விமர்சனம் : ராவணன்

>> Thursday, June 17, 2010

நன்றி : http://www.thenaali.com/thenaali.aspx?A=2073


திரைக்கதை, இயக்கம்: மணி ரத்னம்


நடிப்பு: விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிருத்விராஜ், பிரபு, கார்த்திக், பிரியாமணி


இசை: ஏ.ஆர். ரஹ்மான்


ஒளிப்பதிவு : சந்தோஷ் சிவன்

--------------------------------------------------------------------------------


சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.


திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.


அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.


வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.


முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.


வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.


ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.


அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.


மணி ரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.

Read more...

About this Blog

Seguidores

    © படித்ததில் பிடித்தது உங்கள் பார்வைக்கு............ Friends Forever Template by Emporium Digital 2009

Back to TOP