது படித்தபோது பாடப்புத்தகங்களை சுமந்ததை விட காமிக்ஸ்களை சுமந்தது அதிகம். ஆர்.டி.முருகன், சுந்தரவேலு, சேதுராமன், ஏ.சுரேஷ்குமார் (கிளாஸில் மொத்தம் 4 சுரேசு) என்று என்னோடு நிறைய காமிக்ஸ் ஆர்வலர்கள் இருந்தார்கள். எக்சேஞ்ச் செய்துகொள்வது, யாரிடமாவது இருக்கும் காமிக்ஸை நான் வாங்கி ஜெராக்ஸ் செய்துகொள்வது என்று காமிக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நிறைய லஞ்ச் நேரத்தில் நடக்கும். புத்தகப் பையில் எப்போதும் பத்து காமிக்ஸ்களாவது இருந்த காலக்கட்டம் அது.


கொஞ்சம் ஒல்லியாக இருந்ததால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது. இந்த ‘ஒல்லி' குறைப்பாடை சரிசெய்ய எதையுமே கொஞ்சம் வேகமாகவும், ஸ்டைலாகவும் வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தேன். படிக்கட்டு ஏறும்போது ரெண்டு படிக்கட்டு தாண்டி, தாண்டி குரங்கு மாதிரி வேகமாக ஓடுவேன். நண்பர்களோடு சேர்ந்து நடக்கவே மாட்டேன், ஓட்டம் தான். எல்லாருக்கும் முன்பு ஓடிப்போய் நின்றுகொண்டு அவர்கள் வரும்வரை காத்திருப்பேன். சைக்கிளை வேகமாக கட்டு கொடுத்து, கட்டு கொடுத்து ஓட்டுவேன்.


கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.


* - * - * - * - * - * - * - *


மறக்கப்பட்ட இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. பல பெயர்களில் அழைக்கப்பட்டு விட்டதால் இந்தப் பெயர்களில் ஏதேனும் ஒன்று பொது இடங்களில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் என்னை தான் அழைக்கிறார்களோ என்று ஒருகணம் திரும்பி ஏமாந்து விடுவேன். பலமுறை ஏமாந்தப் பின்னர் இப்போதெல்லாம் என்னையே யாராவது கூப்பிட்டால் கூட “வேற யாரையோ கூப்பிடறாங்க” என்று நினைத்து விடுகிறேன். அக்கப்போர் செய்து பெருசுகள் எனக்கு வைத்த நீளமான பெயரால் எந்த பிரயோசனமும் இல்லை. அந்தப் பெயரை வைத்து யாரும் அழைத்ததுமில்லை. உண்மையில் அந்தப் பெயரால் அஞ்சு காசுக்கும் பிரயோசனமில்லை என்பதே நிதர்சனம்.


”பேர் எடுக்கணும், பேர் எடுக்கணும்” என்பார்கள். எவ்வளவோ பேர் எடுத்துவிட்டேன். இன்னமும் எவ்வளவு பேர் தான் எடுப்பேனோ தெரியவில்லை. இத்தனை பேர் இருப்பதால் உனக்கு என்ன தொல்லை என்று கேட்கிறீர்களா? சில நேரங்களில் யாராவது ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்கும்போது சட்டென்று விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும்போது நான் படும் அவமானம் உங்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும்!

Read more...

அகரம்..அமுதாவின் வெண்பாக்கள்!

அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே


அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச


ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை


நிறைவேற்றித் தந்தீரா நீர்?




புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்!


குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம்


மதுவிலக்கை ரத்துசெயத் தானா? இதற்கும்


புதுவிதியைக் கண்டு புகுத்து!

Read more...

எங்கேயோ கேட்ட கடி

--------------------------------------------------------------------------------

காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை

அது கரையுமே



--------------------------------------------------------------------------------

டைப்ரைட்டிங் மெஷின் பெண்பால்டா

எப்படிடா

ரிப்பன் கட்டியிருக்கு பாரு



--------------------------------------------------------------------------------

தயிர் ஏன் வெள்ளையாக இருக்கிறது

தோய்க்கிறதாலே



--------------------------------------------------------------------------------

காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுகிறார்கள்

அவர்கள் 'மெய் 'மறந்து காதலிப்பதால்



--------------------------------------------------------------------------------

போட்டாகிராபி தொழில் செய்ய முக்கியமானது எது ? திறமையா அதிர்ஷ்டமா ?

இரண்டும் இல்லை, கேமரா.



--------------------------------------------------------------------------------

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா ?

ம்....

ஆ.. இதுகூட தெரியாம இருக்க பாரு.. ரயில் ஊருக்குள்ளாற போயிரக்கூடாதுன்னுதான்



--------------------------------------------------------------------------------

நீயும் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு குண்டூசி தொழிற்சாலை துவங்கறதா இருந்தீங்களே என்னாச்சி

அவங்க பின் வாங்கிட்டாங்க



--------------------------------------------------------------------------------

தெருவில போற எல்லோரும் அந்த ஆள்கிட்ட டைம் கேட்டுட்டு போறாங்களே ஏன் ?

அவர் வாட்ச்மேனாம்



--------------------------------------------------------------------------------

எல்லாப் பணத்திலயும் ஏன் காந்தி சிரித்துக்கொண்டே இருக்கிறார் ?

அழுதா பணம் நனைஞ்சி போயிடுமே



--------------------------------------------------------------------------------

இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா ?

அது காட்டாது, நாம் தான் பார்க்கவேண்டும்.



--------------------------------------------------------------------------------

தொலைபேசியில்: டாக்டர்! என் கணவர் ஒரு பேனாவை விழுங்கிவிட்டார்.

இன்னும் சில நிமிஷங்களில் வந்துவிடுகிறேன்

அதுவரை நான் என்ன செய்வது ?

பென்ஸிலை உபயோகியுங்கள்.



--------------------------------------------------------------------------------

அரசியல்வாதிகளுக்குப் பிடிக்காத பிஸ்கட்

ட்ரூ பிஸ்கட்



--------------------------------------------------------------------------------

நாய் வியாபாரம் பண்ணீங்களே இப்ப எப்படியிருக்கு வியாபாரம்

கையை கடிச்சிருச்சி



--------------------------------------------------------------------------------

படிச்சவனா இருக்க, நீயே ரூபா நோட்டு அடிக்கலாமா ?

நான் சுயநிதிக் கல்லூரியில் படிச்சவன்சார்



--------------------------------------------------------------------------------

நீண்டநாள் உயிரோடுவாழ வழி என்ன ?

வேறென்ன சாகாமல் இருப்பதுதான்



--------------------------------------------------------------------------------

நாலுநாளா எனக்குத் தாங்கமுடியாத இருமல்..

பெஸ்ட் ஆஃப் லொக்



--------------------------------------------------------------------------------

எலெக்ட்ரிக் ஒயர்ல மூணு எறும்பு போச்சி. ரெண்டு எறும்பு ஷாக் அடிச்சி செத்துப் போச்சி. ஒண்ணு மட்டும் சாகலை. ஏன்

அது கட்டை எறும்பு



--------------------------------------------------------------------------------

மேட்டூர் நீர் மேல பத்திரிக்கைக்காரங்களுக்கு கோபமா என்ன ?

ஏன் ?

மேட்டூர் நீர் மட்டம்னு போடறாங்க தினமும்.



--------------------------------------------------------------------------------



--------------------------------------------------------------------------------

Read more...

அரசியல் : ஒரு விளக்கம்

ஒரே ஒரு ஊரில் ஒரு சின்னப்பையன் தன்னுடைய அப்பாவிடம் சென்று 'அரசியல் என்றால் என்ன அப்பா ' என்று கேட்டான்.


அப்பா சொன்னார். 'பையா. இப்படி உனக்கு விளக்க முயற்சிக்கிறேன். நான் தான் இந்த குடும்பத்துக்கு சம்பாதித்து, சாப்பாடு கொண்டுவருகிறவன். என்னை முதலாளி என்று கூப்பிடலாம். உன்னுடைய அம்மா, நான் கொண்டுவரும் பணத்தை நிர்வகிக்கிறாள். ஆகவே அவளை அரசாங்கம் என்று அழைக்கலாம். நாங்கள் உங்களைக் கவனித்துக்கொள்ள இருக்கிறோம். நீயும் உன் தம்பியும் நம் பொதுமக்கள். நம் வீட்டு வேலைக்காரியை உழைக்கும் வர்க்கம் என்று அழைக்கலாம். உன் தம்பியை எதிர்காலம் என்று கூப்பிடலாம். இப்படி நான் சொன்னதைப் பற்றி .. புரிகிறதா என்று யோசித்துப்பார் ' என்றார் அப்பா


பையன் அப்பா சொன்னதை பற்றி யோசித்துக்கொண்டே தூங்கப்போனான்.


இரவில் தம்பி அழும் குரல் கேட்டு எழுந்தான் பையன். தம்பி டவுசரில் மலங்கழித்து, புரண்டு அழுக்காகக் கிடந்தான். அப்பா அம்மாவின் அறைக்குச் சென்று எழுப்ப முயற்சி செய்தான். அம்மா ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். எழுப்ப வேண்டாம் என்று வேலைக்காரியின் அறையைத் தட்டினான். கதவு மூடியிருந்ததால், சாவி ஓட்டை வழியாகப் பார்த்தான். அப்பா வேலைக்காரியுடன் எசகு பிசகாகப் படுத்திருந்தார். எழுந்து திரும்பி தன் படுக்கைக் சென்று தூங்கினான்.


அடுத்த நாள் காலையில் அப்பாவைப் பார்த்து, 'அப்பா எனக்கு அரசியல் புரிந்து விட்டது ' என்றான்


' அப்பா, 'அடடே .. நல்ல பையன். உன்னுடைய வார்த்தைகளிலேயே உனக்கு அரசியல் பற்றி என்ன புரிந்தது என்று சொல் பார்க்கலாம் ' என்றார்.


பையன் சொன்னான். 'முதலாளி உழைக்கும் வர்க்கத்தை பலாத்காரம் செய்து அனுபவத்துக் கொண்டிருக்கும்போது, அரசாங்கம் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் உதாசீனம் செய்யப்படுகிறார்கள். எதிர்காலம் ஒரே மலமாக இருக்கிறது.. இதுதான் அரசியல் '


***






Copyright:Thinnai.com 

Read more...

அரசாங்கங்களை ஒப்பிட ஒரு சிறிய கையேடு

நிலப்பிரபுத்துவம் : உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பண்ணையார் எல்லாப் பாலையும் எடுத்துக்கொள்கிறார்.


ராணுவ பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் உன் பசுக்களை எடுத்துக்கொண்டு உன்னை ராணுவத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கிறது.


கிளப்டோகிராடிக் பாஸிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொண்டு உன்னைச் சுட்டுக் கொல்கிறது


நைஜீரியா ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. உன்னைச் சுட்டுக் கொல்கிறது. பசுக்களை அரசாங்கம் ஸ்விட்சர்லாந்துக்கு அனுப்புகிறது.


சோஷலிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் இரண்டையும் எடுத்துக்கொள்கிறது. அவைகளை கவனித்துக்கொள்ள உன்னை வேலைக்கு வைத்துக்கொள்கிறது. பாலை உன்னிடம் நல்ல விலைக்கு விற்கிறது.


யுடோபியன் கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளை கவனித்துக்கொள்ள உன் பக்கத்து வீட்டுக்காரர்கள் உனக்கு உதவுகிறார்கள். நீங்கள் எல்லோரும் பாலை பங்கிட்டுக்கொள்கிறீர்கள்.


லெனினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும். அரசாங்கம் எல்லாப்பாலையும் எடுத்துக்கொள்கிறது.


மாவோயிஸம், ஸ்டாலினிஸ கம்யூனிஸம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அரசாங்கம் அவைகளை எடுத்துக்கொள்கிறது. பிறகு பசுக்கள் இருந்ததையே மறுக்கிறது. அரசாங்கம் பாலை தடை செய்கிறது.


சுத்தமான ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் முடிவு செய்வார்கள்


பிரதிநிதித்துவ ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. பால் யாருக்குக் கிடைக்கும் என்று உன் பக்கத்துவீட்டுக்காரர்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆள் நிர்ணயம் செய்வான்.


சிங்கப்பூர் ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அபார்ட்மெண்ட்டுக்குள் இரண்டு விவசாய மிருகங்களை வைத்திருந்ததற்காக அரசாங்கம் உனக்கு அபராதம் விதிக்கிறது.


அமெரிக்க ஜனநாயகம்: அரசியல்வாதிகள், அவர்களை தேர்ந்தெடுத்தால் உனக்கு இரண்டு பசுக்கள் தருவதாக வாக்களிக்கிறார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பசு யாருக்குக் கிடைக்கும் என்பதற்கான தகுதிகளை நிர்ணயம் செய்வார்கள். அரசியல்வாதிகளின் தேர்தல் செலவுக்கு அதிகப் பணம் கொடுத்தவர்கள் மட்டுமே தகுதி போல நிர்ணயம் நடக்கும். பசுவை ஒப்பந்தத்தில் இழுத்துவிட்டதால், உன் மீது விலங்குகள் உரிமைகள் பற்றி அக்கறைப்படும் இயக்கங்கள், பசுக்களின் சார்பாக, வழக்கு தொடுக்கும். இதே வேளையில் பாலின் விலை ஒரேயடியாக ஏறிப்போய், நீ கோககோலா குடிக்க ஆரம்பித்து விடுவாய்.


இங்கிலாந்து ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு ஆட்டு மூளையைச் சாப்பிடக் கொடுக்கிறாய். பசுக்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லை.


ஐரோப்பிய ஜனநாயகம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ அவைகளுக்கு என்ன கொடுக்கலாம், எப்போது பால் கறக்கலாம் என்று நிர்ணயம் செய்கிறது. அப்புறம் நீ அவைகளை பால் கறக்காமல் இருக்க உனக்குப் பணம் கொடுக்கிறது. பிறகு இரண்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றை சுட்டுக்கொல்கிறது, ஒன்றை பால் கறக்கிறது. பாலை கடலில் கொட்டுகிறது. பிறகு ஏன் பசுக்கள் காணாமல் போயின என்று இரண்டு படிவங்கள் முழுமையாக எழுதி அரசாங்கத்திடம் கொடுக்க வேண்டும்.


லெய்ஸஸ் ஃபேர் முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. நீ ஒன்றை விற்று காளை மாடு வாங்குகிறாய்


நவீன உலக அமைப்பு முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. ஒரு பன்னாட்டு நிறுவனம் அதில் முதலீடு செய்கிறது, பாலை மிகவும் குறைந்த விலையில் உன்னிடம் இருந்து வாங்குகிறது. பிறகு அதை இன்னொரு நாட்டுக்கு ஏற்றுமதி செய்து பதனப்படுத்துகிறது. நீ தயிர் வாங்க ஏராளமாக காசு கொடுக்க வேண்டும் ஏனெனில், பால் தொழிற்சாலை கூட்டமைப்பும், பால் தொழிலாளர்கள் யூனியனும் இறக்குமதி வரியை அதிகப்படுத்த போராடியிருப்பார்கள்.


ஹாங்காங் முதலாளித்துவம்: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அந்த மூன்று பசுக்களையும் உனது நிறுவனத்துக்கு விற்கிறாய். அதற்கு உன் மச்சான் ஆரம்பித்த வங்கியை கொடுக்கும் பணத்தை வைத்துக்கொண்டு, கடன்/பங்குகள் மாற்றி உன் நான்கு பசுக்களையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறாய். அத்தோடு கூட ஐந்து பசுக்களையும் வைத்துக்கொள்ள வரி விலக்கு கிடைக்கும். உன் ஆறு பசுக்களையும் பால்கறக்கும் உரிமைகளை ஒரு பனாமா கம்பெனி வழியாக கேய்மன் தீவுகளில் இருக்கும் ஒரு பேப்பர் கம்பெனிக்கு ரகசியமாக விற்று நீ பெரும்பான்மை பங்குகளுக்கு சொந்தக்காரனாக ஆகிறாய். ஏழு பசுக்களுக்குமான மொத்த உரிமைகளை மீண்டும் பழையக்கம்பெனிக்கே விற்கப்படுகிறது. கம்பெனியின் வருடாந்தர அறிக்கை கம்பெனிக்கு எட்டுபசுக்கள் வைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது என்றும் இன்னொரு பசு வைத்துக்கொள்ள ஆப்ஷன் கிடைக்கும் என்றும் அறிவிக்கிறது. இதே நேரத்தில் நீ உன்னிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் கெட்ட ஃபெங் சுயி (சீனத்து வாஸ்து சாஸ்திரம்) காரணமாக கொன்று விடுகிறாய்.


சவூதி அரேபியா: உன்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. அவைகளைப் பற்றி உனக்குக் கவலையில்லை. ஏனெனில், பங்களாதேஷிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு பெண்களை உனது பெட்ரோல் பணம் கொடுத்து வாங்கியாய் விட்டது.





Copyright:Thinnai.com 

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP